`நெஞ்சுக்கு நீதி' படத்திற்கு இலவச டிக்கெட்: புரமோஷனில் மதுரை உடன் பிறப்புகள்!

By மு.அஹமது அலி

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாக உள்ள `நெஞ்சுக்கு நீதி' படத்திற்கு இலவச டிக்கெட் வழங்க இருப்பதாக மதுரையைச் சேர்ந்த திமுக உறுப்பினர் ஒருவர் சமூக வலைதளங்களில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பாலிவுட்டில் வெளியாகி வெற்றி பெற்ற 'ஆர்ட்டிக்கள்15' என்ற திரைப்படம் 'நெஞ்சுக்கு நீதி' என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. போனி கபூர் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் இந்த திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் உதயநிதி ஸ்டாலினுடன், தான்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர், சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படம் வரும் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரிவியூ தியேட்டரில் இப்படத்தை பார்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின், படத்தின் நாயகன் உதயநிதி ஸ்டாலின், இயக்குநர் அருண்ராஜா காமராஜ், தயாரிப்பாளர்கள் போனி கபூர், ராகுல் உள்ளிட்ட படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிலையில், கல்லூரி மாணவ- மாணவிகள் மற்றும் இளைஞர்களுக்கு இலவசமாக இப்படத்தினை காட்சிப்படுத்த இலவச டிக்கெட் கொடுக்க உள்ளதாக கூறி மதுரையை சேர்ந்த திமுக பிரமுகர் எஸ்.பாலா சோஷியல் மீடியாவில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், ‘இளைய சூரியன் நடிப்பில் சமூக அக்கறையுடன் உருவாகியுள்ள நெஞ்சுக்கு நீதி மே 20-ம் தேதி, மதுரை சோலைமலை திரையரங்கில், கல்லூரி மாணவ- மாணவிகள், இளைஞர்களுக்கு இலவசமாக திரையிடப்படுகிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE