குருஷேத்திரப் போர் முடிந்து 6000 ஆண்டுகளுக்குப் பிறகும், நம் காலத்தில் இருந்து 874 ஆண்டுகளுக்குப் பின், உலகில் எஞ்சியிருக்கும் கடைசி நகரமான காசியில், கங்கை வற்றிப் போய் அடிப்படைத் தேவைகளுக்கே மனிதர்கள் அல்லாடுகிறார்கள். தன்னைக் கடவுளாகக் கருதும் சுப்ரீம் யாஸ்கின் (கமல்ஹாசன்) தலைமையிலான ‘காம்ப்ளக்ஸ்’,பூமியின் அனைத்து வளங்களையும் உறிஞ்சிக்கொண்டதே இதற்குக் காரணம். கருவளம் மிக்க பெண்களை ‘காம்ப்ளக்ஸ்’க்குக் கடத்திச் சென்று அவர்களை செயற்கை முறையில் கருத்தரிக்க வைத்து, பின் யாஸ்கினின் ‘புராஜக்ட் கே’ என்னும் திட்டத்துக்காக அழிக்கிறார்கள். காசியில் வாழும் மக்களில் சிலர் காம்ப்ளக்ஸுக்குள் இடம்பிடிக்க, அடிமைகளைப் பிடித்துக் கொடுப்பது உள்ளிட்ட வேலைகளைச் செய்கிறார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர் பைரவா(பிரபாஸ்). இன்னொருபுறம் யாஸ்கின் குழுவிடமிருந்து மனித குலத்தை மீட்க சம்பாலா என்னும் பகுதியில் ரகசிய புரட்சிக் குழு செயல்படுகிறது. இந்நிலையில் காம்ப்ளக்ஸுக்கு அடிமையாக விற்கப்பட்ட சுமதி (தீபிகா படுகோன்) கருத்தரிக்கிறார். சம்பாலா உளவாளியின் உதவியுடன் அங்கிருந்து தப்பிக்கிறார்.
குருஷேத்திரப் போர் முடிவில் கிருஷ்ணரின் சாபத்தைப் பெற்று விமோசனத்துக்கு காத்திருக்கும் அஸ்வத்தாமா (அமிதாப் பச்சன்) சுமதி சுமக்கும் கருதான்இவ்வுலகைக் காக்கப் போகிறது என்பதைத் தெரிந்து அவரைப் பாதுகாத்து சம்பாலாவுக்கு அழைத்துச் செல்கிறார். சுமதியை யாஸ்கினிடம் ஒப்படைப்பதற்காக பைரவா, சம்பாலாவுக்கு வருகிறான். சுமதி காப்பாற்றப்பட்டாரா? யாஸ்கினின் நோக்கம் என்ன? பைரவா யார்? என்னும் பல கேள்விகளுக்கு விடை சொல்கிறது மீதிக் கதை.
நடிகை சாவித்திரியின் ‘பயோபிக்’கான ‘நடிகையர் திலகம்’ மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்த நாக் அஸ்வின், புராணம், அறிவியல் மிகுபுனைவு ஆகிய வகைமைகளைக் கலந்து ஹாலிவுட் பாணி கதையுடன் களம் இறங்கியிருக்கிறார். எதிர்கால உலகத்தை தன் அபாரமான கற்பனைத் திறனின் மூலம் பிரம்மாண்டமாக சிருஷ்டித்து அதற்குள் பார்வையாளர்களை கொண்டு செல்வதில் வெற்றிபெற்றிருக்கிறார். காட்சிகள் ஒவ்வொன்றிலும் புதிய கற்பனைகளையும் அறிவியல் ஜாலங்களையும் கோர்த்து ரசிக்க வைக்கிறார்.
பிரபாஸ் பாத்திரத்துக்கான அறிமுகக் காட்சிகள், அவருக்குத் துணையாக பேசும் புஜ்ஜி (குரல்- கீர்த்தி சுரேஷ்), வீட்டு உரிமையாளர் பிரம்மானந்தம் ஆகியோரை வைத்து பின்னப்பட்ட காட்சிகள், முதல் பாதியில் பொறுமையை சோதிக்கின்றன. பிரபாஸுக்கும் திஷா பதானிக்கும் இடையிலான காதல் காட்சிகளும் கவரவில்லை. படத்தில் வேறு சில துணைக் கதாபாத்திரங்கள் எதற்காக இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. ஒருவேளை இரண்டாம் பாகத்தில் அவர்களுக்கு முக்கியத்துவம் இருக்கலாம். இயக்குநர்கள் ராம்கோபால் வர்மா, எஸ்.எஸ்.ராஜமவுலி போன்றோரின் கவுரவத் தோற்றம் புன்னகை அரும்பச் செய்கின்றன.
» வெளியுறவுத் துறை செயலாளராக விக்ரம் மிஸ்ரி நியமனம்
» லாரி மீது வேன் மோதிய விபத்தில் கர்நாடகாவில் 15 பேர் உயிரிழப்பு
பிரபாஸின் ஆஜானுபாகுவான தோற்றம் கதாபாத்திரத்துக்குப் பொருந்துகிறது. ஆனால் அவர் கதாபாத்திரத்தின் நோக்கமும் பின்னணியும் குழப்பமாக இருப்பதால் உரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அஸ்வத்தாமா இப்படித்தான் இருப்பாரோ என்று நினைக்க வைக்கும் அளவுக்கு தனது நடிப்பால் அசத்தியிருக்கிறார் அமிதாப் பச்சன். இடைவேளைக்கு முன் ஒரு காட்சியிலும் இறுதிக் காட்சியிலும் மட்டும் வரும் கமல்ஹாசன், பிராஸ்தடிக் மேக் அப்பைத் தாண்டி தனது குரல் நடிப்பால் வியக்க வைக்கிறார். அதே நேரம் அவர் பல கொடுமைகளைச் செய்துகொண்டே மனிதர்கள் இயற்கையை சீரழிப்பது குறித்துப் பேசுவது ‘நீங்க நல்லவரா? கெட்டவரா?’ என்னும் வசனத்தை நினைவுபடுத்துகிறது.
தீபிகா படுகோன் அளவான நடிப்பைத் தந்து ரசிக்க வைக்கிறார். ஷோபனா, அன்னா பென், பசுபதி, சஸ்வதா சாட்டர்ஜி என பல நடிகர்கள் கொடுத்த வேலையைக் குறையின்றிச் செய்திருக்கிறார்கள்.
சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை சிறப்பு. ஜார்ஜே ஸ்டோஜில்கவிச் (Djordje Stojiljkovic) ஒளிப்பதிவு பிரம்மாண்டத்தை உணரச் செய்கிறது. புதிய உலகத்தை சித்தரித்திருப்பதில் கலை இயக்குநரின் பங்களிப்பும் பாராட்டுக்குரியது.
கதை, திரைக்கதையில் குறைகள் இருந்தாலும் ஒரு புதிய உலகத்தை சிருஷ்டித்து நம்மை அதனுள் இழுத்துச் சென்றிருக்கிற ‘கல்கி 2898 ஏ.டி’ படக் குழுவினரைப் பாராட்டலாம்.