எலக்சன் - ஒரு நிமிட திரை விமர்சனம் 

By KU BUREAU

கட்சிக்காக இளம் வயது முதல் பல ஆண்டுகளாக உழைத்தும் எந்தவித பதவியையும் அடையாமல் கடைக்கோடி தொண்டனாகவே காலத்தை கடத்தியவர் நல்லசிவம் (ஜார்ஜ் மரியான்). அவரது மகன் நடராசன் (விஜய்குமார்) அரசியலில் பெரிதாக ஆர்வம் இல்லாதவர்.

ஆனால், தங்கை கணவரின் தூண்டுதலால், தந்தையின் எதிர்ப்பையும் மீறி ஊராட்சித் தலைவர் தேர்தலில் நிற்கிறார். இதனால் சில உயிர்களும் போகின்றன. தடைகளைக் கடந்து தேர்தலில் நடராசன் வென்றாரா? - இதுதான் ‘எலக்சன்’ படத்தின் திரைக்கதை.

உள்ளாட்சி அரசியல் எந்த அளவுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் மக்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை முடிந்தவரை அழுத்தமாக சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் தமிழ். தொடக்கம் முதல் இறுதிவரை உள்ளாட்சி அரசியல் குறித்து தகவல்கள் நுணுக்கமாக பேசப்படுவது கதைக்குள் நம்மை ஒன்ற வைத்து விடுகிறது. காதல் காட்சிகளுக்கு அதீத நேரம் எடுத்து வீண்டித்திருக்கிறார்கள்.

விஜய்குமார் தேர்தலுக்கு தயாராவது தொடங்கி இடைவேளை வரையிலான காட்சிகள் போரடிக்காத வகையில் ஓரளவு சுவாரஸ்யமாகவே நகர்கின்றன. குறிப்பாக வாக்குகள் எண்ணப்படும் காட்சியும், அதனை தொடர்ந்து வரும் காட்சிகளும் விறுவிறுப்பு தருகின்றன. நீளமான வசனங்கள், ஸ்பீடு பிரேக்கர்களாய் வரும் பாடல்கள், திணிக்கப்பட்ட வில்லன், அவருக்கான காரணங்கள் படத்தின் மைனஸ்.

நாயகனாக விஜய்குமார் இயல்பான நடிப்பை வெளிப்படுத்த முயன்றிருக்கிறார். எனினும் பல இடங்களில் அவர் நடிக்க சிரமப்படுவது தெரிகிறது. ப்ரீத்தி அஸ்ரானிக்கு அழுத்தமான கதாபாத்திரம். அதற்கு தன்னால் முடிந்தவரை நியாயம் சேர்த்துள்ளார். ஹீரோவின் அப்பாவாக வரும் ஜார்ஜ் மரியான், மாமாவாக வரும் பாவெல் நவகீதன், திலீபன், நாச்சியாள் சுகந்தி என அனைவரும் சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளனர்.

கோவிந்த் வசந்தாவின் இசை பல இடங்களில் காட்சிகளை தூக்கி நிறுத்தவும், சில இடங்களில் காட்சிகளை மீறி துருத்திக் கொண்டும் இருக்கிறது. பாடல்கள் அனைத்தும் தேவையில்லாத ஆணி. மகேந்திரன் ஜெயராஜுவின் ஒளிப்பதிவில் குறையில்லை. சி.எஸ்.பிரேம்குமார் எடிட்டிங்கில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.

உள்ளாட்சி அமைப்புகளையும், அதன் அரசியலையும் நுணுக்கமாக பேசும் படம், தேவையற்ற திணிப்புகளை தவிர்த்திருந்தால் களம் சூடுபிடித்திருக்கும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE