திரை விமர்சனம்: ரயில்

By KU BUREAU

தென் தமிழகக் கிராமம் ஒன்றில் மனைவி செல்லம்மா (வைரமாலா), அப்பத்தாவுடன் வசிக்கிறான் மின்வட வேலைகள் தெரிந்த முத்தையா (குங்கும ராஜ்). நண்பன் வரதனுடன் (ரமேஷ் வைத்யா) சேர்ந்து குடித்துவிட்டுப் பொறுப்பின்றி திரிவதால் முத்தையாவுக்கு யாரும் வேலை தருவதில்லை.

தனக்கு வேலை கிடைக்காததற்கு வடமாநிலத் தொழிலாளர்கள்தான் காரணம் என்று நினைக்கிறான். அவனது குமைச்சலை ஊதி பெரிதாக்கும் வரதன், முத்தையா வீட்டில் வாடகைக்குக் குடியிருக்கும் வடமாநிலத் தொழிலாளி சுனிலை (பர்வேஸ் மக்ரூ) கொன்று விடலாம் எனத் தூண்டுகிறான். பிறகு என்ன நடக்கிறது என்பது கதை.

தனது வேலையை, வடமாநிலத் தொழிலாளர்கள் பறித்துக் கொள்வதாக நினைத்துக் கொள்ளும் முத்தையா கதாபாத்திரம், சுனிலுக்கும் தனது மனைவிக்குமான உறவைத் தவறாகப் புரிந்துகொள்வதால் அவன் மீதான வன்மம் அதிகரிப்பதாகக் காட்டப்படும் சித்தரிப்பு நம்பும்படியாக இல்லை.

வடமாநிலங்களிலிருந்து உதிரித் தொழிலாளர்கள், தமிழ்நாட்டில் வேலை தேடிக் குவிய என்ன கார ணம், உழைப்புக்குரிய ஊதியம் என்கிற வகையிலும், புலம்பெயர்ந்து உழைக்கும் இடத்தில் அவர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பது பற்றியும் திரைக்கதை பேச மறுத்துவிட்டது.

இரண்டாம் பாதி தொடக்கத்தில் நிகழும் முக்கிய சம்பவத்துக்குப் பிறகு வரும் காட்சிகள், தமிழ்நாட்டு மக்களின் ஈர உள்ளத்தைச் சித்தரிக்கின்றன. அவற்றின் நீளமும் பாடல் காட்சியுடன் கூடிய நாடகமும் வலிந்து திணிக்கப்பட்டதாக இருப்பதால் ஒன்ற முடியாமல் போகிறது.

நடிகர்கள் தேர்வும் அவர்கள் பங்களிப்பும் தரம். போதையில் வீழ்ந்து கிடந்தாலும் குழந்தைக்காக ஏங்குவது, நண்பனுடன் சேர்ந்துவிட்டால் எதையும் செய்ய முடியும் என கெத்து காட்டுவது, சுனிலை எதிரியாகப் பாவிப்பது என்று முத்தையா வாக வரும் குங்கும ராஜ் கவனிக்க வைக்கிறார். அவர் மனைவி யாக நடித்துள்ள வைரமாலா, சுனிலாக வரும் பர்வேஸ், முத்தையாவின் மாமனார் செந்தில் கோச்சடை, சுனிலின் மகள் தனிஷா ஆகியோர் நிறைவான நடிப்பால் கவர்கிறார்கள். நடிகராகவும் பாடலாசிரியராகவும் ரமேஷ் வைத்யா ஓகே. தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவும் எஸ்.ஜே.ஜனனியின் இசையும் படத்துக்கு வலிமை சேர்த்திருக்கின்றன. ‘பூ பூக்குது' பாடல் இளையராஜாவின் முந்தைய பாடல்களை நினைவூட்டுகிறது. நிகழ்நேர ஒலிப்பதிவுத் தொழில்நுட்பம் காட்சிகளின் உயிரோட்டத் தன்மையை உயர்த்துவதில் தனித்துத் தெரிகிறது.

நல்ல படைப்பு நோக்கத்துடன் தனது முதல் படத்தைத் தரவேண்டும் என்கிற பாஸ்கர் சக்தியின் முதல் முயற்சியில் பழுதுகள் இருந்தாலும் சொல்லப்பட வேண்டிய கதையை ஆர்ப்பாட்டம் இல்லாமல் சொல்வதால் மனதில் தடதடக்கிறது இந்த ரயில்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE