சொன்னதைச் செய்யும் ராட்சத ஈ!

By சாதனா

நீங்களும் உங்களுடைய நண்பரும் இணைந்து உல்லாசமாக சொகுசு காரை ஓட்டிக்கொண்டிருக்கிறீர்கள். திடீரென காரின் பின்புறத்திலிருந்து விசித்திரமான சத்தம் கேட்கிறது. காரை நிறுத்திவிட்டு பின்புறத்தைத் திருந்து பார்த்தால், ராட்சத ஈ ஒன்று சோர்வாக காரின் டிக்கியில் படத்துக்கிடக்கிறது. நீங்கள் திடுக்கிட்டுப்போகிறீர்கள். பிரெஞ்சு மொழி திரைப்படமான ’மேண்டிபிள்ஸ்’ இப்படித்தான் தொடங்குகிறது.

ஜேன், மானு ஆகிய இரண்டு அசட்டுத்தனமான நண்பர்கள் எதிர்கொள்ளும் ராட்சத ஈ ஒன்றை சுற்றிதான் படம் நகர்கிறது. முதலில் அச்சமூட்டக்கூடியதாகக் காட்சியளிக்கும் அந்த ஈ போகப்போக தாங்கள் சொல்வதையெல்லாம் அப்படியே செய்வதை கண்டு இருவரும் குதூகலமாகிவிடுகிறார்கள். குரங்கைப்போலப் பயிற்சி அளித்து இந்த ஈ-யை வைத்து சம்பாதிக்கலாம் என்று படுபுத்திசாலித்தனமாக கற்பனை செய்கிறார்கள். இப்படி கேலியும் கிண்டும் அமானுஷ்யமும் குறுக்குமறுக்குமாக அலப்பறைகள் செய்யும் ‘மாண்டிபிள்ஸ்’ திரைப்படம் உட்பட அதிசிறந்த 5 பிரெஞ்சு திரைப்படங்கள் சென்னையில் திரையிடப்படவிருக்கின்றன.

சென்னை சர்வதேசப் படவிழாவை ஒருங்கிணைத்துவரும் இண்டோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் திரைப்படச் சங்கம், சென்னை மற்றும் புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு தூதரகம் மற்றும் அலையன்ஸ் பிரான்சிஸ் மையத்துடன் இணைந்து இன்று (மார்ச் 14) முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு் பிரெஞ்சு திரை விழாவை நடத்தவிருக்கிறது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அலையன்ஸ் பிரான்சிஸ் மையத்தில் மாலை 6 மணி முதல் திரையிடல் நடைபெறவிருக்கிறது.

தொடர்புக்கு: 9840151956 / 8939022618

பிரெஞ்சு திரை விழா மார்ச், 2022

1.‘மாண்டிபிள்ஸ்’ (Mandibles) – அமானுஷ்யம் கலந்த நகைச்சுவை திரைப்படம் – 77 நிமிடங்கள் -மார்ச் 14, மாலை 7

2. ’பிளேலிஸ்ட்’ (Playlist) – நவீனக் கால பெண்ணின் வாழ்க்கைச்சூழலை மையப்படுத்திய திரைப்படம் - 84 நிமிடங்கள் -மார்ச் 15, மாலை 6

3. ‘ரெட் சாயில்’ (Red Soil) – சமூக அரசியல் மைய திரைப்படம் - 86 நிமிடங்கள் - மார்ச் 15, மாலை 7:30

4. ’ஸ்கைஸ் ஆஃப் லெபனன்' (Skies of Lebanon) – போர் ஏற்படுத்தும் பாதிப்பை விவரிக்கும் கதை - 92 நிமிடங்கள் - மார்ச் 16, மாலை 6

5. ’தி ரோஸ் மேக்கர்’ (The Rose Maker)- ரோஜா மலர் வியாபாரத்தைச் சுற்றிச் சுழலும் கதை - 95 நிமிடங்கள் - மார்ச் 16, மாலை 7:35

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE