அமெரிக்காவில் கின்னஸ் சாதனை படைத்த தெருக்கூத்து

By KU BUREAU

‘வெங்காயம்’,‘ஒன்’ உட்பட சில படங்களை இயக்கியவர் சங்ககிரி ராஜ்குமார். தெருக்கூத்து கலைஞருமான இவர், சுமார் 300 கலைஞர்களை ஒருங்கிணைத்து அமெரிக்காவில் தெருக்கூத்து நிகழ்ச்சி நடத்தி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இதுபற்றி செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தெருக்கூத்து அழிந்து வரும் கலை என சொல்வதை விட அதற்கு ஆக்கப்பூர்வமாக என்ன செய்ய முடியும் என்று யோசித்தேன். முதன்முதலாக கம்போடியாவிலுள்ள அங்கோர்வாட் ஆலய வளாகத்தில் அந்தக் கலையை அரங்கேற்றம் செய்தோம். பெரிய வரவேற்பு கிடைத்தது. பிறகு இன்றைய இளைய தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்லும் வகையில் வெளிநாடுகளில் உள்ள மாணவர்களுக்கு கூத்துபற்றி கற்பிக்க முடிவு செய்தேன். தெருக்கூத்தில் ராமாயணம், மகாபாரத கதைகள்தான் அதிகம். ஆனால் தமிழில் இருக்கும் அதியமான், குமணன், பாரிவள்ளல் உள்ளிட்டவர்களின் கதைகளைத் தெருக்கூத்தாக மாற்றினோம்.

இதற்கு வரவேற்பு கிடைத்தது. இந்தக் கலையை உலக அளவில் பிரபலப்படுத்த நினைத்ததும் தன்னார்வ தொண்டு நிறுவனமான தமிழ்நாடு அறக்கட்டளை தொடர்பு கிடைத்தது. அவர்களின் பொன்விழா ஆண்டு நிகழ்வில் இந்தக் கலையை மேடையில் நிகழ்த்த விரும்பினோம். உலக மக்கள் திரும்பிப் பார்க்கும் வகையில்பிரம்மாண்டமாக நடத்த அவர்கள் விரும்பினார்கள் அமெரிக்கா சென்று அங்குள்ள 300 கலைஞர்களை தேர்வு செய்து, 2 மாதம் பயிற்சி அளித்து, சிகாகோ நகரில் 5000-க்கும்மேற்பட்ட பார்வையாளர்களின் முன் தெருக்கூத்து நடத்தினோம்.

இதற்காக, வெளிநாடுகளில், ஒரே தருணத்தில் அதிகமான கலைஞர்கள் பங்கேற்று மேடையில் நிகழ்த்திய தெருக்கூத்து மற்றும் நாட்டுப்புற கலை நிகழ்ச்சி இதுதான் என கின்னஸ் சாதனை படைத்தோம். அதற்கான சான்றிதழையும் அங்கீகாரத்தையும் அளித்தனர். இதை இந்தக் கலையில் ஈடுபட்டிருக்கும் அனைத்து கலைஞர்களுக்குமான கவுரவம் என கருதுகிறேன்.

இவ்வாறு சங்ககிரி ராஜ்குமார் கூறினார். தமிழ்நாடு அறக்கட்டளையின் தேசிய தலைவர் சிவா, தமிழக ஒருங்கிணைப்பாளர் ராஜரத்தினம் ஐஏஎஸ் (ஓய்வு)நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் உடன் இருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE