’கோப்ரா’ படத்தில் இர்பான் பதான் தொடர்பான காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாக, அந்தப் படத்தின் இயக்குநர் அஜய் ஞானமுத்து தெரிவித்துள்ளார்.
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படம் 'கோப்ரா'. இதில் விக்ரம் பல கெட்டப்களில் நடித்துள்ளார். ’கே.ஜி.எப்’ ஸ்ரீநிதி ஷெட்டி, கே.எஸ்.ரவிகுமார், மியா ஜார்ஜ், பத்மப்பிரியா, கனிகா, மிருணாளினி ரவி உட்பட பலர் இதில் நடித்துள்ளனர். முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், இந்தப் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். செவன் ஸ்கீரின் ஸ்டுடியோஸ் சார்பில் எஸ்.எஸ்.லலித்குமார் தயாரிக்கிறார்.
கரோனா முதல் அலையின்போது, ரஷ்யாவில் சில முக்கியமான காட்சிகளை இந்தப் படக்குழு படமாக்கி வந்தது. அப்போது ரஷ்யாவிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், படப்பிடிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு இந்தியா திரும்பியது. பின்னர், கடந்த ஆண்டு மீண்டும் அங்கு சென்று படப்பிடிப்பை நடத்தினர்.
இந்தப் படத்தின் விக்ரம் தொடர்பான காட்சிகள் எப்போதோ முடிந்துவிட்டன. இந்நிலையில் இர்பான் பதான் தொடர்பான காட்சிகள் இப்போது முடிவடைந்துள்ளன. இதுபற்றி ட்விட்டரில் குறிப்பிட்டுள்ள இயக்குநர் அஜய் ஞானமுத்து, உங்களைப் போன்ற இனிமையான மனிதருடன் பணிபுரிந்ததில் மகிழ்ச்சி. இது மறக்க முடியாத பயணம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள இர்பான் பதான், "இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நான் அறிமுகமாவதில் மகிழ்ச்சி. என் அறிமுகப் படத்தில் நீங்களும் உங்கள் குழுவும் எனக்கு கிடைத்தது சிறப்பான விஷயம். பெரிய திரையில் படத்தைப் பார்க்க ஆவலாக இருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.