நடிகர் திலீப் முன்ஜாமீன் மனு விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு

By காமதேனு

நடிகர் திலீப்பின் முன் ஜாமீன் மனு மீதான விசாரணை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு, கன்னடப் படங்களில் நடித்து பிரபல மலையாள நடிகை ஒருவர், கடந்த 2017-ம் ஆண்டு காரில் கடத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த விவகாரம் தென்னிந்திய திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் மலையாள நடிகர் திலீப், பல்சர் சுனில் உட்பட சிலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின் திலீப் ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்த நிலையில், நடிகை பலாத்காரம் செய்யப்பட்டபோது செல்போனில் பதிவு செய்யப்பட்ட காட்சிகள், நடிகர் திலீப்பிடம் கொடுக்கப் பட்டதாகவும் அதை அவர் பார்த்தது தனக்குத் தெரியும் என்றும் திலீப்பின் நண்பரும் இயக்குநருமான பாலச்சந்திர குமார் சமீபத்தில் அளித்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் இந்த வழக்கு மீண்டும் சூடு பிடிக்கத் தொடங்கியது.

இந்த வழக்கை விசாரிக்கும் டிஎஸ்பி-யை கொல்ல, நடிகர் திலீப் சதி திட்டம் தீட்டியதாகவும் பாலச்சந்திரகுமார் தெரிவித்தார். இதையடுத்து திலீப் உட்பட 6 பேர் மீது, ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் கோரி, நடிகர் திலீப் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை இரண்டு முறை ஒத்திவைத்த கேரள உயர்நீதிமன்றம், இன்று விசாரணைக்கு ஏற்பதாக அறிவித்திருந்தது. அதன்படி இந்த மனு மீதான விசாரணை இன்று வந்தபோது, விசாரணையை முடிக்க அரசு தரப்பு அவகாசம் கோரியதால், வரும் 21 -ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்தது. ஏற்கெனவே கூறியது போல, அதுவரை நடிகர் திலீப்பை கைது செய்யக்கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE