நடிகர் பிரதீப் கே.விஜயன் மரணம்: காவல் துறை விசாரணை

By KU BUREAU

‘தெகிடி’ உட்பட பல படங்களில் நடித்ததன் மூலம் கவனம் பெற்ற நடிகர் பிரதீப் கே.விஜயன் சென்னையில் காலமானார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

'சொன்னா புரியாது' திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் பிரதீப் கே.விஜயன். பின்னர், இவர் ‘தெகிடி’, ‘வட்டம்’, ‘டெடி’, ‘லிஃப்ட்’, ‘இரும்புத் திரை’ உட்பட பல படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்றார். பெரும்பாலும் நகைச்சுவை நடிகராகவும், ஒரு சில படங்களில் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து பிரபலமானார்.

கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த இவர் திருமணம் ஆகாதவர். சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள பாலவாக்கம், சங்கராபுரத்தில் தனியாக வசித்து வந்தார். நேற்று முன்தினம் பலமுறை போன் செய்தும் எடுக்காததால் சந்தேகம் அடைந்த நண்பர்கள் இதுகுறித்து நீலாங்கரை காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீஸார், தீயணைப்பு படை வீரர்கள் உதவியுடன் விஜயன் வீட்டுக் சென்று பார்த்தனர். கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால் அதை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது குளியலறையில் தலை குப்புற கவிழ்ந்த நிலையில் விஜயன் சடலமாக கிடந்துள்ளார்.

இதையடுத்து உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

விஜயனுக்கு அடிக்கடி மயக்கம் ஏற்படுமாம். திடீர் மயக்கத்தால் அவர் இறந்தாரா? மாரடைப்பால் இறந்தாரா? அல்லது வேறு காரணமா? என போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE