இசையமைப்பாளர் தமனுக்கு கரோனா பாதிப்பு

By ஏக்நாத்ராஜ்

இசையமைப்பாளர் எஸ்.எஸ்.தமன், தனக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கரோனா தொற்று, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒரு வாரத்துக்கு முன்பு வரை குறைந்திருந்த இந்தத் தொற்று, ஒமைக்ரான் நுழைந்ததற்கு பிறகு தினமும் அதி வேகத்தில் பரவி வருகிறது. இன்று புதிதாக 1,17,100 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு, திரையரங்கில் 50 சதவீதம் மட்டுமே பார்வையாளர்களுக்கு அனுமதி போன்ற கட்டுப்பாடுகளை தமிழ்நாடு அரசு விதித்துள்ளது. இந்நிலையில் கரோனாவுக்கு ஆளான திரையுலக பிரபலங்கள் குறித்த செய்திகள் அடுத்தடுத்து வந்துகொண்டிருக்கின்றன.

நடிகர்கள் அருண் விஜய், மகேஷ் பாபு, நடிகைகள் லட்சுமி மன்சு, மீனா, ஸ்வரா பாஸ்கர் உள்பட பலருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். இந்நிலையில் பிரபல இசையமைப்பாளர் தமன், தனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதில் அவர், ‘இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி இருந்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக எடுத்தும், லேசான அறிகுறியுடன் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவர் அறிவுறுத்தலின்படி நான் என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தயவு செய்து கரோனா பரிசோதனை செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். கரோனா பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றி, தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE