பயாஸ்கோப் -19 : சர்வதேச திரைப்பட விழாவின் சிறந்த படங்கள் - 3

By உமா சக்தி

‘ஃபெதர்ஸ்’ - 2021-ம் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற 74-வது கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவின் விமர்சகர்கள் விருதை வென்ற எகிப்திய திரைப்படம். எகிப்திய-பிரெஞ்சு-டச்சு-கிரேக்க ஆகிய நாடுகளின் கூட்டுத் தயாரிப்பில் உருவான திரைச் சித்திரம் இது.

திரையிட்ட நாடுகள் அனைத்திலுமே பாசிட்டிவான விமர்சனங்களைப் பரவலாகப் பெற்று வருகிறது இந்தப் படம். அரபு நாட்டின் வறுமையையும் அங்கு நிலவும் அமைதியற்ற சூழலையும் அப்பட்டமாகக் காட்சிப்படுத்தியதால் இப்படம் உள்நாட்டில் கடும் விமர்சனங்களை எதிர்க்கொண்டது. எகிப்தின் எல் கவுனா திரைப்பட விழாவில் 'ஃபெதர்ஸ்' திரையிடப்பட்டபோது பிரபல நடிகர் ஷெரிப் மோனீர், இப்படத்துக்கு எதிராக தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். ஆனால், மற்ற திரைக் கலைஞர்கள், “இயக்குநர் ஒமர் எல் ஜோஹைரி (Omar El Zohairy) உண்மையான சமூக பிரச்சினையை கலைத்தன்மையுடன் ஆக்கபூர்வமான முறையில் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார்” என்று பாராட்டினார்கள். இத்தனையும் தாண்டி எல் கவுனா திரைப்பட விழாவின் நிறைவில், ‘ஃபெதர்ஸ்’ சிறந்த அரபுத் திரைப்படத்திற்கான (best Arab narrative film) விருதையும் அள்ளிச் சென்றது.

‘ஃபெதர்ஸ்’ ஓம் மரியோ என்ற ஏழைப் பெண்ணின் கதையை எவ்வித சமரசத்துக்கும் உட்படாமல் நேரடியாகவும் சற்று குரூரமாகவும் திரை மொழியில் பேசுகிறது. மரியோ தன் குடும்பத்துக்காக பாடுபடும் ஒரு சராசரி பெண். வித்தியாசமான குணநலன்கள் உடைய கருமியான கணவனுடனும் தனது மூன்று குழந்தைகளுடனும் ஒரு சிறிய வாடகை வீட்டில் வசித்து வருகிறாள். வறுமையான சூழ்நிலையிலும் அவள் கணவனை நன்றாக போஷிக்கிறாள். கைக்குழந்தையுடன் இரண்டு மகன்களையும் எவ்வித குறையும் தெரியாமல் வளர்க்கிறாள்.

வீட்டுச் செலவுகளுக்கு பணத்தை கணக்கு பார்த்துத் தரும் அவளது கணவன், மகனின் பிறந்த நாளை விமர்சையாக கொண்டாட முடிவு செய்து ஆடம்பரமான பொருட்களை வாங்கி வருகிறான். எவ்வித மாற்றமும் இன்றி ஒரே கதியில் இயங்கிக் கொண்டிருந்த அக்குடும்பம், மூத்த மகனின் பிறந்த நாளன்று தலைகீழாக மாறுகிறது.

மகனின் பிறந்த நாளுக்காக வந்திருந்த விருந்தினரை மகிழ்விக்க மேஜிக் நிபுணர்களை அழைத்திருந்தான் அந்தக் குடும்பத் தலைவன். விழா களை கட்டுகிறது. ஒவ்வொரு மேஜிக்காக செய்து கொண்டிருந்த நிபுணர், அவனை அழைத்து ஒரு பெரிய பெட்டிக்குள் அடைத்து ஒரு சில நிமிடத்தில் திறக்க அவன் கோழியாக மாறியிருக்கிறான். திகைத்த கூட்டத்தினரை அலட்சியமாக பார்த்த நிபுணன், மீண்டும் கோழியைப் பெட்டிக்குள் அடைத்து திறந்து பார்க்க எவ்வித மாற்றமும் இல்லாமல் கோழி அப்படியே இருந்தது.

கூட்டம் மிரள்கிறது. “ஏதோ குளறுபடி நிகழ்ந்துவிட்டது சரி செய்கிறேன்” என்று சொல்லும் மேஜிக் நிபுணர்கள், எப்படியோ அங்கிருந்து தப்பியோடிவிடுகின்றனர். அந்தக் கோழியை மறுபடியும் கணவனாக மாற்ற மரியோ கடும் முயற்சி எடுக்கிறாள். மந்திரவாதி முதல் வைத்தியர் வரை பார்த்து எதுவும் நடக்கவில்லை. கடைசியில், கோழியாக மாற்றப்பட்ட கணவனை அவனது அறைக்குள் அடைத்து வைக்கிறாள் மரியோ. அதன் பிறகு ஒவ்வொரு நாளும் அவளது வாழ்க்கை பெரும் போராட்டமாகவே மாறிவிடுகிறது.

மூன்று மாத வீட்டு வாடகை பாக்கி என்ற பிரச்சினையிலிருந்து அன்றாட உணவு முதல் அத்யாவசிய செலவுகளையும் சமாளிக்க முடியாமல் தடுமாறுகிறாள். இடையில், உதவிக்கு வரும் அவளது குடும்ப நண்பர் அவளிடம் தவறாக நடக்க முயல்கிறார். அவரிடமிருந்து தப்பியோடி வருகிறாள். கணவன் பணிபுரிந்த தொழிற்சாலையில் பெண்களுக்கு வேலை இல்லை என்பதால் வீட்டு வேலை செய்யயும் ஆயத்தமாவாள். ஆனால், அந்த வருமானம் நான்கு ஜீவன்களின் வயிற்றுப்பாட்டுக்கு போதாது. கடன் வாங்கியும், மளிகைக் கடையில் தவணை சொல்லியும் எப்படியெல்லாமோ சமாளிக்கிறாள் மரியோ. இடையிடையே கோழிக்கான மந்திரிப்பும் தொடர்கிறது. அவளுடைய அறிவுக்கு அந்த கோழி மனிதனாக மாறாது என்று தெரிந்திருந்தாலும், அந்தக் கோழியை பத்திரமாக பாதுகாக்கிறாள். மீண்டும் ஏதேனும் மாயம் நிகழ்ந்து அது கணவனாக மாறிவிடும் என்று மனதார நம்புகிறாள்.

ஆனால், அவளது நம்பிக்கையை குலைக்கும் வகையில் அவள் சற்றும் எதிர்பாராதபடி அக்கோழி நோய் வாய்ப்பட்டு கிட்டத்தட்ட இறக்கும் நிலைக்கு வருகிறது. அதை மருத்துவமனையில் சேர்த்து வைத்தியம் கடன் வாங்கி வைத்தியம் பார்க்கிறாள் மரியோ.

இந்த நிலையில், கடன் சுமை துரத்துவதால் வீட்டை காலி செய்யும் நிலை வருகிறது. வேறு வழியின்றி, உதவி செய்ய முன்வரும் அதே குடும்ப நண்பரிடம் எங்காவது வேலைக்கு சேர்த்துவிடும் படி கேட்கிறாள் மரியோ. அவனோ அவளை உள்ளூர் தாதாவின் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்த்துவிடுகிறான். கூடவே, அடிக்கடி அவளுக்கு தொந்தரவும் கொடுக்கிறான். தொல்லை தாங்கமுடியாமல் விஷயத்தை தாதாவின் காதில் போடுகிறாள் மரியோ.

அடியாட்களை அனுப்பி அந்த வக்ர மனிதனை வகை தொகை தெரியாமல் வெளுத்து விடுகிறான் தாதா. இதன் பிறகு, குடும்ப வறுமையைச் சுமக்க மகனை கணவன் வேலை பார்த்த அதே தொழிற்சாலையில் சேர்த்துவிடுகிறாள் மரியோ. தாயும் மகனும் கடுமையாக உழைத்து கடன்களை எல்லாம் அடைக்கிறார்கள். வைத்தியம் கைகூடி, கோழி உருவில் இருக்கும் கணவனும் தேறி வருகிறான்.

இதற்கு நடுவே, மகனை வேலைக்கு அமர்த்திய தொழிற்சாலை நிர்வாகம், தந்தை தொலைந்து போனதற்கான சான்று தந்தால் தான் அவனை வேலையில் தொடர அனுமதிக்க முடியும் என நிபந்தனை விதிக்கிறது. இதற்காக போலீஸுக்குப் போகிறாள் மரியோ. அங்கே அவளுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. அதிலிருந்து அவள் எப்படி மீள்கிறாள், அவளது கணவன் என்னவானான், அந்த கோழியின் நிலை என்ன, மரியோவின் சின்னஞ் சிறு மகன் திடீரென்று குடும்பப் பொறுப்பை எப்படி ஏற்றான் என்பதை எல்லாம் வலிகளுடனும் அதே சமயம் சமூகத்தை பகடி செய்தும் பதிவு செய்துள்ளார் இயக்குநர்.

நாம் பார்க்கவே அசூசைப்படும் சூழலைப் படம் நெடுகிலும் காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குநர். அழுக்கான வீடு, புகை மண்டிய தெருக்கள், எங்கு பார்த்தாலும் ஏழ்மை மற்றும் சமத்துவமற்ற நோய்க்கூறுகள் என இப்படத்தின் பல காட்சிகளை இருண்மையின் குறியீடாக்கியுள்ளார்.

கதாபாத்திரங்கள் ஒரே விதமான கசங்கிய ஆடைகளையே அணிகிறார்கள். உணர்ச்சியற்ற, சிரிப்பற்ற முகங்கள், எந்திரத்தனமான வாழ்க்கை முறை, வெளிச்சமற்ற இருளான வீடுகள், அலுவலகங்கள் என அந்நகரமே புழுதியால் மூழ்கடிப்பட்டதுபோல் உணரச் செய்கிறார் இயக்குநர். ஒரு காட்சியில், காணாமல் போன தந்தையை நினைத்து அவர் வாங்கி வந்த பொருட்களை அடித்து உதைத்து நொறுக்கி தன் கோபத்தையும் இயலாமையையும் காண்பிப்பான் சிறுவன். படத்தின் தொடக்கத்தில் அழகிய முகத்துடன் இருப்பவன், வேலைக்குப் போனதும் முகத்தில் கரித்திட்டுக்களுடன் மிக அழுக்கான உடையில் காணப்படுவான். எகிப்தில் மட்டுமல்ல உலகின் எந்த மூலையிலும் குழந்தைத் தொழிலாளிகள் பாடு இதுதான் என்பதை அந்த ஒரே காட்சியில் சொல்லாமல் சொல்லிவிடுகிறார் இயக்குநர். ஏழைகளை அழுக்காகக் காட்டும் இயக்குநர், பணக்காரர்கள் வீட்டு பண தாளும் பகட்டாக இருப்பதை படம்பிடித்துக் காட்டுகிறார். படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்.

இயக்குநர் ஜோஹைரி குறும்படங்களையும் இயக்கியுள்ளார். ‘ஃபெதர்ஸ்’ தான் இவரின் முதல் முழுநீள திரை படைப்பாகும். ஜோஹைரி கெய்ரோவில் உள்ள ஹையர் இன்ஸ்டிடியூட் ஆஃப் சினிமாவில் பட்டம் பெற்றவர், யூசுப் சாஹின் மற்றும் யூஸ்ரி நஸ்ரல்லா உட்பட பல எகிப்திய இயக்குநர்களிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.

பெரும்பாலும் அமெச்சூர் நடிகர்களை வைத்தே எடுக்கப்பட்ட இந்தப் படம் வாழ்வின் அபத்தங்களை மையமாக வைத்து புனையப்பட்டது. யதார்த்தத்தையும் கற்பனையையும் கலந்து உயிரோட்டமான ஒரு திரைக்கதையை இயக்குநர் உருவாக்கியுள்ளார். இப்படம் சமூக, பொருளாதாரப் பிரச்சினைகளை நையாண்டி செய்து, உலகப் பெண்களின் நிலைமையை உரக்கப் பேசுகிறது.

‘ஃபெதர்ஸ்’ பற்றி இயக்குநர் ஜோஹைரி, "என்னைப் பொறுத்தவரை, எந்தவொரு கலைப் படைப்பும் எப்போதும் மாறுபட்ட பார்வைகளை உருவாக்க வேண்டும்" என்று பதிவு செய்திருக்கிறார். விருதுகளை விட இப்படம் சென்று சேரவேண்டிய இடங்கள்தான் முக்கியம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE