‘மஞ்சும்மள் பாய்ஸ்’ தயாரிப்பாளர்களுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்

By KU BUREAU

சிதம்பரம் இயக்கத்தில் சவுபின் சாஹிர், நாத் பாஸி உட்பட பலர் நடித்து வெளியான மலையாள படம், ‘மஞ்சும்மள் பாய்ஸ்’. கொடைக்கானல் குணா குகையில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவான இந்தப் படம் மலையாளம் தவிர, தமிழ், தெலுங்கிலும் சூப்பர் ஹிட்டானது. உலகம் முழுவதும் ரூ.241 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதித்தது. இந்தப் படத்தை ஷான் ஆண்டனி, சவுபின் சாஹிர், பாபு சாஹிர் ஆகியோர் பரவா பிலிம்ஸ் சார்பில் தயாரித்திருந்தனர்.

இந்தப் படத்தைத் தயாரிக்க ரூ.7 கோடி கொடுத்ததாகவும் லாபத்தில் 40 சதவீதம் பங்கு தருவதாகக் கூறி தரவில்லை என்றும் சிராஜ் என்பவர் வழக்கு தொடர்ந்தார். விசாரித்த போலீஸார்,விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்பித்தனர். அதில், தயாரிப்பாளர்கள் திட்டமிட்டு மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும், தயாரிப்பு செலவு ரூ.18.65 கோடி என்ற நிலையில், ரூ.22 கோடிசெலவானது என்று பொய்யாகத் தெரிவித்துள்ளனர் எனவும் கூறியிருந்தனர்.

தயாரிப்பு செலவை உயர்த்திக் காட்டி தயாரிப்பாளர்கள் நிதி மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளதை அடுத்து அமலாக்கத்துறை விசாரணையை தொடங்கியுள்ளது. இது தொடர்பான விசாரணைக்கு கொச்சியில் உள்ளஅலுவலகத்தில் ஆஜராகுமாறு இதன் தயாரிப்பாளர்களுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE