பயாஸ்கோப் -19 : சர்வதேச திரைப்பட விழாவின் சிறந்த படங்கள் - 1

By உமா சக்தி

சென்னையில் நடைபெற்று வரும் 19-வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவில் 53 உலக நாடுகளைச் சேர்ந்த 100 படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன. சத்யம் மற்றும் அண்ணா திரை அரங்குகளில் பன்மொழித் திரைப்படங்கள் திரையிடப்பட்டு ரசிகர்களைக் கொண்டாட்டத்தில் ஆழ்த்தி வருகின்றன.

உலகப் படங்களை ஒரே இடத்தில் காணக் கிடைப்பதே திரைப்பட விழாக்களின் தனிச் சிறப்பு. அவ்வகையில் நல்ல சினிமாவைப் பார்த்து ரசிக்கும் வாய்ப்பு திரை ஆர்வலர்களுக்கு மட்டுமல்லாமல் திரை வல்லுனர்களுக்கும் வரமாக அமைந்துள்ளது. தவிர இத்தகைய விழாக்கள் மூலம், இளம் இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் படைப்பூக்கம் பெறுவதுடன் ஆக்கபூர்வமான கருத்துக்களை முன்வைக்க ஒரு களமாகவும் விளங்குகிறது.

சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள் பெரும்பாலும் மனித வாழ்க்கையைப் பற்றி பேசுகின்றன. எப்படி வாழக் கூடாது என்று ஒரு படம் சொன்னால், எப்படி வாழ வேண்டும் என இன்னொரு படம் கற்றுத் தருகிறது. எத்தகைய இடர்பாடுகளுக்கு இடையேயும் வாழ்க்கை முன்னோக்கி நகர்ந்து கொண்டுதானிருக்கும். மனிதர்கள் வருவார்கள் போவார்கள். ஆனால், மாற்றம் என்பதுதான் மாறாத ஒரே விதி என்பது எந்தளவுக்கு உண்மை என்பதை இந்தப் படங்கள் நமக்குச் சொல்கின்றன.

ஒவ்வொரு காலகட்டத்திலும் நிகழ்ந்து கொண்டிருக்கும் சமூக அவலங்களை, அரசியல் மாற்றங்களை, பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை, குழந்தைகள் உலகத்தை பதிவு செய்வதும் சினிமாவின் அடிப்படை நோக்கம் தான். அவ்வகையில் திரையாக்கங்கள் உலக நிகழ்வுகளை, போர் நிகழ்த்தும் வன்முறையை, மனித வாழ்வின் துயரங்களை, தேடல்களின் தீவிரத்தை ஒவ்வொரு வகையில் பதிவு செய்கிறது. கலைடோஸ்கோப்பில் தென்படும் வண்ணங்களைப் போல மனித வாழ்க்கையின் நிறங்களை படம்பிடித்துக் காட்டுகிறது. இந்த ஆண்டு சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட சில முத்திரை பதித்த படங்களைப் பற்றி இத்தொடரில் காணலாம்.

When Pomegranates Howl (2020) by Granaz Moussavi

ஆஸ்திரேலிய - ஈரானிய இயக்குநர் கிரானாஸ் மௌசாவியின் இரண்டாவது திரைப்படமான ‘When Pomegranates Howl’ போரின் இழப்புகளைப் பற்றி அலசுகிறது.

தந்தையின் இறப்பால் குடும்பம் நிலைதடுமாற, தனது ஒன்பதாம் வயதில் குழந்தை தொழிலாளியாகிறான் ஹெவாத் (அராபத் ஃபைஸ்). யுத்தத்தில் தந்தை இறப்பதால் தனது குடும்பத்தைச் சுமக்கும் பொறுப்பை ஏற்கிறான் அச்சிறுவன். காபூலின் தெருக்களில் தினம், தினம் சுற்றித் திரிந்து மளிகைப் பொருட்கள், மாதுளம் பழங்கள், பழச்சாறு, மற்றும் தின்பண்டங்களை விற்கிறான். தவிர ஒரு வயதான முல்லாவிடமிருந்து தேவைப்படுபவர்களுக்கு மந்திரித்த தாயத்துக் களையும் வாங்கி வழங்கி வருகிறான் ஹெவாத்.

ஹெவாத்

இத்தகைய கடினமான வேலைச் சூழலிலிருந்து சிறிதேனும் தப்பிக்க எப்பாடுபட்டாவது ஒரு நடிகனாக மாறிவிட வேண்டு என நினைக்கிறான் ஹெவாத். நடிகனாகிவிட்டால் கைநிறையச் சம்பாதித்து தன் குடும்பத்தைச் சிரமமின்றி பாதுகாக்கலாம் என்பது அவனது கனவு. ஒருகட்டத்தில் தனது ஆதர்ச நடிகரான அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கரின் படம் ஒட்டப்பட்ட ஒரு தள்ளு வண்டியில் மாதுளை மற்றும் இதர பொருட்களைப் வீடு வீடாகச் சென்று விற்கும் சிறு வியாபாரியாகிறான் ஹெவாத்.

இப்படத்தில் வெகு சிறப்பாக கையாளப்பட்ட இரண்டு கதாபாத்திரங்களை பார்க்கலாம். முதலாவதாக, ஹெவாத்திடம் அடிக்கடி பொருட்கள் வாங்கும் இளம் பெண் ஒருத்தி அவனுடைய வாடிக்கையாளராகிறாள். ஹெவாத் அவள் முகத்தைப் பார்த்ததில்லை. அவனிடம் வாங்கிய பொருட்களை எடுக்கவும், அதற்கான பணம் செலுத்தவும் மட்டுமே கதவிடுக்கின் வழியே மருதாணி இடப்பட்ட கரங்கள் வெளியே வரும். வெளியே சில சமயம் அவளின் பெண் குழந்தை நின்றால் உடனே அக்கரங்கள் அக்குழந்தையை உள்ளே இழத்துக் கதவைச் சாத்திக் கொள்ளும். காரணம், எந்த நேரத்திலும் எது வேண்டுமானாலும் நிகழக் கூடிய அபாயகரமான போர் சூழல். வானிலிருந்து குண்டு மழை பொழியலாம், பெண் குழந்தை என்பதால் மேலும் ஆபத்துகள் ஏற்படலாம். அந்த இளம் பெண் அதற்கு பயந்து பெண் குழந்தையை கோழிக் குஞ்சை அடைகாப்பது போல் வீட்டினுள் பொத்திப் பாதுகாக்கிறாள். இந்த உலகில் வாழும் முகமற்ற பல பெண்களின் பிரதிநிதியாக அவள் விளங்குகிறாள்.

இரண்டாவதாக, ஒரு பத்திரிகை புகைப்படக் கலைஞர். முதன்முதல் ஹெவாத் ஒரு திருமண நிகழ்வில் பழரசம் விற்பான். அப்போது அங்கே திடீரென்று குண்டு வெடித்து பலர் இறக்க, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்புவான் ஹெவாத். அவனது அந்த நிலை குறித்து பேட்டியுடன் படம் பிடிக்கிறார் அந்தப் புகைப்படக் கலைஞர். அப்போதிலிருந்தே அவனுக்கு தான் ஒரு முக்கியத்துவம் வாய்ந்தவன் என்ற எண்ணம் ஏற்படுகிறது. அதுவே, என்றாவது ஒரு நாள் நடிகனாகிவிடுவேன் என்ற நம்பிக்கையும் அவனுக்குள் மேலும் வளர்க்கிறது.

தெரிந்தோ தெரியாமலோ சிறுவன் ஒருவனின் நிறைவேறாத கனவுக்கு பொருப்பாகிவிட்ட அந்த புகைப்பட கலைஞர், இறுதியில் ஹெவாத்துக்கு நேர்ந்த விஷயத்தால் பெரிதும் மனம் உடைந்து தன் கேமராவை தூர எறிகிறார். இந்தக் காட்சி சொல்லும் கதைகள் மிக ஆழமானவை. இந்த உலகில் மட்டுமல்லாமல் நம்மைச் சுற்றி நடக்கும் அநீதிகளைக் கண்டு ஏதும் செய்ய முடியாமல் அதைக் கடந்து போகும் நம் ஒவ்வொருவரும் அந்த புகைப்பட கலைஞர் தான் என்பதை அக்காட்சி உணர வைக்கிறது.

முடிவற்ற யுத்தத்தினால் மக்கள் ஒருபோதும் நிம்மதியாக வாழத் தகுதியற்ற இடமாகிக் கொண்டிருக்கிறது ஆப்கன். இதில் குழந்தைகள் மேலதிகம் பாதிக்கப்படுகின்றனர். மார்ச் 2013-ல் இரண்டு ஆப்கன் சிறுவர்கள் கிளர்ச்சியாளர்கள் எனத் தவறாக நினைத்துக் கொல்லப்பட்டார்கள். இந்த உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து இத்திரைப்படத்தை உருவாக்கியுள்ளனர்.

போர் நிகழ்த்தும் கொடூரங்களை, துயரங்களை தத்ரூபமாக படம்பிடிக்க வேண்டும் என்பதற்காக இயக்குநர் மௌசாவி, தொழில்முறை நடிகர்கள் அல்லாதவர்களை இதில் நடிக்க வைத்துள்ளார். பெரிய கனவுகளுடன் தனது குடும்பத்துக்காக அர்ப்பணிப்பு உணர்வுடன் உழைத்து மூன்று வேளை உணவளக்கும் பதின் வயது சிறுவன் பாத்திரத்தில் ஃபைஸ் மிகச் சரியாக பொருந்துகிறான். இதுதான் அவ்வனுடைய முதல் படம். திரைத்துறையில் அவனுடைய அனுபவமின்மையே அவனுடைய கதாபாத்திரத்தின் நம்பகத்தன்மையை அதிகரிக்கிறது, இப்படம் கிட்டத்தட்ட ஒரு ஆவணப்படத்தை ஒத்திருக்கிறது.

பள்ளிக்குச் சென்று, மற்ற சிறுவர்களுடன் விளையாடி வளர வேண்டிய ஒரு சிறுவன் அவற்றை இழந்தால் அவனுடைய நாட்கள் எப்படி இருக்கும் என்பதை இயக்குநர் எதார்த்தப்படுத்தியுள்ளார். கதை எளிமையாகவும் நேரடியான தொனியிலும் கூறப்பட்டுள்ளது சிறப்பு. காபூலின் குழப்பமான, கலகலப்பான வாழ்க்கையிலிருந்து விலகி போரின் கொடூரத்தால் அச்சம் படர்ந்து வாழும் முகங்கள் திரையில் உலவுகின்றன. இளைஞர்கள் தெருவில் அவசர அவசரமாக நடக்கின்றனர். சில சமயம் உள்ளூர் குழுச் சண்டைகளும் நடக்கின்றன. பெண்கள் வீட்டினுள் ஒடுங்கி ஒளிந்து மறைந்து சுவடின்றி வாழ்கிறார்கள். குழந்தைகள் நகரத்தின் இடிபாடுகளுக்கு மத்தியில் காத்தாடியுடன் விளையாடுகிறார்கள், வழமையாக சேவல் சண்டை நிகழ்த்தி பொழுது போக்கி தங்களை மகிழ்வித்துக் கொள்கிறார்கள் பணம் படைத்தவர்கள்.

போரை நேரடியாக காண்பிக்காமல் அது நிகழ்த்திக் கொண்டிருக்கும் வாழ்வியல் துயரங்களை ஒரு சிறுவனது வாழ்க்கையின் ஒரு சில தினங்கள் மூலம் பதிவு செய்கிறார் இயக்குநர். இன்னும் கனவுகள் கலைந்து, ஒவ்வொரு நாளும் உயிருக்குப் பயந்து வாழும் துயர் நிரம்பிய நாடுகள் நமக்கு வெகு அருகே உள்ளன. அங்கிருந்து எழும் அவலக் குரல்கள் பெரும்பான்மையாக இளம் வயதினருடையதாக இருப்பது கொடுமை. இதையும் அப்பட்டமாக படம்பிடித்துக் காட்டும் இப்படம் பார்ப்பவர்களின் மனசாட்சியை ஒரு சில நொடிகளேனும் துயரில் ஆழ்த்தி கேள்விக்குட்படுத்தும்!

(பயாஸ்கோப் பார்க்கலாம்)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE