என்னதான் கண்டபடி கலாய்த்துக் கொட்டினாலும், டிவி சீரியல்களுக்கான மவுசை யாராலும் அசைக்கமுடியாது. சில நேரங்களில், சீரியல்களை சின்சியராய் விமர்சிக்கும் சீர்திருத்தவாதிகளையேகூட, அவர்களையும் அறியாமல் ஆட்கொண்டு விடுகின்றன டெலி சீரியல்கள். அந்த வகையில், கடந்த ஆண்டில் மக்களால் பெரிதும் விரும்பிப் பார்க்கப்பட்ட சீரியல்களைப் பற்றிய தொகுப்புதான் இது.
டிசம்பர் மாத பிஏஆர்சி டிஆர்பி (BARC TRP) ரேட்டிங் தளத்தின் தரவுகளின்படி, டாப் 5 சேனல்கள் வரிசையில் சன் டிவி முதலிடத்தையும் அடுத்த இடத்தை ஸ்டார் விஜய் டிவியும் பிடித்துள்ளன. ஜீ தமிழ், கே டிவி, ஸ்டார் விஜய் சூப்பர் சேனல்கள் முறையே அடுத்தடுத்த இடங்களைத் தக்கவைத்துள்ளன.
கடந்த ஆண்டில் மட்டுமல்ல... கடந்த பல ஆண்டுகளாகவே அதிக பார்வையாளர்களுடன் முதல் இடத்தைத் தக்கவைத்திருக்கிறது சன் டிவி. என்னதான் ரியாலிட்டி ஷோக்கள் வைத்துப் பிற சேனல்கள் மல்லுக்கட்டினாலும் இறுதியில் சன் டிவி டாப்பில் வந்துவிடுகிறது.
டிஆர்பி ரேட்டிங், சோசியல் மீடியா ரீச் ஆகியவற்றின் அடிப்படையில், சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா, கயல், வானத்தைப் போல, சுந்தரி, பூவே உனக்காக, அன்பே வா ஆகிய சீரியல்கள் வாரா வாரம் டாப் 10 இடங்களில் ஏதாவது ஒரு இடத்தைத் தக்கவைத்து வருகின்றன.
அதேபோல் விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலக்ஷ்மி, தமிழும் சரஸ்வதியும், ராஜா ராணி 2 சீரியல்கள் முதல் 10 இடங்களில் இடம்பிடித்து வருகின்றன. ஜீ தமிழ் சீரியல்கள் டிஆர்பி ரேட்டிங்கில் இப்போதெல்லாம் முதல் 10 இடங்களுக்குள் வருவது அரிதிலும் அரிதாகவே இருக்கிறது. இருந்தாலும் இந்தச் சேனலின், நினைத்தாலே இனிக்கும், செம்பருத்தி, கோகுலத்தில் சீதை, புதுப் புது அர்த்தங்கள் தொடர்கள் டிஆர்பியில் சுமாராக இருந்தாலும் சோசியல் மீடியாவில் அதிகமான ரசிகர்களை ஈர்த்துவைத்திருக்கின்றன.
இது கடந்த வருடத்துக்கான சூழல். பிறந்திருக்கும் புத்தாண்டில் இந்த ரேட்டிங் எப்படி வேண்டுமானாலும் மாறலாம். புதிய சீரியல்களை களமிறக்கத் தொடங்கி இருக்கும் ஜீ தமிழ், இப்போது ரேட்டிங்கில் முன்னணியில் இருக்கும் சேனல்களை பின்னுக்குத் தள்ளவும் வாய்ப்புகள் அதிகம். மறுபுறம் விஜய் டிவியும் தனது ரசிகர்களைத் தக்கவைத்துக்கொள்ளப் புது சீரியல்களை களமிறக்குகிறது.
போட்டா போட்டியில் உருவாகி வரும் இந்தப் புது சீரியல்கள், வேலைக்காரப் பெண்ணைக் காதலிக்கும் பணக்கார நாயகன், சமையல் பிசினஸ் செய்யும் நாயகி, பணக்கார வீட்டுக்கு வாழ்க்கைப்பட்டு வரும் ஏழை நாயகி போன்ற வழமையான ஒன்லைன்கள் இல்லாமல் புது கதைக்களத்துடன் இருக்கின்றனவா?
வாங்க பார்க்கலாம்...
வித்யா நம்பர் 1 - ஜீ தமிழ்
நாயகியாக தேஜஸ்வினி கவுடா நடிக்கிறார். கன்னட சீரியல் நடிகையான இவர், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ‘சுந்தரி நீயும் சுந்தரன் நானும்’ தொடர் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். இந்த சீரியலில் நாயகனாக யூடியூப் பிரபலம் இனியன் நடிக்கிறார். யூடியூப் வீடியோக்களில் நடித்து வந்த இனியன், விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோ மூலம் சின்னத்திரைக்கு வந்தார். தற்போது இந்த சீரியல் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார்.
மேலும், இந்த சீரியலில் விஜய் டிவி சீரியல்களில் நடித்து பிரபலமான சத்யா. எஸ்கே முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும், சத்யா, ரோஜா, கோகுலத்தில் சீதை உள்ளிட்ட பல ஹிட் சீரியல்களின் நாயகிகளுக்கு வாய்ஸ் கொடுத்த அக்ஷயா பிரபா இந்த சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமாகிறார்.
பணக்காரத் தொழிலதிபர் குடும்பத்தைச் சேர்ந்த நாயகன், எளிமையான குடும்பத்தைச் சேர்ந்த நாயகி. நாயகனின் அம்மா மெத்தப் படித்த தொழிலதிபர். நாயகியோ மழைக்குக்கூட பள்ளிக்கு ஒதுங்காதவர். இவர்களைச் சுற்றியே கதை நகர ஆரம்பித்திருக்கிறது. இந்த சீரியல் ஜீ தமிழில் திங்கள் - சனி இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
வைதேகி காத்திருந்தாள் - விஜய் டிவி
செய்தி வாசிப்பாளராக இருந்து நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் மூலம் சின்னத்திரைக்கு என்ட்ரி கொடுத்த சரண்யா, இந்த தொடரில் நாயகியாக நடிக்கிறார். பிரஜின் நாயகனாக நடிக்கிறார். பழம்பெரும் நடிகை லதா, நிரோஷா, ஸ்டெஃபி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். அடாவடி செய்து, பொய் பேசி பணம் சம்பாதிக்கும் அராத்து பெண்ணான நாயகி, சிறு வயதில் காணாமல்போன வைதேகியாக நடிக்க சிலரிடம் காசு வாங்கிக் கொண்டு, ஒரு பணக்கார வீட்டுக்குள் நுழைகிறாள்.
அங்கு போனபிறகுதான் தெரிகிறது காணாமல்போன அந்த வைதேகியே தான் தான் என்று. இந்த ட்விஸ்ட் நாம் எதிர்பார்க்காத ஒன்று(!). பொய் பித்தலாட்டம் செய்யும் நாயகி மீது பணக்கார நாயகன் காதலில் விழுகிறார். வைதேகி, எப்படி தனது குடும்பத்தைப் பிரச்சினைகளில் இருந்து மீட்கிறார் என்பதே சீரியலின் கதை. இந்த சீரியல் விஜய் டிவியில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகத் தொடங்கி இருக்கிறது.
வள்ளி திருமணம் - கலர்ஸ் தமிழ்
கலர்ஸ் தமிழ் சீரியல்கள் பெரிய அளவில் தமிழ் ஆடியன்சை சென்றடையவில்லை என்றாலும், சீரியல்களுக்கு வைக்கப்படும் பெயர்கள் வித்தியாசமாகவும் ரசிக்கும்படியாகவும் இருக்கும். ‘இதயத்தை திருடாதே’, ‘திருமணம்’, ‘அபி டெய்லர்’, ‘எங்க வீட்டு மீனாட்சி’ சீரியல்கள் வரிசையில் இப்போது ‘வள்ளி திருமணம்’ இணைகிறது. இதில் நாயகியாக ஜி தமிழின் ‘யாரடி நீ மோகினி’ சீரியலில் அப்பாவி நாயகியாக நடித்த நக்ஷத்ரா நடிக்கிறார். நாயகனாக விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே சீரியலில் நடித்து பிரபலமான ஷியாம் நடிக்கிறார். முக்கிய வேடத்தில் நளினி நடிக்கிறார்.
தேனி மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்து வளரும் நாயகிக்கு திருமணமாவதில் தாமதமாகிறது. நாயகியின் திருமணத்தில் இருக்கும் சிக்கலை சரி செய்யத் துடிக்கிறார் நாயகியின் தாய். அவரின் முயற்சிகள் வெற்றி பெற்றதா என்பதே சீரியலின் கதை. நாயகியின் தாயாக நளினியும், நண்பராக நாஞ்சில் விஜயனும் நடிக்கின்றனர். இந்தத் தொடர், ஜனவரி 3-ம் தேதியிலிருந்து இரவு 8.00 மணிக்கு கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாக உள்ளது.
ரஜினி - ஜீ தமிழ்
சீரியலின் பெயரே ஒருவித ஹைப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சீரியலில் நாயகியாக கலர்ஸ் தமிழின் ‘திருமணம்’ சீரியல் மூலம் சின்னத்திரைக்கு வந்த ஸ்ரேயா அஞ்சன் நடிக்கிறார். ‘திருமணம்’ சீரியலில் நாயகனாக நடித்த டிக்டாக் பிரபலம் சித்துவுக்கும் அண்மையில் திருமணம் நடந்து முடிந்தது. இந்த ஜோடிக்கு இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் அதிகம். திருமணத்துக்குப் பின்னர் ஸ்ரேயா நடிக்கும் முதல் சீரியல் என்பதால், ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த சீரியலில் ஸ்ரேயா அஞ்சனுக்கு ஜோடியாக அருண் நடிக்கிறார். ப்ரீத்தா சுரேஷ், சுபிக் ஷா, ரக் ஷித் ராஜ், ஹேமந்த் குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஒரு பெரிய குடும்பத்தின் சுமையை தனியாகத் தாங்கும் பெண்தான் நாயகி ரஜினி. திருமணமாகி அம்மா வீட்டில் இருக்கும் அக்கா, திருமணமாகாத தங்கை, பொறுப்பில்லாத தம்பி என ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் வழிநடத்தும் நாயகி, தன் குடும்பத்துக்காகக் காதலையும் தியாகம் செய்கிறார். அவரது போராட்ட குணத்தைப் பார்த்து காதலில் விழுகிறார் நாயகன்.
இப்படியாக ‘ரஜினி’யின் கதைக்களம் அமைக்கப்பட்டிருக்கிறது. எங்கேயோ பார்த்த ஞாபகம் வருகிறதல்லவா? சுஜாதா நடிப்பில் வெளியான ‘அவள் ஒரு தொடர் கதை’ படத்தின் நவீன வடிவம் தான் இந்த சீரியல். மேலும், சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘கயல்’ தொடரும் இதே ஸ்டோரி லைன்தான்.
‘ரஜினி’ ப்ரொமோ வெளியானதுமே, அச்சு அசல் அப்படியே ‘அவள் ஒரு தொடர் கதை’ படத்தைப் போன்று இருப்பதாக கமென்ட்டுகள் குவிந்தன. கதையின் கரு ஒன்றென்றாலும், ப்ரொமோ இன்றைய காலகட்டத்துக்கு ஏற்ற அம்சங்களுடன் ரசிக்கும்படியாகத்தான் உள்ளது. ரஜினியும் டிசம்பர் 27 முதல், தினமும் இரவு 9.30 மணிக்கு ஜீ தமிழில் ஒளிபரப்பாகத் தொடங்கி இருக்கிறது!