‘சுட்டி சர்வேஷ்’ எனக்குக் கிடைச்ச கிஃப்ட்!

By அஸ்வினி சிவலிங்கம்

சின்னத்திரையில், நாயகிகள் பலரும் ஒருசில சீரியல்களோடு காணாமல் போய் விடுகின்றனர். வெகுசிலர் மட்டுமே தங்களுக்கான இடத்தைத் தக்கவைத்துக் கொள்கின்றனர். அப்படியான ஒருவர்தான் ஸ்ருதி ராஜ். தென்றல் ‘துளசி’யாக சின்னத்திரைக்கு அறிமுகமானவர். தற்போது, தாலாட்டு சீரியல் மூலம் ‘இசை’யாக ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.

சன் டிவியில் நான்கு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த ‘அழகு’ சீரியல், கரோனா லாக் டவுணில் திடீரென நிறுத்தப்பட்டது. சீரியல் நாயகியான ஸ்ருதி இதை மிகுந்த வருத்தத்துடன் இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்தார். அடுத்ததாக, சிறு இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் சன் டிவியில் ‘தாலாட்டு’ சீரியலில் நடிக்க ஒப்பந்தம் ஆனதை மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

தாலாட்டு சீரியலில் மூன்று வயது சிறுவனுக்கு அம்மாவாக, நடிப்பில் எமோஷன்ஸை அள்ளித் தெளிக்கிறார் ஸ்ருதி. ‘இசை அம்மா’வுக்கு இன்ஸ்டாவில் பல ஃபேன் பக்கங்கள் உள்ளன. அழகு சீரியல் டிராப் ஆனதால் அப்செட்டில் இருந்தவருக்கு, இசை மகிழ்ச்சி மழையைக் கொட்டிக் கொண்டிருக்கிறது.

கிருஷ்ணா, சர்வேஷ், ஸ்ருதி

அந்தக் கொண்டாட்டத்தில் ‘தாலாட்டு’ நாயகன் கிருஷ்ணா மற்றும் சுட்டி சுந்தர் ஆகியோருடன் இணைந்து ஜாலியாக ரீல்ஸ் வீடியோ பகிர்ந்துவரும் ஸ்ருதியிடம், இந்த வருடம் உங்களுக்கு எப்படிப் போச்சு என்ற ஒற்றைக் கேள்வியைக் கேட்டோம்.

“கரோனாவின் தாக்கம், மழை வெள்ளம் போன்ற விஷயங்கள் என்னை ரொம்ப பாதிச்சிடுச்சு. என்னைச் சுற்றியிருந்த சிலரும் கரோனாவால் பாதிக்கப்பட்டதை எல்லாம் மறக்கவே முடியாது. இதுமாதிரியான இக்கட்டான சூழல்கள் திரும்பவும் வரக்கூடாதுன்னு கடவுளை வேண்டிக்கிறேன். மத்தபடி இந்த வருஷம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். இசை கதாபாத்திரம் எனக்கு நல்ல ரீச் கொடுத்திருக்கு.

ஆன்ஸ்கிரீனில் விஜய் - இசை - சுந்தர் காம்போ எப்படி அன்பா, மகிழ்ச்சியா இருக்காங்களோ, ஆஃப்ஸ்கிரீன்லேயும் அப்படித்தான் இருப்போம். என்னுடைய பையனா நடிக்கிற நாலு வயசு குட்டிப் பையன் சர்வேஷ், லைஃப்ல எனக்குக் கிடைச்ச கிஃப்ட். அவன நான் ‘பட்டு’ன்னு தான் கூப்பிடுவேன். என்மேல ரொம்ப அன்பா இருப்பான். இந்த வருஷம் ரொம்ப ஸ்பெஷல்னு சொன்னதுக்கு பட்டுவும் முக்கிய காரணம்.

சர்வேஷ் குட்டி எனக்கு உண்மையான அன்பை மட்டும்தான் கொடுக்கிறான். ‘இசை அம்மா... இசை அம்மா’ன்னு ஷூட்ல என் கூடவே சுத்திட்டு இருப்பான். எனக்கு கிடைச்ச இன்னொரு புது நண்பர் கிருஷ்ணா. நல்ல மனிதர். நாங்க இருவரும் நிறைய விஷயங்கள் பகிர்ந்துப்போம். ஈகோ இல்லாத நட்பு அவருடையது. அடுத்த வருஷமும் இதேபோன்ற நட்பு வட்டம் தொடரணும்; ஹேப்பியா இருக்கணும். நான் ஈசியா கன்வின்ஸ் ஆகிடுவேன். எல்லாரையும் நம்பிடுவேன். அதனால நிறைய ஹர்ட் ஆகியிருக்கேன். இந்த இயல்பைக் கொஞ்சம் மாத்திக்கணும்னு நினைக்கிறேன். புது வருஷத்துக்கான என்னோட விஷ் இதுதான்” என்று உற்சாகத் துள்ளலுடன் சொல்லிவிட்டு, சீரியலின் அடுத்த ஷாட்டுக்கு ரெடியானார் ஸ்ருதி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE