அறுபதுகளில் தொடங்கி இன்றுவரை குணச்சித்திர நடிப்பில் தனக்கென ஒரு இடத்தைத் தக்கவைத்திருப்பவர், பழம்பெரும் நடிகை எஸ்.என்.பார்வதி.
சாந்தமான அம்மாவா... வில்லத்தனமான மாமியாரா... எந்தக் கதாபாத்திரத்துக்கும் கச்சிதமாக பொருந்திப்போகும் முகம். பேசும்போதே அவருக்குள் இருக்கும் நடிப்பு என்னும் கலை மீதான காதல் தெறித்து விழுகிறது. கிட்டத்தட்ட நான்கு தலைமுறை நடிகர்களுடன் நடித்துவிட்டார். சொந்த வாழ்க்கை, சினிமா, நாடகம், சிவாஜி, ஜெயலலிதா, கமல், மனோரமா என பல்வேறு விஷயங்கள் பற்றிப் பேசியவர், இன்று எம்ஜிஆரின் 34-வது நினைவு தினம் என்றதும் அவர் பற்றியும் நெகிழ்ந்து பேசினார். அதற்கு முன்பாக பார்வதி நடிக்க வந்த ஃப்ளாஷ் பேக்கைக் கேட்போம்.
“நான் பொறந்தது பர்மா. அங்க கலவரம் வெடிச்சப்போ தப்பிப் பிழைச்சு குடும்பத்தோட சென்னைக்கு வந்தோம். எனக்கு அப்போ 13 வயசு இருக்கும். எனக்கு 2 தங்கச்சி, ஒரு தம்பி. நான் ஸ்கூல் படிச்சிட்டு இருந்தேன். குடும்பத்துல பணக் கஷ்டம். அந்த சமயத்துல, அப்பாக்கு தெரிஞ்ச ஒருத்தர், ‘நாடக கம்பெனிக்கு ஒரு நடிகை தேவைப்படுது. உங்க பொண்ணு ஸ்கூல் மேடையில நல்லா நடிக்கிறதப் பார்த்தேன். இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க. அவங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு’ன்னு சொன்னார்.
இதுக்கு அப்பா உடனே சம்மதிக்கல. ‘என் வறுமையப் போக்க என் மகளை நடிக்க அனுப்பணுமா?’ ன்னு அதிர்ச்சியில் அப்படியே சரிஞ்சிட்டார். அப்புறமா, அம்மாதான் அப்பாவை சமாதானப்படுத்தி என்னைய நடிக்க அனுப்புனாங்க. அத்தோட படிப்புக்கு முழுக்குப் போட்டாச்சு.
1958-ல் நான் நடிச்ச முதல் நாடகம் `தீர்ப்பு’. அதற்கு நான் வாங்கிய சம்பளம் 5 ரூபாய். என்னோட சம்பாத்தியத்தை வெச்சு அம்மா ஓரளவுக்கு வீட்டுச் செலவுகள சமாளிச்சாங்க. குடும்ப வறுமையைப் புரிஞ்சுட்டு ஓடி ஓடி உழைச்சேன். சினிமா வாய்ப்பும் தேடி வந்துச்சு. சினிமாவுல நடிச்சாலும் நாடக மேடைகள விடல.
சென்னையில வாடகை வீட்லதான் இருந்தோம். எனக்கு கல்யாணம் ஆகி 2 குழந்தைகள் பிறந்தாங்க. அப்பவும் நான் என் அப்பா, அம்மா, தங்கைகள கைவிடல. என் ரெண்டு தங்கைகளுக்கும் எங்க வசதிக்கும் ஏத்த மாதிரி நடுத்தர குடும்பத்துல கல்யாணம் பண்ணி வெச்சோம். அதன் பிறகு என் அப்பா தவறிட்டார். அப்பாவுக்காக நின்னு அழுகக் கூட எனக்கு நேரமில்ல. மூணாம் நாள் காரியம் முடிஞ்சு சொந்தபந்தங்கள் போனதும் பாத்ரூம்ல நின்னு வெடிச்சு அழுதேன்; கதறினேன். அப்பான்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும். எனக்கு ஒரேயொரு வருத்தம் என்னன்னா... நான் ஓடி ஓடி உழைச்சத மட்டுமே பார்த்த அப்பா, நான் வீடு வாசல் வாங்கினத பார்க்கல. அவர் இருந்திருந்தா ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பார்.
கிட்டத்தட்ட 5 ஆயிரம் நாடகம் நடிச்சிட்டேன். ஒரே நாள்ல 7 நாடகம் நடிச்சு சாதனையெல்லாம் பண்ணியிருக்கேன். உச்ச நட்சத்திரங்கள் கூட எல்லாம் நடிச்சாச்சு. இப்போ எனக்கு 75 வயசாகுது. இன்னும் தெம்பா கிளம்பி சீரியல் ஷூட்டிங் போறேன். நான் வாழ்நாள் முழுக்க நெனச்சு நெகிழ இந்த நினைவுகள் போதும். நடிக்க கூப்பிட்டா என்னால முடியாதுன்னு ஒருபோதும் சொல்லமாட்டேன். கடவுள்கிட்ட வேண்டுறதும் ஒண்ணு மட்டும் தான். என் கடைசி காலம் வரைக்கும் நடிச்சிட்டு இருக்கணும்” என்று சொல்லிச் சிரிக்கிறார் எஸ்.என்.பார்வதி
அவரிடம், “உங்களுக்குப் பிடிச்ச நடிகர் நடிகை பத்தி சொல்லுங்க?’’ என்றோம்.
“எனக்கு எப்பவுமே ரெண்டு பேரோட நடிப்பு ரொம்பப் பிடிக்கும். அது சிவாஜி கணேசன் அண்ணனும், சாவித்ரியும் தான். சிவாஜி அண்ணா நடிகர் திலகம்னா, சாவித்ரி அக்கா நடிகையர் திலகம். இப்போலாம் ஹீரோயின் ஸ்லிம்மா இருக்கணும்னு எதிர்பார்க்குறாங்க. ஆனா அந்த காலத்துல, அப்படியெல்லாம் இல்ல. சாவித்ரி கொடியிடையாள் கிடையாது. அவங்க நல்லா தடிப்பு தான். ஆனா, அவங்க போடாத வேஷமே கிடையாது. அவங்களோட நடை உடை, சுறுசுறுப்பு யாருக்கும் வராது. ஷூட்டுக்கு அரை மணிநேரம் முன்னாடியே வந்திருவாங்க.
சிவாஜி கணேசன் அண்ணனும் அப்படிதான். 7 மணிக்கு ஷூட்டிங்ன்னு சொன்னா 6.45-க்கு மேக் அப், ட்ரெஸ்சிங் எல்லாம் முடிச்சிட்டு வந்து உட்கார்ந்திருப்பார். நான் அவரை கணேஷ் அண்ணான்னு தான் கூப்பிடுவேன். அவரோட நடிச்ச முதல் படம் ‘கலாட்டா கல்யாணம்’. நான் ஒரே சீன்ல மட்டும் நாடக ஆர்டிஸ்டா வருவேன். கதைப்படி கணேஷ் அண்ணனும், நாகேஷ் சாரும் சேர்ந்து மனோரமா அக்காவை அங்க வரவெச்சி சின்ன டிராமா பண்ணுவாங்க. அதில் நான் அண்ணனுக்கு அம்மாவா நடிக்கணும்.
அவர் ஒரு இமயம். அவர்கூட நடிக்கணும்னு சொன்னதும் கை கால்லாம் நடுங்கிடுச்சு. அவர் வல்லினம், மெல்லினம், இடையினம்லாம் பாக்குற ஆளு. மிஸ்டர் பெர்ஃபெக்ட். எனக்கு டைலாக் வருமான்னு மனசுக்குள்ள பயம். அவரை பார்த்ததும் `வணக்கம்ணே’ன்னு சொன்னேன். அதுக்கு அவரு `வணக்கம்... வணக்கம் நீதான் அந்த வேஷம் பண்றியா’ன்னு கேட்டார். அப்புறம் ரிகர்சல் பார்க்கக் கூப்பிட்டாங்க. அண்ணன் முன்னாடி நடிக்கவே வரல. ஏதேதோ உளறினேன். அவர் என் பதற்றத்த புரிஞ்சிக்கிட்டு, ‘ஏன் பயப்பட்ற... என்ன உன் பிரச்சினை?’ன்னு கேட்டார். அப்பவும் நாக்குச் சுழன்று பேச்சே வராம நின்னேன்.
என்னை பக்கத்தில் கூப்பிட்டு, ‘இங்க பார்... நான் கணேஷ் அண்ணன் இல்ல. நான் இந்தப் படத்துல ஒரு நடிகர். பயப்படாம பண்ணு’ன்னு அந்த சீனை விவரிச்சார். எனக்கு பயம் தெளிஞ்சு தைரியம் வந்துருச்சு. என்னோட டயலாக்கை என் பாணியில் பேசினேன். `என்னய்யா பெருசா கேட்றப் போறேன். அய்ய... சிங்கிள் சாயா தான் கேட்பேன்’ன்னு வசனம் பேசி முடிச்சதும், கணேஷ் அண்ணன் சிரிச்சிட்டார். அப்பல்லருந்து என்னைய அவர் சாயான்னு தான் கூப்பிடுவார். இப்பவும் பிரபு தம்பி என்ன பார்த்தா ‘சாயா அத்தை’ன்னுதான் கூப்பிடும்.
`இமயம்’ படம் ஷூட்டிங் நடந்தப்போ, அண்ணனுக்கு சமையல் செஞ்சு பரிமாறும் வாய்ப்பு கெடச்சது. அவர் பொதுவா அசைவம் விரும்பி சாப்பிடுவார். அந்தப் படத்தோட ப்ரொடக்ஷன் கம்பெனி முக்தா பிலிம்ஸ்ல சைவ சாப்பாடுதான் கொடுப்பாங்க. நேபாளத்துல ஷூட்டிங் நடந்துட்டு இருந்துச்சு. அண்ணனோட போர்ஷன் முன்னாடியே ஷூட் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. நான், ஸ்ரீபிரியால்லாம் அதன்பிறகு தான் அங்க போனோம். நான் வர்றத கேள்விப்பட்ட கணேஷ் அண்ணன், `ஓ சாயா வராங்களா... வந்ததும் என்னை வந்து பார்க்கச் சொல்லு’ன்னு ப்ரொடக்ஷன்ல சொல்லியனுப்பினார். அந்த நபர் வந்து சொல்றதுக்குள்ள அவரே எங்க ஹோட்டலுக்கு வந்துட்டார்.
அண்ணன் எனக்காக காத்துட்டு இருக்கார்ன்னு தெரிஞ்சதும் பதறி அடிச்சு ஓடிப்போனேன். ‘நாலு நாளா நான் ரொம்ப வெந்து போயிருக்கேன். இங்க எனக்கு கடிக்க ஒண்ணுமே கொடுக்கல. நீ அசைவம் நல்லா சமைப்பன்னு கேள்விப்பட்டேன். எனக்கு பண்ணிக் கொடு’ன்னு அண்ணன் கேட்டார். அப்பவே என் ஹோட்டல் ரூமைக்கூட பூட்டாம மேனேஜரக் கூப்டுக்கிட்டு நேபாள் மார்க்கெட் போய்ட்டேன். அங்க போய் பார்த்தா ஒவ்வொரு கோழியும் நாலு கிலோ இருக்கு. எனக்கு ஒட்டுமொத்த டீமுக்கும் சமைச்சுப் போடணும்னு தோணுச்சு. மூணு கோழி வாங்கிட்டேன். கிட்டத்தட்ட 10 கிலோ சிக்கன் இருக்கும். எல்லாத்தையும் வாங்கிட்டு வந்தா, ப்ரொடக்ஷன்ல ‘இங்கே நான்வெஜ் சமைச்சு பாத்திரங்கள அழுக்காக்கிடாதேள்... இதை அதுல கலக்காதேள், அதை இதுல கலக்காதேள்’ன்னு கண்டிஷன் போட்டாங்க. பாத்திரம் இல்லாம எப்படி சமைக்குறதுன்னு சண்டை போட்டுட்டு, அந்த நேபாள் ஹோட்டல்காரன்கிட்டயே பாத்திரங்களை வாங்கி சமைச்சு முடிச்சேன்.
அண்ணனுக்கு பெரிய கேரியர்ல போட்டுக் கொடுத்தேன். அப்புறம் லைட் மேன், ஆர்டிஸ்ட்ன்னு மத்த எல்லாருக்கும் என் கையால நானே பரிமாறினேன். எல்லாரும் சாப்பிட்டு, ‘அக்காவுக்கு ஜே’ன்னு கத்தினாங்க. எனக்கு சந்தோஷம் தாங்கமுடியல. மறுநாள் ஷூட்ல என்னைப் பார்த்த கணேஷ் அண்ணன், `சாயா பிரமாதப்படுத்திட்ட போ... சமையல் ஏ ஒன்’னுன்னு பாராட்டினார். அவர் யார்கிட்ட என்னப்பத்தி சொன்னாலும், எனக்குப் பிடிச்ச தங்கச்சி சாயா தான்னு சொல்லுவார்.
அதே மாதிரி மனோரமா அக்காவும் என்னைச் செல்ல தங்கச்சின்னு தான் சொல்லும். அவங்களுக்கு உடம்பு முடியாம போனப்போ நான் அவங்க வீட்டுக்குப் போனேன். தனியாப் படுந்திருந்தத பார்த்து எனக்கு கண்ணீர் முட்டிடுச்சு. அப்புறம் என்கிட்ட கதை கதையா பேசிணுச்சு. ‘பேச்சுத் துணைக்குக்கூட ஆளில்லடி. கால் வலி உயிர்ப்போகுது’ன்னு புலம்புச்சு. ‘நான் கால் பிடிச்சு விட்றேன்கா’ன்னு காலைத் தொட்டேன். வெடுக்குனு காலை இழுத்துக்கிட்டு, ‘என்னடி நீ என் காலை போய் புடிச்சிக்கிட்டு’ன்னு கண் கலங்குச்சு.
‘அட காலக் குடுக்கா. உன் கால தொட்டாவாச்சு உன் ரத்தத்துல ஓடுற நடிப்பு எனக்கு வருதான்னு பார்ப்போம்’னு கால பிடிச்சுவிட்டேன். நான் கிளம்புறேன்னு சொன்னப்போ விடவேயில்ல. ‘கொஞ்சம் நேரம் இருடி’ன்னு கெஞ்சுணுச்சு. கிட்டத்தட்ட மூணு மணிநேரம் பேசினோம். அதன் பிறகு அக்கா குரலைக் கேட்கவேப் போறதில்லைன்னு எனக்கு தெரிஞ்சிருந்தா இன்னும் நிறையா நேரம் பேசியிருப்பேன்’’ என்று கண் கலங்கினார் பார்வதி.
அவரை கொஞ்சம் ஆசுவாசப்படுத்திவிட்டு, “ரெண்டு முன்னாள் முதலமைச்சர் கூடவும் நடிச்சிருக்கீங்க, அவங்களப் பத்தி சொல்லுங்களேன்’’ என்றோம்.
“ரெண்டு முதலமைச்சர் இல்ல, மூணு முதலமைச்சர் கூடவும் எனக்கு நல்ல நட்பு இருக்கு. எம்ஜிஆர் அண்ணன்கிட்ட நிறையா நல்ல விஷயங்கள் இருந்தாலும் நான் நேர்ல பார்த்து வியந்த விஷயம் ஒண்ணு இருக்கு. வீட்டுக்கு வர்றவங்கள வயிறு நிறையா சாப்பிட வெச்சுதான் அனுப்புவார். சொன்னா நம்பமாட்டீங்க... ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அவர் வீட்ல இருந்து வர சாப்பாட்டை 30 பேருக்கு மேல சாப்பிடுவாங்க. மத்தவங்கள பசியாற சாப்பிட வெச்சுப் பார்த்து ரசிச்ச மனுஷன் அவர். அவர் வீட்ல அடுப்பே அணைஞ்சது கிடையாது. வர்றவங்க எல்லாருக்கும் டீ, காபி, சாப்பாடுன்னு கேட்டுக் கேட்டுக் கொடுப்பாங்க.
வீட்டுக்கு வர்றவங்ககிட்ட அவர் கேட்குற முதல் கேள்வியே `சாப்ட்டியா’ன்னு தான். அதுக்கு அப்புறம்தான், ‘என்ன விஷயமா வந்தீங்க?’ன்னு கேட்பாரு. தானம், தர்மத்துக்குப் பேர் போனவர். என்னை, ‘ஸ்பிரிங் தலை பார்வதி’ன்னுதான் செல்லமா கூப்பிடுவாரு. கலகலன்னு பேசுவாரு. அவர் கூட `நான் ஏன் பிறந்தேன்’ படத்துல நடிச்சேன். ’நான் பாடும் பாடல் நலமாக வேண்டும்’ பாட்டு என்னை வெச்சுதான் ஆரம்பிக்கும்.
அந்த படத்துல காஞ்சனாவுக்கு அத்தையா நடிச்சிருப்பேன். நடிப்புல அவர் புத்தகம் மாதிரி. எத்தனை தலைமுறை வந்தாலும் அவர் புகழ அழிக்க முடியாது. எல்லாருக்கும் சாவு வரும் ஆனா எம்ஜிஆர் அண்ணனுக்கு மட்டும் சாவே வராதுன்னு நெனச்சேன். ஆனா, மனுஷனா பிறந்தா, இறப்பு கண்டிப்பா இருக்கும். அப்படித்தான், `நீ சேவை செஞ்சது போதும். ரெஸ்ட் எடு’ன்னு அண்ணன கடவுள் கூட்டிட்டுப் போய்ட்டாரு.
ஜெயலலிதா அம்மா ரொம்ப அமைதி. என்னோட வயசுல சின்னவங்கதான். ஒண்ணா படம் நடிச்ச காலக்கட்டத்துல ஷூட்டிங் ஸ்பாட்ல அவங்ககிட்ட சகஜமா பேச முயற்சி பண்ணுவேன். ஆனா, யார்கிட்டயும் அதிகமா பேசமாட்டாங்க. நாம கேட்குற கேள்விக்கு சிரிச்ச முகத்தோட பதில் சொல்லுவாங்க. எப்பவுமே புத்தகம் படிச்சிட்டே இருப்பாங்க. நடிக்குற நேரம்போக மிச்சநேரம் முழுக்க புக்கும் கையுமா தான் இருப்பாங்க. சுத்தி நடக்கும் எதையுமே கண்டுக்கமாட்டாங்க. இப்படி புத்தகங்கள படிச்சு, உள்வாங்கி, அறிவை கூர்மையாக்கி தான் ஸ்டேட்டுக்கே முதலமைச்சரா வந்திருக்காங்க.
என் வீட்ல கலைஞர் அப்பா போட்டோ நிறைய இருக்கும் கவனிச்சீங்களா. ஏன்னா, அவர் எனக்கு கடவுள். மிகைப்படுத்தல. எனக்கு உயிர் பிச்சைப் போட்ட கடவுள் தான் அவரு. எனக்கு ரெண்டாவது பிரசவத்தப்போ மருத்துவர் ஊசியை மாத்திப் போட்டுட்டாங்க. அது எனக்கு அலர்ஜி ஆகிருச்சு. மூச்சுப்பேச்சு இல்லாம விழுந்துட்டேன். என்ன தூக்கிட்டு ராயபேட்டை ஆஸ்பத்திரிக்குப் போனாங்க. அங்க என்னை செக் பண்ணிட்டு. `இந்த கேஸ் அவ்வளவுதான். பிழைக்கிறது கஷ்டம்’ன்னு கைவிரிச்சுட்டாங்க.
ராஜாத்தி அம்மா எனக்கு க்ளோஸ் ஃப்ரெண்டு. என் பையனுக்கு அப்போ சின்ன வயசு. என் வீட்டு சர்வன்ட்ட கூட்டிக்கிட்டு ராஜாத்தி அம்மா வீட்டுக்கு போன எம் பையன், ‘அத்தே... அம்மாவுக்கு இப்படி ஆகிருச்சு’ன்னு அழுதிருக்கான். உடனே அவங்க கலைஞர் அண்ணனுக்கு கால் பண்ணி சொல்லியிருக்காங்க. அண்ணன் முதல்வரா இருந்த காலக்கட்டம் அது. அவர் நெனச்சிருந்தா யார்கிட்டயாச்சும் சொல்லி ஆஸ்பத்திரிக்கு பேசியிருக்கலாம். ஆனா, அவரே போன் போட்டு மருத்துவர்கள்ட்ட பேசியிருக்கார்.
`நான் சிஎம் பேசுறேன். அங்க எஸ்.என்.பார்வதி அட்மிட் ஆகியிருக்காங்க. நல்ல செய்திதான் வரணும். நான் டெல்லி போறேன். திரும்ப வர்றப்ப அவங்க குணமாகியிருக்கணும்’ன்னு சொல்லியிருக்கார். அதுக்குள்ள, என்னைய காப்பாத்த முடியாதுன்னு வேன்ல ஏத்தி வீட்டுக்கு அனுப்பிட்டாங்க. வேன் ஆஸ்பத்திரி வாசலை தாண்டுறதுக்குள்ள டாக்டர்ஸ் ஓடிவந்து அழைச்சிட்டு போய் திரும்பவும் அட்மிட் பண்ணி, பிழைக்க வெச்சாங்க. கலைஞர் எனக்கு அண்ணனாகவும், அப்பாவாகவும் இருந்தார். அவர் இல்லாட்டி நான் இன்னைக்கு இப்படி உங்ககூட பேசிட்டு இருந்திருக்க மாட்டேன்” மீண்டும் கண்கள் நனைய, சேலைத் தலைப்பால் துடைத்துக் கொண்டு நமக்கு விடைகொடுத்தார் எஸ்.என்.பார்வதி