கலகக்கார கலைஞன் - சாமுவேல் எல் ஜாக்சனின் பிறந்தநாள் இன்று

By காமதேனு

நிறவெறி ஊறிப்போன ஹாலிவுட் திரை உலகில் இன்றுவரை, கறுப்பின மக்களுக்கான இடத்தை போராடிப்பெற வேண்டிய சூழல் இருக்கிறது. வெளிப்படையாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக ஹாலிவுட்டில் நிறவெறி இன்றும் இருந்துவருகிறது. அதைத் தகர்த்து உலக அளவில் புகழ்பெற்ற கறுப்பின நடிகர்கள் வெகுசிலரே. அதில் முக்கியமானவர் சாமுவேல் எல் ஜாக்சன். தன்னுடைய 73-வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார் சாமுவேல் எல் ஜாக்சன்.

‘பல்ப் ஃபிக்‌ஷன்’ (1994)

சமூகப் போராட்ட வாழ்க்கை

1948-ம் ஆண்டு டிசம்பர் 21-ம் தேதி அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் சாமுவேல் லிராய் ஜாக்சனாகப் பிறந்து பின்னாளில் சாமுவேல் எல் ஜாக்சனாக மாறினார். ஆரம்பக் காலம் முதலே அம்மாவின் கவனிப்பில் வளர்ந்த ஜாக்சன், நிறவெறி பாகுபாடுகளை கடைபிடித்த பள்ளிக்கூடங்களிலேயே தன் பள்ளிப்படிப்பை முடித்தார். 1968-ம் ஆண்டு மார்டின் லூதர் கிங் ஜூனியர் படுகொலை செய்யப்பட்டது, அட்லாண்டாவில் உள்ள மோர்ஹவுஸ் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த சாமுவேல் எல் ஜாக்சன் வாழ்க்கையில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. கறுப்பின மக்களுக்கான உரிமையை நிலைநாட்டப் போராடிய பல அமைப்புகளுடன் இணைந்து செயல்பட ஆரம்பித்தார் ஜாக்சன். இவருடைய தீவிரமான அரசியல் செயல்பாட்டால் 2 வருடம் கல்லூரியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அந்தக் காலகட்டங்களில் கறுப்பின மக்களுக்கான தீவிரவாதப் போராட்ட இயக்கங்களில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தார். அந்த இயக்கங்கள் ஆயுதங்களை வாங்கி, ஆயுதம் ஏந்திய போராட்டத்தை முன்னெடுக்க முயற்சிகள் எடுத்துவந்த சமயத்தில் சாமுவேல் எல் ஜாக்சன் அதன் ஒரு அங்கமாக இருந்தார். இந்தக் குழுக்களைக் கவனித்து வந்த அமெரிக்க எஃப்.பி.ஐ நிறுவனம் சாமுவேல் ஜாக்சனின் தாயாரிடம், ஜாக்சன் தொடர்ந்து இந்தப் பாதையில் பயணித்தால், ஒரே வருடத்தில் உயிரிழக்க நேரிடும் என்று எச்சரிக்கை செய்ததைத் தொடர்ந்து அவரது தாயார் அவரை லாஸ்ஏஞ்சல்ஸுக்கு அனுப்பி வைத்தார். பிறகு மீண்டும் பட்டப்படிப்பை முடித்த ஜாக்சன், தொடர்ந்து மேடை நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

டாரன்டினோவுடன் சாமுவேல் எல் ஜாக்சன்

திரை வாழ்க்கை

மேடை நாடகங்களில் ஆரம்பித்து, தொலைக்காட்சி தொடர்கள், திரைப்படங்கள் என நடிக்க ஆரம்பித்தார். ஆரம்ப காலகட்டங்களில் சின்ன சின்ன பாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்து, 1988-ல் பிரபல இயக்குநரான ஸ்பைக் லீ அவர்களின் அறிமுகம் கிடைத்த பிறகு, அவருடைய திரைப்படங்கள் மூலம் கவனம்பெற ஆரம்பித்தார் ஜாக்சன்.

பல்ப் ஃபிக்‌ஷன்

1990-கள் ஜாக்சனுக்கு மிகவும் சவாலான கட்டங்களாக இருந்தன. ஹெராயின் மற்றும் கொக்கைனுக்கு அடிமையான சாமுவேல் எல் ஜாக்சன், பிறகு அந்த போதையிலிருந்து விடுபட்டு வெகுசில நாட்களிலேயே ஸ்பைக் லீ இயக்கிய ‘ஜங்கிள் ஃபீவர்’ திரைப்படத்தில் கொக்கைன் அடிமையான கதாபாத்திரத்தில் நடித்து மிகச் சிறந்த துணை கதாபாத்திரம் நடிகருக்கான கான் திரைப்பட விழாவின் ஜூரி விருதைப் பெற்றார். இக்காலகட்டங்களில், புகழ்பெற்ற கறுப்பின நடிகரான மோர்கன் ஃப்ரீமேனின் வழிகாட்டுதல்கள் சாமுவேல் எல் ஜாக்சனின் வாழ்க்கையை சரியான பாதையில் திருப்பியது. குவின்டின் டாரன்டினோ திரைக்கதை எழுதி, டோனி ஸ்காட் இயக்கிய ‘ட்ரூ ரோமன்ஸ்’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் டாரன்டினோவின் சிநேகம் கிடைத்த ஜாக்சன், ‘பல்ப் ஃபிக்‌ஷன்’ திரைப்படத்தில் ஜூல்ஸ் வின்ஃபீல்டு கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த கதாபாத்திரம் ஜாக்சனை உலக அளவில் புகழ்பெற வைத்தது. இன்றளவும் சாமுவேல் எல் ஜாக்சன் என்று சொன்னதும் நினைவுக்கு வரும் கதாபாத்திரமாக ஜூல்ஸ் வின்ஃபீல்டு கதாபாத்திரம் இருக்கிறது.

பைபிள் வசனங்களைச் சொல்லி கொடூர கொலைகள் செய்வதும், தன்னிடம் கொள்ளையடிக்க வந்த கொலைகாரனை மடக்கிப்பிடித்து மிகச் சாந்தமாக உரையாடுவது என ஜூல்ஸ் வின்ஃபீல்டு கதாபாத்திரத்தை சாமுவேல் எல் ஜாக்சனை மனதில் கொண்டே, டாரன்டினோ பிரத்தியேகமாக உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘பல்ப் ஃபிக்‌ஷன்’ திரைப்படத்தில் ஆரம்பித்த சாமுவேல் எல் ஜாக்சனின் ஏறுமுகம் தொடர்ந்து இன்று மார்வல் திரைப்படங்கள் சூப்பர் ஹீரோ நிக் ஃபூரி கதாபாத்திரம்வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

வணிகத் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்தாலும் கறுப்பின மக்களின் ஹாலிவுட் இருப்பை உறுதி செய்யும், ஒரு அசைக்க முடியாத காரணியாக இன்று மட்டுமல்ல என்றும் இருப்பார் சாமுவேல் எல் ஜாக்சன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE