மரபுகளைத் தகர்த்த கலைஞன் - கிம் கி டுக் பிறந்த நாள் இன்று

By விக்கி

உலகம் முழுக்க இருக்கும் சினிமா ரசிகர்களின் மனங்கவர்ந்த தென் கொரிய இயக்குநர் கிம் கி டுக் பிறந்த தினம் இன்று.

தன் நிலம் சார்ந்த படங்கள் மூலமாகவே உலகின் பல்வேறு பகுதியில் இருக்கும் ரசிகர்களின் மனதைத் தொட்டவர் கிம் கி டுக். வாழும் நிலப்பரப்புகள் மாறினாலும் உலகமெங்கிலும் வாழும் மனிதர்களின் உணர்வுகள் ஒரே மாதிரி இருப்பதால்தான் கிம் கி டுக் திரைப்படங்கள் உலகின் பல மூலைகளில் இருக்கும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. ஏனென்றால், கிம் கி டுக் இயக்கிய திரைப்படங்கள் அனைத்தும் மனித மனங்களின் ஆன்ம விசாரணையாக இருக்கின்றன.

36 வயதில் ஆரம்பித்த திரைப்பயணம்:

கிம் கி டுக் திரைத் துறைக்குள் நுழைந்த விதமும் அவரது படங்களைப் போலவே புரட்சிகரமானதுதான். பாரிஸ் சென்று ஓவியக் கலையைப் படித்துவிட்டு, தன்னுடைய 36-வது வயதில்தான் தன் முதல் படமான ‘க்ரொகடைல்’ படத்தை இயக்கினார் கிம். அவர் பயின்ற ஓவியக் கலையே அவருடைய திரைப்படங்களின் காட்சிகளை வடிவமைப்பதில் அவருக்கு உதவியது. அவரது பல படங்களில் வசனங்கள் மிகக் குறைவாக இருக்கும். காட்சி ரீதியாகவே கதையை விளக்குவது அவரது தனித்தன்மை. அவருக்கும் உலக சினிமா ரசிகர்களுக்கும் இடையே இருந்த தூரத்தைச் சுருக்கியது அதுதான். அவர் சொல்லும் கதைகளை மொழி தெரியாவிட்டாலும் ரசிக்கலாம். உதாரணமாக, அவர் இயக்கிய ‘3 அயர்ன்’ திரைப்படத்தில் நாயகனுக்கும் நாயகிக்கும் இடையே உருவாகும் பந்தம் மிகவும் விநோதமானது. ஆனால், படம் முழுக்க அந்த இரண்டு கதாபாத்திரங்களும் பேசிக்கொள்ளவே மாட்டார்கள். படத்தின் இறுதியில் நாயகனைப் பார்த்து நாயகி ‘ஐ லவ் யூ’ சொல்வதைத் தவிர இருவருக்கிடையிலும் வேறு வசனமே இருக்காது.

2013-ல், குரூரமும் வன்முறையும் வழியும் ‘மொபியஸ்’ திரைப்படத்தை வசனமே இல்லாமல் எடுத்து பெரும் பரபரப்பைக் கிளப்பினார் கிம் கி டுக். ஆரம்பத்தில் தென் கொரியாவில் இப்படத்தை வெளியிடத் தடை விதிக்கப்பட்டது. வசனங்களே இல்லாமல் கதாபாத்திரங்களின் மன உலகத்துக்குள் நம்மை அழைத்துச் செல்லும் வித்தையை அறிந்தவர் கிம். “கதாபாத்திரங்களை ரசிகர்கள் உன்னிப்பாகக் கவனிக்கவிடாமல் வசனங்கள் தடையாக இருப்பதாக நான் கருதுகிறேன். அதனால்தான் வசனங்களைக் குறைக்கப் பார்க்கிறேன்” என்று ‘3 அயர்ன்’ வெளிவந்த சமயத்தில் அளித்த நேர்காணலில் அவர் சொல்லி இருந்தார்.

வசனங்கள் மூலமாகக் கதை சொல்லும் மரபைத் தகர்த்து, வசனங்கள் இல்லாமல் கதை சொல்லும் முயற்சி உலகின் பல இயக்குநர்களாலும் எடுக்கப்பட்டிருந்தாலும், கிம் கி டுக் போன்ற சிக்கலான கதைக்களத்தை வசனங்கள் இல்லாமல் கையாண்டவர்கள் யாருமில்லை. ‘மொபியஸ்’ திரைப்படத்தைப் பார்த்தால் இதற்கான அர்த்தம் புரியும்.

வன்முறைக் கலைஞர்

உலகம் முழுக்க மனிதர்களுக்குள் ஒரே தன்மையுடன் இருப்பது வன்முறை மட்டுமே. காதலின் வெளிப்பாடுகூட அந்தந்த பிராந்தியத்துக்கு ஏற்ப மாறுபடக் கூடும். கிம் கி டுக்-கின் படங்களின் அடிநாதமாகப் பெரும்பாலும் வன்முறையே இருக்கிறது. மிகைப்படுத்தப்பட்ட வன்முறையாக இல்லாமல், இயல்பாகவே மனிதர்களுக்குள் உறங்கிக்கிடக்கும் குரூரம் கொப்பளித்து வன்முறையாக வெளிப்படுவதே கிம் கி டுக்கின் திரைமொழியில் பிரதிபலிக்கிறது.

மிகைப்படுத்தப்பட்ட வன்முறையைவிட யதார்த்த வன்முறை பல மடங்கு நம்மைப் பாதிக்கிறது. நாம் அதை ஏற்க மறுக்கலாம். அப்படி ஒன்று இல்லவே இல்லை என்றுகூட நம் மனம் நம்மை நம்பச் சொல்லி நிர்ப்பந்திக்கலாம். நம் மனங்களின் அடியாழத்திலும் அதே வன்முறை ஒளிந்துள்ளது என்பதே இதற்குக் காரணம். உதாரணமாக, கிம் கி டுக்கின் மிகச்சிறந்த படைப்பாகக் கருதப்படும் ‘ஸ்பிரிங், சம்மர், ஃபால், வின்ட்டர்... அண்ட் ஸ்பிரிங்' படத்தின் ஆரம்பக் காட்சியில் புத்த மடாலயத்தில் வளரும் சிறுவன் மீன், தவளை, பாம்பு போன்றவற்றின் உடலில் கல்லைக் கட்டிவிட்டு அவை படும் அவஸ்தையை ரசிக்கும் காட்சி நம்மை உலுக்கிவிடும். படத்தின் இறுதியில் வேறு ஒரு சிறுவன் மீன், தவளை, பாம்பு வாயில் கல்லைத் திணித்து ரசித்துச் சிரிக்கும் சிரிப்பு நம்மை உறைய வைத்துவிடும். அந்தச் சிறுவனாக நம்மை நாம் உணரும் அந்தத் தருணத்தில் கிம் கி டுக் தன் திரைமொழியால் நம் மனதை வென்றெடுத்துவிட்டார்.

வன்முறையின் நேர் எதிரான கருணை, அன்பு, காதல் ஆகியவற்றையும் யதார்த்த வாழ்க்கையின் மொழியில் தன் படங்களில் அழுத்தமாகப் பதிவு செய்தார் கிம். ‘ஸ்பிரிங், சம்மர், ஃபால், வின்ட்டர்... அண்ட் ஸ்பிரிங்', ‘பேட் கய்’, ‘ட்ரீம்’ போன்ற படங்களே அதற்குச் சாட்சி.

கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி கரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்தார் கிம் கி டுக். 1996-ம் ஆண்டு திரைத்துறையில் நுழைந்து 2020-ம் ஆண்டு வரையிலான 24 ஆண்டுக்காலத்தில் மொத்தமாக அவர் இயக்கிய 24 திரைப்படங்களும் காலம் உள்ளவரை நிலைத்து நிற்கும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE