போஸ்டர்களில் பேசும் ‘ரைட்டர்’

By விக்கி

சமுத்திரக்கனி, இனியா, போஸ்வெங்கட் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘ரைட்டர்’. வரும் வாரம் வெளியாகவுள்ள இத்திரைப்படத்தின் வித்தியாசமான போஸ்டர்கள், பல ஆழமான கருத்துகளைக் கொண்டு மக்களின் கவனம் ஈர்த்துவருகிறது.

புதுமுக இயக்குநர் இயக்கும் திரைப்படம் வெளியாகும் முன்பே, இப்படியான கவனம் பெறுவது மிகவும் அரிதான ஒன்று. அத்தகைய ஆச்சரியத்துடன், ‘ரைட்டர்’ படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் மும்மரமாக இருந்த ஃப்ராங்க்ளின் ஜேக்கப்பை காமதேனு இதழுக்காகச் சந்தித்தோம்.

முதல் படத்திலேயே அழுத்தமான கதையுடன் அறிமுகமாகவுள்ளீர்கள். இந்த சினிமா ஆர்வத்துக்கான முதல் புள்ளி எது?

நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் திருச்சி திருவெறும்பூரில்தான். என் அப்பா ராணுவத்தில் பணிபுரிந்தவர். அம்மா சத்துணவு ஆசிரியை. சினிமா ஆர்வத்தில் அதை வாழ்க்கையாகவே மாற்றிக்கொண்டவர்களில் நானும் ஒருவன். ஐடிஐ முடித்துவிட்டு, ரயில்வேயில் அப்ரன்டிஸாக பணிபுரிந்துவிட்டு, பிறகு சென்னை வந்து அனிமேஷன் படிக்க ஆரம்பித்தேன். அப்போதுதான் தயாரிப்பாளர் சி.வி.குமாருடைய தொடர்பு கிடைத்தது. அவரும் ஒரு அனிமேஷன் டிசைனர் என்பதால், அவருடன் என்னால் இயல்பாகப் பேசமுடிந்தது.

அப்போது அவர், “சீக்கிரம் நான் படம் தயாரிப்பேன். அதுல வந்து வேலை பாரு” என்று சொல்லியிருந்தார். அடுத்த சில நாட்களில் ‘அட்டக்கத்தி’ படப்பிடிப்பு ஆரம்பமானது. அப்போதுதான் பா.ரஞ்சித் சாரோட உதவி இயக்குநரா சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தேன். தொடர்ந்து ‘காலா’ வரை அவருடைய எல்லா படங்களிலும் வேலை பார்த்தேன். ரஞ்சித் சாரிடம் வேலைபார்க்கும் போது நிறைய வாசிக்கவேண்டிய கட்டாயம் இருக்கும். கட்டாயத்தின் அடிப்படையில்தான் நான் வாசிக்க ஆரம்பித்தேன். அந்த வாசிப்புதான் சமூகததின் மேல், சினிமாவின் மேல் இருக்கும் என்னுடைய பார்வையை இன்னும் ஆழமாக மாற்றியது.

‘ரைட்டர்’ என்ன மாதிரியான படம்?

போலீஸ் என்ற வார்த்தை அதிகாரத்தின் அடையாளமாக இருக்கிறது. ஆனால், அந்த போலீஸ் அமைப்புக்குள் இருக்கும் அதிகாரமற்ற கடைநிலை ஊழியர்களைப் பற்றிய படமாகத்தான் ‘ரைட்டர்’ இருக்கும். அப்படி அதிகாரமற்ற கடைநிலை காவலர்கள் நாம் அன்றாடம் வாழ்க்கையில் பார்த்துக் கடக்கக்கூடியவர்கள். பொதுமக்களுடன் அவர்கள் இணைந்து இயங்கக்கூடியவர்கள். அவர்களின் கதை என்ன என்று நான் தேடிப்போகும் போதுதான், ரைட்டர் என்ற சுவாரசியமான பதவி காவல் துறையில் இருப்பதை அறிந்துகொண்டேன். சுவாரசியம் பொருந்திய ஒரு ரைட்டரின் கதையைத்தான் உங்களுக்கு இப்படம் மூலம் சொல்லப் போகிறேன்.

தமிழ் சினிமாவில் போலீஸ் பெருமைகளைப் பேசிய படங்களின் காலம் மாறி ‘விசாரணை’, ‘ஜெய் பீம்’ போன்று போலீஸ் வன்முறையைப் பேசும் படங்கள் தொடர்ந்து வருகிறது. அந்த வரிசையில் ‘ரைட்டரும்’ சேருமா?

‘விசாரணை’, ‘ஜெய் பீம்’ இது இரண்டும் நடந்து முடிந்த ஒரு சம்பவத்தின் பிரதிபலிப்பு. அநீதி இழைக்கப்பட்டவர்களின் பார்வையிலிருந்து சொல்லப்பட்ட கதைகள் அவை. இரண்டு திரைப்படங்களும் ஒரு குறிப்பிட்ட காவல் நிலையத்தையும், குறிப்பிட்ட சில அதிகாரிகளையும் மட்டுமே அடையாளப்படுத்துகிறது. ஆனால், ‘ரைட்டர்’ ஒட்டுமொத்த காவல் துறை அமைப்பைப் பற்றியும் அதில் உள்ள சிக்கலைப் பற்றியும் பேசக்கூடிய படம்.

ஃப்ராங்க்ளின் ஜேக்கப்

காவல் துறை என்பது அதிகாரக் குவியலான ஒரு பெரும் அரசு நிறுவனமாக இருக்கிறது. அதை இங்கே விமர்சனத்துக்கு உட்படுத்தும்போது, மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டிய கடமையும் இருக்கிறது. அந்த அரசு நிறுவனத்தைச் சார்ந்தே இச்சமூகம் இயங்குவதால், அந்நிறுவனத்தின் மீது நம்பிக்கை இழக்கச் செய்யும் வகையில் நம் கருத்து மாறிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன். இங்கே ஒரு பிரச்சினை இருக்கிறது. அதற்கான தீர்வு என்ன என்ற தேடலின் விடையே ‘ரைட்டர்’ படமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

ரைட்டர் ஆக சமுத்திரக்கனியைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணம் என்ன?

‘காலா’ திரைப்படத்தில் சமுத்திரக்கனி நடித்திருந்தார். அப்பொழுதிருந்தே அவரை எனக்குத் தெரியும். ‘ரைட்டர்’ ஸ்கிரிப்டை ரஞ்சித் சாரிடம் காட்டியபோது அவர்தான் “சமுத்திரக்கனி நடித்தால் நன்றாக இருக்கும் அவரிடம் கேட்டுப்பார்” என்றார். சமுத்திரக்கனியும் ஸ்கிரிப்டை படித்துவிட்டு, உடனே ஓகே சொல்லிவிட்டார். ‘ரைட்டர்’ கதாபாத்திரத்துக்கு சமுத்திரக்கனியைத் தேர்ந்தெடுத்தது நான் அல்ல; ரஞ்சித் சார்தான்.

படத்தின் வித்தியாசமான போஸ்டர்களின் பின்னணி என்ன?

டிசைனர் சந்தோஷ் நாராயணன் மற்றும் கபிலன் இருவரும்தான் இந்த போஸ்டர்களின் வெற்றிக்கு முக்கிய காரணம். டிசைனர் சந்தோஷ் நாராயணன் மினிமலிஸ்டிக் முறையில் டிசைனிங் செய்வதில் மிகவும் திறமை வாய்ந்தவர். அவர் ‘ரைட்டர்’ படத்தின் திரைக்கதையில் எழுத்தாளராகவும் பங்காற்றியிருக்கிறார். அதனால் அவருக்குத் திரைக்கதையின் முழுப் பரிமாணமும் தெரியும் என்பதால், அதைச் சரியாக உள்வாங்கிக் கொண்டு திரைக்கதையின் தன்மைக்கேற்ப மிக அட்டகாசமான போஸ்டர்களை அவரால் உருவாக்க முடிந்திருக்கிறது.

நீண்ட இடைவேளைக்குப் பிறகு இனியா மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க உள்ளார். ‘ரைட்டர்’ படத்தில் அவருடைய கதாபாத்திரம் என்ன?

கரோனா பெருந்தொற்று கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்ட நேரத்தில்தான் ‘ரைட்டர்’ படத்தை எடுத்து முடித்தோம். தஞ்சாவூர், திருச்சி, சென்னை என்று மூன்று ஊர்களில் படப்பிடிப்பை நடத்தினோம். யாராவது ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டாலும் 21 நாட்கள் படப்பிடிப்பை நிறுத்தவேண்டும் என்ற பயத்துடன், கவனமாகப் படப்பிடிப்பை நடத்தினோம்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் எனக்கு நடிகர்களைத் தேர்ந்தெடுப்பதே பெரிய சவாலாக இருந்தது. இப்படத்தில் வரும் ஒரு பெண் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்துக்கான நடிகையை தேடினோம். இயல்பான நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவராகவும், குதிரை ஏற்றம் தெரிந்தவராகவும் இருந்தால்தான் இந்த கதாபாத்திரத்தைச் சிறப்பாகச் செய்யமுடியும். இந்த ஐடியாவுடன் நாங்கள் தேடிய போதுதான் இனியாவுக்கு குதிரை ஏற்றம் தெரியும் என்ற செய்தியை அறிந்து கொண்டோம். இந்த கதையைச் சொன்னதும் அவரும் சம்மதம் தெரிவித்துவிட்டார். படப்பிடிப்பில் மிகவும் உதவியாகவும் இருந்தார் இனியா. ட்ரெய்லரில் வெளியாகியுள்ள குதிரையில் அமர்ந்து, அதன் முன்னங்கால் இரண்டையும் தூக்கச் செய்யும் காட்சியில், டூப் எதுவும் போடாமல் அவரே ரிஸ்க் எடுத்து நடித்து அனைவரையும் அசத்தினார்.

படப்பிடிப்புத் தளத்தில் ஃப்ராங்க்ளின் ஜேக்கப்...

அடுத்து என்ன மாதிரியான படத்தை உங்களிடமிருந்து எதிர் பார்க்கலாம்?

நாம் வாசிக்கும் புத்தகங்கள், நாம் பார்க்கும் மனிதர்களின் அடிப்படையில்தான் நம்முடைய கதைகள் உருவாகின்றன என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. தொடர்ந்து வாசிப்பதையும், திரைப்படங்கள் பார்ப்பதையும் வேலையாகச் செய்து கொண்டிருக்கிறேன். பல யோசனைகள் இருக்கிறது, அது கதைகளாகவும் உருமாற வாய்ப்பிருக்கிறது. அவை அனைத்தும் ‘ரைட்டர்’ திரைப்படம் என்ன மாதிரியான வரவேற்பைப் பெறுகிறது என்பதைப் பொறுத்தே இருக்கிறது. நல்லதே நடக்கும் என்ற நம்புகிறேன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE