வெள்ளந்தியான கிராமத்துப் பெண், பாசக்கார அக்கா, வெகுளியான அம்மா போன்ற குணச்சித்திர கதாபாத்திரங்களுக்கு அப்படியே பொருந்திப் போகிறார் தீபா சங்கர். பரதம் படித்த இவர், ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘மாயாண்டி குடும்பத்தார்’ படங்களில் எமோஷனல் கேரக்டரிலும் அண்மையில் வெளியான ‘டாக்டர்’ படத்தில் வெகுளியாகவும் நடித்து அசத்தியவர்.
சேனல் பக்கமும் விஜய் டிவியின் ‘குக் வித் கோமாளி’யில் போட்டியாளராகப் பங்குபெற்ற தீபா, அடிக்கடி சமையலில் சொதப்பி கோமாளிகளுக்கே டஃப் கொடுத்தவர். அடுத்தடுத்து ‘மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை’, யூடியூப் சேனல், வெப் சீரிஸ் என பிஸியாக இயங்கி வருகிறார் தீபா. இதுவரை போட்டோ ஷூட் எதுவும் நடத்தி தன்னை பிரபல்யப்படுத்திக்கொள்ள விரும்பாத தீபாவுக்கு. அண்மையில் அப்படியொரு ஆசையும் வந்துவிட்டது. அப்படி இவர் நடத்திய போட்டோ ஷூட் ஒன்று இணையத்தில் வைரலாகி உள்ளது. முதல்முறையாக மாடர்ன் உடையில் போட்டோ ஷூட்டில் கலக்கியிருந்தார் தீபா.
‘இதுவரை போட்டோஷூட்டே செய்யாத மனுஷி திடீரென மாடர்ன் டிரஸ்ஸில் போட்டோஷூட் எடுக்க என்ன காரணம்?’ - இந்த டவுட்டை அவரிடமே கேட்டுவிட்டால் போச்சு என்று தீபாவைத் தொடர்பு கொண்டோம்; நிறுத்தாமல் நிறையவே பேசினார்.
“என் லைஃப்ல நான் பண்ண முதல் போட்டோஷூட் இது தான். எனக்குத் தெரிஞ்ச ஒரு போட்டோகிராபர் தம்பி, ‘எனக்கு திறமை இருக்குக்கா... ஆனா, அதற்கான அங்கீகாரம் கிடைக்கல’ன்னு ஆதங்கப்பட்டுச்சு. அந்தத் தம்பிக்கு வாய்ப்புகள் அமையட்டுமேன்னு தான் முதல்முறையா மாடர்ன் ட்ரெஸ்லாம் போட்டு போட்டோ ஷூட் பண்ணோம். அந்த போட்டோக்களுக்கு நிறைய பாராட்டுகள் வந்தது மாதிரியே ஒரு சில மனக்கசப்புகளும் ஏற்பட்டுப் போச்சு.
ஆனா, யார் என்ன விமர்சிச்சாலும் எனக்கு கவலை இல்ல. காரணம், அந்த போட்டோஷூட் மேக் அப் ஆர்டிஸ்ட், போட்டோகிராபர்னு சில கலைஞர்களுக்கு வாய்ப்புகள் அமைய உதவி இருக்கு. அந்தத் திருப்தி போதும். நிறையப் பேர் நான் சேலை மட்டும் தான் கட்டுவேன்னு நினைக்குறாங்க. ஆடை அப்படிங்குறது நமக்கு கம்ஃபர்ட்டா இருந்தா போதும். எனக்கு சேலை, சுடிதார் தான் கம்ஃபர்ட்டா இருக்கும். அதுக்காக மாடர்ன் போடுறது தப்புன்னு சொல்லமாட்டேன்.’’
போட்டோ ஷூட்டுக்கு உங்க ஃபேமிலியோட ரியாக்ஷன்?
“பொதுவா என் பிள்ளைகள் கிட்ட என் வேலையைப் பத்தியெல்லாம் பகிர்ந்துக்க மாட்டேன். அதனால இந்த போட்டோ ஷூட் பத்தி அவங்களுக்கு தெரியாது. சினிமா, மீடியா மீதெல்லாம் இப்போதைக்கு அவங்களுக்கு ஆர்வம் வரவேண்டாம்னு நினைக்கிறேன். குடும்பத்தோட பொது இடங்களுக்கு போறப்ப நிறையப் பேர் என்கிட்ட வந்து பேசுவாங்க. `அவங்க என்னை படத்துல பார்த்திருக்காங்கப்பா... அதான் வந்து பேசுறாங்க. இதெல்லாம் பெரிய விஷயம் கிடையாது. நீங்க நல்லா படிச்சா இதைவிட நல்ல மரியாதைக் கிடைக்கும்’ன்னு பிள்ளைகள்ட்ட சொல்லிடுவேன்”
சினிமா, சீரியல், ஓடிடின்னு பிஸியா இருக்கும் நீங்க, உங்களுக்காக, உங்க ஆரோக்கியத்துக்காக எவ்ளோ நேரம் ஒதுக்குறீங்க?
“உண்மையைச் சொல்லணும்னா எனக்காக நான் நேரம் ஒதுக்குறதே இல்ல. அதனாலயே எனக்கு அடிக்கடி உடம்பு சரியில்லாமப் போகும். அடிக்கடி ஆஸ்பிட்டல் போய், டிரிப்ஸ் ஏத்திக்கிட்டு வருவேன். சரியான தூக்கம் கிடையாது. சினிமா ஃபீல்டைப் பொறுத்தவரைக்கும் அறிமுகம் இருக்க வரைக்கும் தான் வேலை. நினைக்குற நேரத்தில் ஓய்வு எடுக்க முடியாது.
உதாரணத்துக்கு, ஒரு பெரிய ஹீரோ படத்தில் நடிக்கும்போது, அவங்களோட கால்ஷீட்டுக்கு ஏத்த மாதிரிதான் நம்ம ஷூட்டிங் தேதி ஃபிக்ஸ் பண்ணுவாங்க. கொஞ்சம் பிரேக் எடுத்துக்கிட்டா வாய்ப்புகள் வராதுன்னு ஒரு பயம். அதுக்காகவே வர வாய்ப்பை எல்லாம் பயன்படுத்திக்கிறோம். ஷூட்டிங் ஷூட்டிங்னு லைஃப் ஓடினாலும், எனக்கு அது சோர்வை கொடுக்கல. நடிப்பு எனக்கு பிடிக்கும். மனசார இந்த வேலையச் செய்யுறேன்.
ஆனா, மனசு ஆக்டிவா இருந்தாலும் சில சமயம் உடம்பு ஒத்துழைக்க மாட்டேங்குது. அதனால இப்பெல்லாம் கொஞ்சம் ஆரோக்கியம் பத்தியும் கவனம் செலுத்துறேன். நிறைய சாப்பிடாம அளவா சாப்பிட்றேன். உடம்ப குறைக்கணும்னு ஒரு எண்ணம் வந்திருக்கு. எந்தளவுக்கு அது சாத்தியம்னு தெரியல.”
பேரண்டிங்கில் உங்க கணவரின் பங்கு?
“என் வீட்டுக்காரருக்கு புரிதல் அதிகம். தொழில் எது வாழ்க்கை எதுன்னு பிரிச்சு பாக்குற பக்குவம் அவருக்கு இருக்கு. தொடர்ச்சியா ஷூட்டிங் போற சூழல் ஏற்படும்போதெல்லாம், பிள்ளைகள அவர் பார்த்துப்பார். அவருக்கு வேலை இருக்கும்போது நான் பார்த்துப்பேன். ரெண்டு பேருமே கடுமையா உழைப்போம்; வீட்டையும் பார்த்துப்போம்.’’
டிசம்பர் முடியப் போகுது... இந்த வருஷம் உங்கள அதிகம் பாதிச்ச விஷயம்?
“கரோனா சூழல் என்னை ரொம்பவே பாதிச்சிடுச்சு. லாக் டவுண்ல பலரும் வேலை போய் வாழ்வாதாரத்துக்கு போராடியதை எல்லாம் மறக்கவே முடியாது. என்னை மாதிரியான திரை கலைஞர்களுக்காச்சும் கொஞ்சம் வேலை இருந்துச்சு. ஆனா, கோயில் திருவிழாக்களை மட்டுமே நம்பி இருக்கிற நாடக கலைஞர்களின் நிலைய நெனச்சா ரொம்ப வருத்தமா இருக்கு. திருவிழாக்கள் நடந்தா தான் அவங்க வீடுகள்ல அடுப்பெரியும். ஒரு மேடை கலைஞரா வாழ்க்கையைத் தொடங்குன எனக்கு அவங்களோட கஷ்டம் என்னன்னு நல்லாவே தெரியும். பழையபடி கோயில் விழாக்கள் நடக்கணும்; அவங்க வாழ்க்கையிலும் பழையபடி வசந்தம் மலரணும்.”
‘டாக்டர்’ படத்துக்குப் பிறகு புதிதாக பட வாய்ப்புகள் வந்ததா?
“அண்மையில சுந்தர்.சி சார் படம் ஒண்ணுல நடிச்சு முடிச்சிருக்கேன், விமல் சார் கூட ஒரு படம் பண்ணிருக்கேன். இன்னும் நாலஞ்சு படத்துல கமிட் ஆகியிருக்கேன். விஜய் சேதுபதி சார் படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்துட்டு இருக்கு. கடவுள் அருளால் அது ஓகே ஆகும்னு நம்புறேன்.’’
தனக்கே உரித்தான அந்த வெள்ளந்திச் சிரிப்புடன் விடைகொடுத்தார் தீபா சங்கர்.