உங்களுக்கு வந்தால் ரத்தம், எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?

By ரஜினி

தமிழகம் முழுதும் கடந்த 10-ம் தேதி ‘ஆன்டி இண்டியன்’ திரைப்படம் வெளியானது. தேனியில் ஒரு திரையரங்கில் படத்தை ஓடவிடாமல் தடுத்து, பார்வையாளர்களை வெளியேற்றி கொலைமிரட்டல் விடப்பட்டதாக, சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் தயாரிப்பாளர் ஆதம்பாவா புகார் அளித்துள்ளார்.

காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்த பின்னர், செய்தியாளர்களிடம் ஆதம்பாவா கூறியதாவது:

“ப்ளூ சட்டை மாறன் இயக்கத்தில் ஆன்டி இண்டியன் திரைப்படத்தை நான் தயாரித்து, கடந்த 10-ம் தேதி தமிழகம் முழுதும் 250 திரையரங்குகளில் வெளியிட்டேன். இத் திரைப்படத்துக்கு சென்சார் பிரச்சினை வந்ததால், உயர் நீதிமன்றம் வரை சென்று, சென்சார் அனுமதி பெற்று பல தடைகளைக் கடந்து மிகவும் கஷ்டப்பட்டு படத்தை வெளியிட்டேன். திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம்(டிச.11) தேனி மாவட்டம், பெரியகுளம் பார்வதி திரையரங்குக்கு வந்த பாஜக நகரச் செயலாளர் ராஜபாண்டி மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஆன்டி இண்டியன் படத்தை திரையிடக்கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து பெரியகுளம் போலீஸார் வந்ததும், பேனர்களை அகற்றி திரையரங்கு உரிமையாளரிடம் படத்தை திரையிடக்கூடாது என மிரட்டல் விடுத்து, படம் பார்த்துக் கொண்டிருந்தவர்களை மிரட்டி வெளியேற்றியிருக்கிறார்கள். இதுகுறித்து காவல் துறைக்கு ஆன்லைன் மூலமாக புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

வழக்கறிஞர்களுடன் தயாரிப்பாளர்

யூடியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டதற்கு நாட்டில் கருத்துச் சுதந்திரம் இல்லையா என கேள்வி எழுப்பும் பாஜகவினர், தற்போது எங்களது கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும் வகையில் செயல்படுவது நியாயமா. அவர்களுக்கு வந்தால் ரத்தம் எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?

ஆன்டி இண்டியன் திரைப்படத்தை வெளியிட்ட திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் படக்குழுவினருக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வருவதால், உடனடியாக தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி காவல் ஆணையர் அலுவலகம் மற்றும் தமிழக டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளேன்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE