ஆந்திர மாநிலத்தில், திரையரங்க டிக்கெட் கட்டணங்களுக்கு அதிரடியான கட்டுப்பாடுகளை நடைமுறைப் படுத்தியுள்ளது அந்த மாநில அரசு. அதனால் டிக்கெட் கட்டணங்கள் வெகுவாகக் குறைந்துள்ளன. இதன் காரணமாகப் பெரிய பட்ஜெட் படங்களை வெளியிடும்போது, அதற்கான வசூலை அள்ள நீண்ட நாட்களாகும் நிலை உண்டாகியுள்ளது.
தெலுங்கில் அடுத்தடுத்து சில பெரிய பட்ஜெட் பான் இந்தியா திரைப்படங்கள் வெளிவர உள்ள நிலையில், டிக்கெட் விலை கட்டுப்பாட்டால் அத்திரைப்படங்களின் வசூல் வெகுவாக பாதிக்கப்படும் என்று தெலுங்கு திரைப்பட உலகத்தினர் பெரும் கவலையில் உள்ளனர்.
இதனிடையே சமீபத்தில் விசாகப்பட்டிணத்தில் ஒரு போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய தெலுங்கு முன்னணி நடிகர் பவன் கல்யாண், "என்னுடைய படங்களைக் குறி வைத்துத்தான் மாநில அரசு டிக்கெட் கட்டணங்களைக் குறைத்துள்ளது. என்னுடைய படங்களைத் திரையிட அரசு தடைசெய்ய நினைத்தால், நான் பயந்து பின் வாங்கமாட்டேன். நிலைமை இன்னும் மோசமாகப் போனால், என்னுடைய படங்களை மக்களுக்கு இலவசமாகக் காட்டவும் தயங்கமாட்டேன் என்று அதிரடியாகப் பேசியுள்ளார்.
மேலும், “டிக்கெட் விலை வசூலில் வெளிப்படைத்தன்மை இல்லை என அரசு குற்றம் சாட்டுகிறது. மது விலைகளை நிர்ணயிப்பதில் அரசாங்கம் அந்த வெளிப்படைத்தன்மையைப் பின்பற்றுகிறதா என்று இந்த அரசை நான் கேட்கிறேன்” என்றும் கேட்டுள்ளார். பெரும் பொருட்செலவில் பவன் கல்யாண் நடித்துள்ள “பீம்லா நாயக்” திரைப்படம், அடுத்த மாதம் திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.