2008-ம் ஆண்டு. என்டிடிவி செய்தி நிறுவனத்தின் விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தது. ‘இந்தியன் ஆஃப் தி இயர்’ விருதை மேடையில் அறிவித்து வழங்கினார், அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங். அந்த ஆண்டுக்கான விருதைப் பெற்றவர் ரஜினிகாந்த். நிகழ்ச்சியில், என்டிடிவி செய்தியாளர் தன்னைப் பற்றி மிகைப்படுத்தலுடன் சொன்ன கருத்துகளை மேடையிலேயே புன்னகையுடன் மறுத்துக்கொண்டிருந்தார் ரஜினி. பார்வையாளர் பகுதியிலிருந்து, பாலிவுட் தயாரிப்பாளர் கரன் ஜோஹர் எழுந்து, “மும்பை திரைப்பட உலகில் மிகச் சிறந்த நடிகர் என யாரைக் குறிப்பிடுவீர்கள்?” என ரஜினியிடம் கேட்டார். ஒரு நொடிகூட தயக்கம் இல்லாமல் ரஜினி சொன்ன பதில், “அமிதாப் பச்சன்!”
அதில் ஆச்சரியம் ஏதுமில்லை. மூன்றே படங்களில் இணைந்து நடித்திருந்தாலும் திரைக்குள்ளும் வெளியிலுமாக, உறுதியான பந்தம் இருவருக்கும் இடையில் உண்டு. அமிதாப் நடித்த பல இந்திப் படங்களின் மறுஆக்கங்களில் ரஜினி நடித்துப் புகழ்பெற்றார். அதேபோல், ரஜினி முதன்முதலாக இந்தியில் நாயகனாக நடித்த ‘அந்தா கானூன்’ (‘சட்டம் ஒரு இருட்டறை’ படத்தின் மறுஆக்கம்) படத்தில் அமிதாப் கவுரவ வேடத்தில் நடித்திருந்தார். அமிதாபின் கோபக்கார இளைஞன் வேடங்களைத் தமிழ்ப் படங்களில் நடித்த ரஜினியின் முதல் இந்திப் படத்திலேயே அமிதாப் நடித்தது அவர்களுக்கிடையிலான நட்புறவின் அடையாளம். அமிதாபின் பல படங்களில் அவரது பாத்திரத்தின் பெயர் ‘விஜய்’ என்றே இருக்கும். ‘அந்தா கானூன்’ படத்தில் ரஜினி நடித்த கதாபாத்திரத்துக்கு ‘விஜய்’ எனும் பெயர் அமைந்தது சுவாரசியமான விஷயம்.
ரஜினியைத் தன் குடும்பத்தில் ஒருவராக மதிப்பவர் அமிதாப். இருவரின் வாழ்வின் முக்கியத் தருணங்களிலும் நேரிலோ தொலைபேசியிலோ வாழ்த்துகள் தெரிவிக்க இருவரும் மறப்பதில்லை. ‘ரோபோ’ (எந்திரன்) படத்தில், அமிதாப் பச்சனின் மருமகள் ஐஸ்வர்யா ராயுடன் நடித்தது குறித்து சுய எள்ளலுடன் ரஜினி பேசிய பேச்சு, அவரது நகைச்சுவை உணர்வுக்கும் எளிமைக்கும் உதாரணம். அந்தப் படத்தில் ரஜினிக்கும் ஐஸ்வர்யா ராய்க்கும் இடையிலான வயது வித்தியாசம் திரையில் எந்தவிதத்திலும் எதிரொலித்திருக்காது. அத்தனை சுறுசுறுப்புடன் நடித்திருப்பார் ரஜினி. ரஜினியுடன் நடித்த அனுபவம் குறித்துப் பேசிய ஐஸ்வர்யா ராய், “அமிதாபைப் போலவே சிறந்த நடிகர் ரஜினி. மிக எளிமையானவரும்கூட” என்று கூறியிருந்தார். ரஜினி குறித்துப் பேசும்போதெல்லாம், அவருடைய திறமையைப் புகழ்வதுடன் அவரது எளிமையையும் வியந்து பாராட்டுவார் அமிதாப்.
2019-ல் கோவா ஐ.எஃப்.எஃப்.ஐ சர்வதேசத் திரைப்பட விழாவை அமிதாப் தொடங்கிவைத்தார். அந்நிகழ்வில் ரஜினியை மேடையில் வைத்துக்கொண்டே பேசிய அமிதாப், “இருவரும் பரஸ்பரம் அறிவுரை, ஆலோசனை சொல்லிக்கொள்வோம். ஆனால், இருவருமே அந்த ஆசோசனைகளைச் செயல்படுத்துவதில்லை என்பது வேறு விஷயம்” என்று நகைச்சுவையுடன் குறிப்பிட்டார். ரஜினி 60 வயதைத் தொட்டதும், “உடற்பயிற்சி செய்து உடலைப் பராமரித்துக்கொள்ளுங்கள், யார் என்ன சொன்னாலும் உங்கள் விருப்பத்துக்குரிய விஷயங்களைச் செய்யுங்கள்” என்று அவருக்கு அறிவுரை சொன்ன அமிதாப், “அரசியலுக்குள் நுழைய வேண்டாம்” என்றும் அறிவுறுத்தினார். அப்போது அதை ரஜினி பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அரசியலுக்கு வருவது சூழலைப் பொறுத்ததுதான் என்பதால் அந்த அறிவுரையை ஏற்கவில்லை என்று சொன்னார். ஆனால், அமிதாப் சொன்னதுதான் பின்னாளில் நடந்தது!
அதேசமயம், “மிக எளிமையான குடும்பப் பின்னணியிலிருந்து வந்து வியக்கத்தக்க உயரத்தை அடைந்தவர். ஒவ்வொரு நாளும் உத்வேகம் அளிக்கும் ஆளுமை” என்று கோவா நிகழ்ச்சியில் உவகையுடன் வாழ்த்தினார் அமிதாப். அந்நிகழ்ச்சியில், ‘ஐகான் ஆஃப் கோல்டன் ஜூப்ளி’ விருதை, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகருடன் இணைந்து ரஜினிக்கு வழங்கி மகிழ்ந்தார் அமிதாப்.
ரஜினியை ஒப்பிட வயதுக்கேற்ற வேடங்கள், வித்தியாசமான கதாபாத்திரங்கள் என வேறொரு உயரத்துக்குச் சென்றுவிட்டவர் அமிதாப். எனினும், இன்னமும் நாயகனாக நடித்துக்கொண்டிருக்கும் ரஜினிக்குக் கிடைக்கும் வெற்றிகளில் அமிதாபுக்கு ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி உண்டு. அதைப் பல்வேறு சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார்.
பதிலுக்கு, “நான் பாட்ஷாதான். ஆனால், அமிதாப் ஜி தான் உண்மையான ஷெஹன்ஷா” (பேரரசர்) என்றே சொல்வார் ரஜினி. நம்மைப் பொறுத்தவரை இருவருமே பேரரசர்கள்தான்!
சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!