பான் இந்தியப் படங்களை தமிழ் திரையுலகம் கண்டுகொள்ளாமல் இருக்கலாமா?

By காமதேனு

வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான் இந்தியாவின் அடையாளம். பல அடையாளங்கள், கலாச்சாரங்கள், மொழிகள் எனப் பிரிந்திருக்கும் மாநிலங்கள் தங்கள் அடையாளங்களை வெளிப்படுத்தும் பொதுத்தளமாகத் திகழ்பவை திரைப்படங்கள். பாலிவுட் சினிமாக்களின் மார்க்கெட்டை தகர்த்து தங்கள் இருப்பைத் திணித்தப் பிறகு, தனி அடையாளத்துடன் எஞ்சி நிற்பது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள சினிமாக்கள் மட்டுமே. பல நூறு கோடி முதலீட்டுடன் இந்தியா முழுமைக்கும் வர்த்தகம் விரிக்கும் பாலிவுட் சினிமாக்களுக்கு மத்தியில் தென்னிந்திய திரைத் துறை தங்கள் இருப்பை நிலைநாட்டும் முயற்சியே, பான் இந்தியத் திரைப்படங்கள் (Pan Indian Movies). ஆனால் இதில், தமிழ் சினிமாவின் போக்கு கவலையளிப்பதாகவே உள்ளது.

பான் இந்தியத் திரைப்படம்

சினிமாவில் தொழில்நுட்ப புரட்சி ஆரம்பித்த காலகட்டங்களில் ஒரு திரைப்படம் நன்றாக ஓடும்பட்சத்தில், சில வாரங்கள் அல்லது சில மாதங்கள் கழித்து வேறு மாநிலங்களில் மொழிமாற்றம் செய்யப்பட்டு டப்பிங் திரைப்படங்களாக வெளியிடப்படும். அல்லது ஒரு மொழியில் வெற்றிபெற்ற திரைப்படத்தின் உரிமையைப் பெற்று வேறு ஒரு மாநிலத்தில் அங்குள்ள நடிகர்களை வைத்து அவர்கள் மொழியில் உருவாக்குவார்கள். இந்த 2 வழிமுறைகளையும் வழக்கொழிந்து போகச்செய்யும் புது வழிமுறைதான் பான் இந்தியத் திரைப்படங்கள்.

ஒரு திரைப்படம் உருவாகும்போதே ஒன்றுக்கு மேற்பட்ட மொழியில் படம்பிடிக்கப்பட்டோ அல்லது ஒரேநாளில் பல்வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டோ வெளியாவதே பான் இந்தியத் திரைப்படங்கள். பான் இந்தியா என்றால் ‘இந்திய அளவில்’ என்று அர்த்தம். சமகாலத்தில் வட இந்தியாவின் ஒற்றை அடையாளமாக இந்தி சினிமாக்கள் ஆகிவிட்டதால், வட இந்திய மாநிலங்களைச் சென்றுசேர இந்தி மொழியும் தென்னிந்தியாவின் இதர 4 மொழிகளுமே பான் இந்தியத் திரைப்படங்களில் அடையாளமாக இருக்கின்றன.

பான் இந்தியத் திரைப்படங்களில் உள்ள சிக்கல்கள்

இந்தியா போன்ற பல்வேறு கலாச்சாரங்களின் கூட்டுக் கலவையான தேசத்தின் அனைத்து மக்களுக்குமான ஒரே சினிமாவாக, ஒரு திரைக்கதையை உருவாக்குவதில் பல சவால்கள் உள்ளன. திரைக்கதை ஒரு கலாச்சாரம் அல்லது ஒரு மொழி தொடர்புடையதாக இல்லாமல், இந்திய மக்கள் அனைவரும் உணர்ந்துகொள்ளும் வகையில் இருக்கவேண்டும். அதனால்தான் உருவாகும் அனைத்துப் பான் இந்திய சினிமாக்களும், கடந்தகால சுதந்திரப் போராட்ட வரலாறு அல்லது எதிர்காலத்தைக் குறித்து எடுக்கப்படும் கதைகளை மையமாகக் கொண்டு உருவாகின்றன.

‘பாகுபலி மாற்றியமைத்த பாதை’

வரலாற்றைச் சற்றே புரட்டிப்பார்த்தல், இந்தியில் ‘தில்வாலே துல்ஹானியா லெ ஜாயங்கே’, ‘தில் சே’ மலையாளத்தில் ‘காலாபானி’ போன்ற திரைப்படங்கள் பான் இந்தியத் திரைப்படங்களாகப் பரிமளித்தவை. அதற்குப் பிறகு கிடப்பிலிருந்த பான் இந்தியா திரைப்பட கான்செப்ட்டுக்கு, மீண்டும் உயிரூட்ட முயன்றது 2010-ல் ஷங்கர் இயக்கிய ‘எந்திரன்’ திரைப்படம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடிப்பில் பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் அந்த வருடத்தின் அதிக வசூல் செய்த இந்தியத் திரைப்படம் என சாதனை படைத்தது. சுதாரித்துக்கொண்ட பாலிவுட், அடுத்த வருடமே ஷாருக் கான் நடிப்பில் ‘ரா ஒன்’ திரைப்படத்தை இந்தியா முழுவதும் வெளியிட்டது. இத்திரைப்படம் எதிர்பார்த்த வெற்றிபெறாமல் படுதோல்வி அடைந்து, பான் இந்தியா சினிமா எடுக்க வேண்டும் என்ற நினைப்பில் இருந்தவர்களையும் பின்வாங்கச் செய்தது.

அதன்பின் பல ஆண்டுகள் கழித்து, பான் இந்தியா யோசனையைக் கையிலெடுத்தவர் தெலுங்கு இயக்குநர் ராஜமௌலி. மசாலா திரைப்படங்களுக்குப் பேர் போன தெலுங்கு திரையுலகில் ‘பாகுபலி’ என்ற திரைப்படம் ரூ.180 கோடி செலவில் மிகப் பிரம்மாண்டமாகத் தயாராகி வருகிறது என்ற செய்தியே பலராலும் நம்பமுடியவில்லை. ஆனால், தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்கள் நடிப்பில் வெளிவந்து, பாக்ஸ் ஆபீஸில் ரூ.500 கோடிக்கு மேல் வசூல் செய்து, இந்தியத் திரையுலகின் போக்கையே மாற்றியமைத்தது ‘பாகுபலி’.

மேலும் சில புது முயற்சிகள்

‘பாகுபலி’க்குப் பிறகு, அதிக செலவு தேவையில்லை நல்ல கதை மட்டுமே போதும் என்ற நம்பிக்கையோடு வந்த ஆமிர்கான் நடித்த ‘தங்கல்’ (2016), டோனி வாழ்க்கை வரலாற்றுப் படம் ‘எம் எஸ் டோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி’ (2016) ஆகிய இந்திப் படங்களும் நல்ல வரவேற்பைப் பெற்றன. 2018-ல், மீண்டும் ‘எந்திரன் 2.0’ படம் மூலம் பான் இந்தியன் ஸ்டைலில் வந்தார் ஷங்கர். இந்நிலையில்தான் 2018-ம் ஆண்டு கன்னட சினிமா, தனது முதல் பான் இந்தியத் திரைப்படமான ‘கே.ஜி.எஃப்’ திரைப்படத்தின் மூலமாகக் கவனம் பெற்றது.

‘பாகுபலி’ வெற்றிக்குப் பின்பு பான் இந்திய முறையைக் கையிலெடுத்த தெலுங்கு சினிமா, அடுத்தடுத்து பல படங்களை இந்தியா முழுவதும் வெளியிட்டது. ஆனால், எதுவுமே எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யவில்லை. பாகுபலிக்கு பின்பு பிரபாஸ் நடித்த ‘சாஹோ’ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. அதே வருடம் சீரஞ்சீவி, விஜய்சேதுபதி, கிச்சா சுதீபா, அமிதாப் பச்சன் நடிப்பில் வந்த ‘சைரா நரசிம்மா ரெட்டி’ திரைப்படமும் பெருமளவுக்கு வெற்றி பெறவில்லை. இதனுடன் சேர்த்து கன்னட சினிமா தனது பங்குக்கு வெளியிட்ட ‘குருசேஷ்திரா’, ‘அவனே ஶ்ரீமன் நாராயணா’ போன்ற திரைப்படங்கள் வந்ததும் தெரியவில்லை போனதும் தெரியவில்லை.

தற்போது மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘மரைக்காயர்:அரபிக்கடலிண்டே சிம்ஹம்’ திரைப்படமும் பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.

பொன்னியின் செல்வன்

தென்னிந்தியாவில் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளும் பான் இந்தியத் திரைப்பட பந்தயத்தில் மும்மரமாக ஓடுகின்றன. ஆனால், தமிழ் சினிமா மட்டும் ஏன் இந்தப் போட்டியில் ஆர்வம் காட்டாமல் இருந்துவருகிறது? இந்தக் கேள்விக்குப் பதிலாக மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவருகிறது, ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம். கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், ஐஷ்வர்யா ராய், ஜெயராம் எனப் பல நடிகர்கள் இணைந்து நடித்து வரும் இத்திரைப்படம், தமிழ் திரையுலகின் பான் இந்தியத் திரைப்பட அடையாளமாக அறியப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஆனாலும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் ஏன் பான் இந்தியத் திரைப்படங்களில் ஆர்வம் காட்டுவதே இல்லை என்ற கேள்வி, நீண்ட காலமாக இருந்து வருகிறது. உண்மையில் பான் இந்தியத் திரைப்படங்கள் அவர்களுக்குத் தேவைப்படவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா போன்ற நடிகர்களுக்கு அண்டை மாநிலங்களில் பெருவாரியான ரசிகர்கள் இருக்கின்றனர். குறிப்பாக, கேரளாவில் தமிழ் சினிமாவை மொழிமாற்றம் செய்யாமலேயே கொண்டாட பெரும் ரசிகர் பட்டாளமுண்டு. உள்ளூர் பட்ஜெட்டில் கேரளா, கர்நாடகா என்று பல மாநிலங்களில் தங்கள் திரைப்படத்தை விற்பனை செய்யக்கூடிய சூழல் இருக்கும்போது, பெரும் பொருட்செலவில் ரிஸ்க் எடுத்து பான் இந்தியத் திரைப்படம் உருவாக்க வேண்டாம் என்பதே, தமிழ் திரையுலகத்தாரின் மனநிலையாக இருக்கிறது.

மேலும், ஒரே காட்சியை பல்வேறு மொழிகளில் பலமுறை எடுப்பதில் இருக்கும் நடைமுறை சிக்கலையும் இங்கே இருப்பவர்கள் விரும்பவில்லை என்பதே கள எதார்த்தம். என்றாலும் தற்போது விஜய், தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் திரைப்படத்தில் நடித்துவருகிறார் என்பது சிறிது நம்பிக்கையளிக்கும் விஷயமாக இருக்கிறது.

விழித்துக்கொள்ள வேண்டிய நேரம்

உலகமயமாக்கலுக்குப் பிறகு, பன்முகத் தன்மையை ஏற்றுக் கொள்ளாத எந்த ஒரு விஷயமும் நிலைத்திருக்க முடியாது என்பதே உலக வழக்கம் ஆகிவிட்டது. இந்நிலையில், இந்தியத் திரை உலகத்தில் மொழிவாரியான எல்லைகள் தகர்ந்து ஒட்டுமொத்தமான இந்தியாவுக்கான படங்களை அண்டை மாநிலங்களில் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அப்படியான சூழலில் ரிஸ்க் இல்லாத வருமானமே போதும் என்ற மனநிலையில் தமிழ் திரையுலகத்தினர் இருந்தால், வருங்காலங்களில் இங்கிருக்கும் வியாபாரம் அண்டை மாநில திரைப்படங்களால் அபகரிக்கப்படும். கமர்சியல் மற்றும் காமெடி பேய் படங்களிலிருந்து தமிழ் சினிமா தன் பாதையை மாற்றிக் கொள்ள வேண்டிய நேரம் இது. ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான கதைகளை யோசிக்க வேண்டிய தருணமிது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE