சீக்கிரமே வெள்ளித் திரையில்...

By அஸ்வினி சிவலிங்கம்

இப்போதெல்லாம் விறுவிறுப்பான சீரியல் ப்ரொமோக்களை விட ரொமான்டிக் ப்ரொமோக்கள் தான் ட்ரெண்டாகின்றன. ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் ‘நினைத்தாலே இனிக்கும்’ தொடரின் சமீபத்திய ப்ரொமோக்கள் அனைத்துமே ரொமான்டிக் ரகம்.

வெற்றிகரமாக 100 எபிசோடுகளை நெருங்கும் நிலையில், இந்த சீரியலின் நாயகன் ஆனந்த் செல்வனிடம் காமதேனு மின்னிதழுக்காகப் பேசினோம்.

நினைத்தாலே இனிக்கும் சீரியல்ல எப்டி பிக்ஸ் ஆனிங்க?

கதையைக் கேட்டபோது, கொஞ்சம் வித்தியாசமான, சவாலான கதாபாத்திரமா இருக்கும்னு தோணுச்சு. அதனால உடனே ஓகே சொல்லிட்டேன். ‘ஆயுத எழுத்து’ சக்தி அக்மார்க் கிராமத்து பையன். ‘நினைத்தாலே இனிக்கும்’ சித்தார்த் அப்படியே நேரெதிர். ஆரம்பத்துல சித்தார்த்தா மாற ரொம்பவே கஷ்டப்பட்டேன். எப்பவுமே இறுக்கமான முகத்தோட இருக்கணும்; அளவா பேசணும். அதனால ஷூட்டிங் முடிஞ்ச பிறகும் இறுக்கமான முகத்தோட இருப்பேன். “கொஞ்சம் சித்தார்த் ரோல்ல இருந்து வெளியில வாப்பா”ன்னு அம்மாகூட என்னைய கலாய்ப்பாங்க.

ஆனந்த் செல்வன்

ஆரம்பத்துல என்னோட கேரக்டர் கொஞ்சம் நெகட்டிவா இருந்ததால, ஆடியன்ஸ் நம்மள திட்டுவாங்களோன்னு கொஞ்சம் பயம் இருந்துச்சு. இப்போ கதை கொஞ்சம் கொஞ்சமா மாறிட்டு வருது. சீரியல்ல, பொம்மிய நான் திட்ற மாதிரியான காட்சிகள் வரும் போதெல்லாம், “இவங்கள திட்டுனா, பேன்ஸ் என்னத் திட்டுவாங்க சார்”னு டைரக்டர் கிட்ட புலம்புவேன். அந்த அளவுக்கு சித்தார்த் - பொம்மி ஜோடிக்கு இன்ஸ்டால ரசிகர் பக்கங்கள்லாம் இருக்குறத பார்க்கும்போது மனசுக்கு நிறைவா இருக்கு.

நீங்க அமிதாப்பச்சன் உயரத்துல இருக்கீங்க, நாயகி ஸ்வாதி ஷர்மா, ஷார்ட்டா இருக்காங்க. எப்படி ஹைட் மேட்ச் பண்ணி ஷாட் வைக்கிறாங்க?

நினைத்தாலே இனிக்கும் சீரியலில்...

கதையோட கான்சப்ட்டே அதுதான். உயரமான சிடுசிடு பையனுக்கும், சுட்டித்தனமான பொண்ணுக்கும் எப்படி காதல் வொர்க் அவுட் ஆகுது அப்படின்றதுதானே கதை. ஷாட் வைக்க கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கும். லாங் ஷாட் வைப்பாங்க. சில சமயம் ஸ்டூல் போட்டு ஹைட் மேட்ச் பண்ணுவாங்க.

இந்த சீரியல்ல குயிலி மேம் என்ட்ரி ஆனதும் டிஆர்பி கிராஃப் ஏறினதா சொல்றாங்களே உண்மையா?

உண்மை தான். இந்த சீரியலுக்கு ஆரம்பத்தில் இருந்தே நல்ல டிஆர்பி ரேட்டிங் இருந்தது. இடையில கொஞ்சம் சரிஞ்சது. குயிலி மேம் என்ட்ரி ஆனதும் திரும்பவும் நல்ல ரேட்டிங் வந்துடுச்சு. அவங்க சீரியல்ல இருக்குறது புது அனுபவங்களைக் கொடுக்குது. எங்க எல்லாருக்கும் அடிக்கடி ஆலோசனைகள் சொல்லுவாங்க. அதெல்லாமே எங்களுக்கு கூடுதல் எனர்ஜி தான்.

இந்நேரம் சினிமா வாய்ப்புகள் வந்துருக்கணுமே..?

காலேஜ் முடிச்சதுமே சினிமா சான்ஸ் தேடி கோயம்பத்தூர்ல இருந்து சென்னைக்கு ஓடி வந்தேன். எனக்கிருந்த கான்டாக்ட்ஸை வெச்சு உதவி இயக்குநர், அஸோசியேட் டைரக்டர், அஸோசியேட் மேனேஜர்ன்னு நிறைய வேலை பார்த்திருக்கேன். என்னோட ஹார்ட் வொர்க் என்ன கைவிடல. அதுதான் எனக்கு சீரியல் வாய்ப்புகள குடுத்துச்சு.

சின்னத்திரையில சக்சஸ் பண்ணியாச்சு. வெள்ளித்திரையிலும் சீக்கிரமே என்னைப் பார்ப்பீங்க. ஒரு பெரிய ஹீரோவோட படத்துல கேமியோ ரோல் பண்ணிட்டு இருக்கேன். ஷூட்டிங் ஓரளவுக்கு முடிஞ்சிடுச்சு. சினிமா தான் வாழ்க்கைன்னு வீட்டை எதிர்த்துக்கிட்டு வந்தப்போ அம்மா அப்பா ரொம்ப வருத்தப்பட்டாங்க. இப்ப அவங்களுக்கு அந்த வருத்தமெல்லாம் போயே போச்சுன்னு தான் சொல்லணும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE