மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகரின் வழக்கு மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. பாலிவுட், தெலுங்கு, இலங்கை திரைப்படங்களில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ். சுகேஷ் சந்திரசேகருடன் நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டசுக்கு தொடர்பு இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதை ஆரம்பத்தில் ஜாக்குலின் மறுத்தாலும், அவர் சுகேசுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியான பின், அவர் மேல் விசாரணை அழுத்தம் அதிகமானது. அதோடு சுகேஷ் சிறைக்குள் இருந்துகொண்டே ரூ.200 கோடி வரை மோசடி செய்த விவகாரத்தில், ஜாக்குலினுக்கு தொடர்பு இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது.
நேரில் ஆஜராகும்படி ஜாக்குலினுக்கு அமலாக்கத் துறை சம்மனும் அனுப்பிய நிலையில், துபாய் செல்ல முயன்ற அவரை மும்பை விமான நிலையத்தில் அதிகாரிகள் தடுத்து நிறுத்தித் திருப்பி அனுப்பினர்.
இதைத் தொடர்ந்து ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் டில்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் 3 நாட்களுக்கு முன்பு ஆஜாரானார். அமலாக்கத் துறை அதிகாரிகள், அவரிடம் சுகேஷ் சந்திரசேகருடனான தொடர்பு குறித்து பல்வேறு கேள்விகளைக் கேட்டு விசாரணை செய்தனர். இந்த விசாரணை 8 மணி நேரம் நடந்தது. பல கேள்விகளுக்கு அவரால் தெளிவான பதில் சொல்ல முடியவில்லை. வழக்கறிஞரிடம் ஆலோசனை செய்து பதில் சொல்வதாக ஜாக்குலின் கூறியதைத் தொடர்ந்து, அவருக்கு ஒரு நாள் அவகாசம் அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து அவர் 2-வது நாளாக அமலாக்கத் துறை முன் ஆஜரானார். அப்போது அவர் சுகேஷ் எனது நண்பர்தான். சில கொடுக்கல், வாங்கல்களில் அவருக்கு நான் உதவியது உண்மை. ஆனால், அவை நேர்மையான வரவு செலவுகள் என்றும் சுகேஷ் நேர்மையானவர் என்று நம்பியும் அதைச் செய்ததாக அவர் விசாரணையில் கூறியிருப்பதாக அமலாக்கத் துறை தரப்பிலிருந்து செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த வழக்கில் ஜாக்குலின் சாட்சி மட்டும்தான், குற்றவாளி அல்ல. சாட்சிக்குரிய கடமையை அவர் செய்தார் என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.