எந்தக் கதாபாத்திரத்திலும் நடிக்கத் தயார்!

By ஆர்.சி.ஜெயந்தன்

‘தடம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தடம்பதித்தவர் ஸ்ம்ருதி வெங்கட். இவரது நடிப்பில் வெளியான ‘வனம்’ தற்போது திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அடுத்ததாக தனுஷ் நடிக்கும் ‘மாறன்’ படத்தில் பிஸியாக இயங்கிக் கொண்டிருக்கும் ஸ்ம்ருதி வெங்கட்டுடன் ஒரு ஜாலி பேட்டி:

பல படங்களில் நடித்திருந்தாலும் உங்களைப் பற்றிய தகவல்கள் ஏதும் இணையத்தில் தேடினாலும் கிடைப்பதில்லையே? உங்களைப் பற்றி நீங்களே சொல்லுங்களேன்...

நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னைதான். பெசன்ட் நகரிலுள்ள செயின்ட் ஜான்ஸ் பள்ளியில்தான் படித்தேன். கல்லூரிப் படிப்பை எம்ஓபி வைஷ்ணவா கல்லூரியில் முடித்தேன். அம்மா அப்பா இருவருக்கும் திருநெல்வேலி பூர்விகம் என்றாலும் நான் பக்காவான சென்னைப் பொண்ணு.

தமிழ் சினிமா கதாநாயகிகள் மத்தியில் நீங்கள் தனித்துத் தெரிகின்றீர்கள். நீங்கள் ஹோம்லியாகவும், கண்ணைக் கவரும் வகையிலும் இருப்பதன் சூட்சுமம் என்ன?

இதற்கு என் அம்மா - அப்பாவுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். என் கண், முக அமைப்பு அப்படியே என் அப்பா மாதிரி. நான் சிரித்தால் என் அம்மா மாதிரி இருக்கும். இருவரும் சேர்ந்த சரியான கலவை நான். இதைத் தாண்டி எந்த ரகசியமும் இல்லை.

சமீபமாக தமிழ் சினிமாவில் தமிழ் பேசும் நடிகைகள் அதிகம் சாதித்து வருகிறார்கள். தமிழ் சரளமாகப் பேசும் நடிகையான நீங்கள் இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

தற்போது தமிழ் சினிமாவில் நடிகைகளும் ஆழமான கதாபாத்திரங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. பேருக்கு கதாநாயகி என்றில்லாமல் கதையின் ஓர் அங்கமாகப் பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்போது, மொழி தெரிந்த நடிகைகளால் அந்தக் கதையின், கதாபாத்திரத்தின் அழுத்தத்தை உணர்ந்து நடிக்க முடியும்.

நான் பார்த்தவரை, பெரும்பாலான தமிழ் இயக்குநர்கள் தமிழ் பேசும் நடிகைகள் என்றால் எளிமையாகக் கதையைப் புரிய வைத்துவிடலாம் என்று தமிழ் பேசும் நடிகைகளுக்கே முன்னுரிமை அளிக்கின்றனர். இதற்கு முன்பெல்லாம் மும்பையிலிருந்து, கேரளாவிலிருந்து தான் கதாநாயகிகளை அறிமுகப்படுத்துவார்கள். இப்போது அது குறைந்து தமிழ் சினிமா வேறு பாதையில் பயணிப்பதாகவே நினைக்கிறேன்.

தமிழ் பேசும் நடிகைகள் பலர் வந்தாலும் தமிழ் சினிமாவில் நீடித்து இருக்க முடிவதில்லையே? ஒரு சில படங்களுக்குப் பிறகு காணாமல் போய்விடுகின்றனரே. அதைப்பற்றி உங்கள் கருத்து?

ஒவ்வொருத்தரும் தேர்ந்தெடுக்கும் பாதைதான் இதற்குக் காரணம் என்று நினைக்கிறேன். நான் கதாநாயகியாக மட்டுமல்லாமல் மற்ற கதாபாத்திரங்களிலும் நடிக்கத் தயாராக இருக்கிறேன். அனைத்துவிதமான கதாபாத்திரங்களிலும் நடிக்கத் தயார் என்றால் வாய்ப்புகளும் அதிகமாகக் கிடைக்கும். தனக்குத்தானே பல கட்டுப்பாடுகள் போட்டுக்கொள்வதுதான் ஒரு சில திரைப்படங்களுக்குப் பிறகு தமிழ் கதாநாயகிகளுக்கு வாய்ப்பில்லாமல் போவதற்கான காரணமென்று நினைக்கிறேன்.

‘தடம்’ படத்துக்கு முன்பே தமிழில் ‘முண்டாசுப்பட்டி’ படத்தில் நடிக்கக் கிடைத்த வாய்ப்பை தவறவிட்டதற்கான காரணம் என்ன?

அப்போதைய சூழலில் எங்கள் வீட்டில் போதிய ஆதரவு எனக்கு இல்லை. நடிப்பதைவிட படிப்புதான் முக்கியம் என்று என் அம்மா கண்டிப்புடன் இருந்தாங்க. அதனால்தான் ‘முண்டாசுப்பட்டி’ ஆடிஷன் முடித்து நடிப்பு ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில் அதிலிருந்து விலக வேண்டிய சூழல். மேலும், எனக்கும் கேமரா முன்பு நடிக்கச் சின்ன நடுக்கம் இருந்தது. அதற்குப் பின் பல விளம்பரப் படங்கள் நடித்த பின்பே அந்த நடுக்கம் போனது.

இப்போது நான் படிப்பை முடித்து ‘எம்.ஏ, கம்யூனிகேஷன்’ பட்டம் வாங்கிவிட்டேன். என்னுடைய நடிப்பைப் பார்த்துவிட்டு என் அம்மாவும் எனக்கு சப்போர்ட் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. இப்பெல்லாம் என்னோட பேட்டியோ, படமோ எது வந்தாலும் அதை தன்னோட நண்பர்களுக்கு அனுப்பி பெருமையா பேசிப்பாங்க.

‘தீர்ப்புகள் விற்கப்படும்’ படத்தில் சத்யராஜின் மகளாக நடித்திருக்கிறீர்கள். சீனியரான அவருடன் நடிக்கும்போது என்ன கற்றுக்கொள்ள முடிந்தது?

நிறைய வாசிப்பு அனுபவம் உள்ளவர் சத்யராஜ் சார். நாம் எந்த விஷயம் பற்றிப் பேசினாலும் அதைப் பற்றிய சுவாரசியமான விஷயங்களை சத்யராஜ் சாரால் பேச முடியும். தான் ஒரு மூத்த நடிகர் என்ற எந்த தலைக்கனமும் அவரிடம் துளியும் இருக்காது. ‘தடம்’ படத்துக்கு அடுத்ததாக நான் நடித்த திரைப்படம் ‘தீர்ப்புகள் விற்கப்படும்’. அப்போதும் நான் அறிமுக நடிகைதான். ஆனால், என்னிடமும், ஏன்... படப்பிடிப்பு தளத்தில் அனைவரிடமும் மிகவும் இனிமையாகப் பழகினார் சத்யராஜ் சார். அனைவரிடமும் தலைக்கனம் இல்லாமல் இன்முகத்துடன் பழக வேண்டும் என்பதே அவரிடம் இருந்து நான் கற்றுக்கொண்டது.

தற்போது நீங்கள் நடித்து வெளியாகியுள்ள ‘வனம்’ படத்தில் உங்கள் நடிப்புக்கு என்ன மாதிரியான விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன?

இதுவரை நல்ல விமர்சனங்களே வந்துகொண்டிருக்கிறது. ‘தடம்’ படத்தில் என் கதாபாத்திரம் கொஞ்சம் அமைதியான கதாபாத்திரமாக இருக்கும். அதனுடன் ஒப்பிடும்போது, ‘வனம்’ படத்தில் என் கதாபாத்திரம் மிக வித்தியாசமாக இருப்பதாகப் படம் பாரத்த பலரும் என்னை அழைத்துச் சொன்னார்கள்.

அடுத்த திரைப்படமாக, இரண்டு முறை தேசிய விருதுபெற்ற தனுஷுடன் நடிக்கும் ‘மாறன்’ திரைப்பட அனுபவம் எப்படி இருக்கிறது?

தனுஷ், சத்தியராஜ், ஊர்வசி, நயன்தாரா போன்ற அனுபவம் வாய்ந்த நடிகர்களுடன் அடுத்தடுத்து நடிப்பது என் அதிர்ஷ்டம் என்றே நினைக்கிறேன். ‘மாறன்’ திரைப்படத்தில் பல விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடிந்தது. தற்போது ‘மாறன்’ படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது. அந்தப் படம் வெளியாகும் சமயத்தில்தான் அதைப்பற்றி விரிவாகச் சொல்ல முடியும்.

அடுத்ததாக என்ன படங்களில் நடிக்கவுள்ளீர்கள்?

அடுத்ததாக, விக்ரம் பிரபுவுடன் ‘பகையே காத்திரு’ என்ற படத்தில் நடிக்கவுள்ளேன். இன்னும் ஒரு திரைப்படம் பற்றிய பேச்சுவார்த்தையும் போய்க்கொண்டிருக்கிறது; இன்னும் அது முடிவாகவில்லை. ‘பகையே காத்திரு’ பற்றிய அறிவிப்பு விரைவில் வெளிவரும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE