தமிழ் சினிமாவில் 2017-ம் ஆண்டு புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் மாதவன், விஜய் சேதுபதி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடிப்பில் வெளியாகி மிகப்பெரும் வெற்றியடைந்த திரைப்படம் ‘விக்ரம் வேதா’.
2018-ம் ஆண்டு புஷ்கர்-காயத்ரி இத்திரைப்படத்தை இந்தியில் ’விக்ரம் வேதா’ என்ற பெயரிலேயே ரீமேக் செய்யவுள்ளதாக அறிவித்தனர். பாலிவுட்டின் மிகப்பெரும் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஒய் நாட் ஸ்டூடியோஸ் மற்றும் பிளான் சி ஸ்டுடியோஸ் இணைந்து இத்திரைப்படத்தைத் தயாரிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. தமிழில் மாதவன் நடித்த கதாபாத்திரத்தில் சாயிப் அலிகான், ஷ்ரத்தா ஸ்ரீநாத் கதாபாத்திரத்தில் ராதிகா ஆப்தே, விஜய் சேதுபதி நடித்த கதாபாத்திரத்தில் ஆமிர் கான் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 2019-ம் ஆண்டு கரோனா பெருந்தொற்று காலத்தில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போனது.
இந்நிலையில் ஆமிர்கான் இத்திரைப்படத்திலிருந்து விலகிக்கொள்ள, அவருடைய கதாபாத்திரத்தில் ஹ்ரித்திக் ரோஷன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். கடந்த அக்டோபர் மாதம் 15-ம் தேதி இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்தது.
இந்நிலையில், திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை ஹ்ரித்திக் ரோஷன் அபுதாபியில் முடித்துள்ளார். விரைவில் இத்திரைப்படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு லக்னோவில் நடைபெறவுள்ளது. 2022-ம் ஆண்டு செப்.30-ம் தேதி இத்திரைப்படம் உலக அளவில் வெளியிடத் தயாராகி வருவதாக, இத்திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது