ஆல்யா மானசாவும் சீரியலைவிட்டு விலகிட்டாங்களா?

By அஸ்வினி சிவலிங்கம்

‘சரவணன் மீனாட்சி’, ‘ராஜா ராணி’ ரொமான்டிக் சீரியல்களை இயக்கி இளம் ரசிகர்களை தன்வசப்படுத்திய பிரவீன் பென்னட், தற்போது ‘பாரதி கண்ணம்மா’, ‘ராஜா ராணி 2’ என இரண்டு ப்ரைம் டைம் சீரியல்களில் பிஸியாக இருக்கிறார். இந்த விறுவிறுப்புக்கு நடுவே, ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து நாயகி ரோஷினி விலகியதால், பெரும் சர்ச்சை வெடித்தது. தற்போது ஆல்யா மானசாவும் `ராஜா ராணி 2’ சீரியலில் இருந்து விலகப்போவதாக செய்திகள் வருகின்றன. சீரியல் நாயகிகளுக்கு என்னதான் பிரச்சினை என்பதை இயக்குநர் பிரவீனிடமே பேசினோம். இனி, அவரது பேட்டி...

ரோஷினி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலை விட்டு விலக உண்மையிலேயே என்ன காரணம்?

ரோஷினி

பெருசா எந்தக் காரணமும் இல்லை. ரோஷினி ரொம்ப நாளாவே சீரியல விட்டுப் போறேன்னு சொல்லிட்டு தான் இருந்தாங்க. சீரியல் நல்லா போகுது, போக வேணாம்னு சொன்னதால முடிவ தள்ளிப் போட்டுட்டு இருந்தாங்க. ரோஷினிக்கு தன்னோட கேரியர் பத்தின பயம் வந்துடுச்சு.

“நான் கண்ணம்மாவாகவே இருந்திடுவேனோ’’ன்னு யோசிக்கத் தொடங்கிட்டாங்க. அடுத்த கட்டத்துக்கு போகணும்னு அவங்க எடுத்த முடிவ நான் ஏத்துக்கிட்டேன். அவங்க முடிவு வரவேற்கத்தக்கது தான். அதில் எனக்கு வருத்தம் இல்ல. தெளிவா முடிவெடுத்து, சரியான இடத்துக்குத்தான் போயிருக்காங்க.

கண்ணம்மா ரோஷினி சீரியலை விட்டு விலகினதால டிஆர்பி ரேட்டிங் பாதிக்கப்படும்னு நினைக்கிறீங்களா?

இல்ல. பொதுவா சீரியல்ல ஹீரோ அல்லது ஹீரோயின் மாறும் போது, சீரியல் டிஆர்பி சரியும்னு சொல்வாங்க. பாரதி கண்ணம்மா சீரியல்லையும் அப்படி நடக்கும்னு எதிர்பார்த்தோம். ஆனா, அப்படி நடக்கல. ரோஷினி இருந்தப்ப டி.ஆர்,பி 10.35 -ஆக இருந்துச்சு. வினுஷா அறிமுகமான அந்த வாரம் டி.ஆர்.பி 11 ஆச்சு.

இந்த ரேட்டிங் அடுத்த வாரம் குறைய எல்லா வாய்ப்பும் இருக்குன்னு எனக்குத் தெரியும். என்னைப் பொறுத்தவரை கதை வலுவா இருந்தாலே போதும். பாரதி கண்ணம்மா தொடங்கி இரண்டரை வருஷம் ஆச்சு. பலர் கதை சுவாரஸ்யமா போகுதுன்னு பாராட்டுறாங்க. சிலர் , “சீக்கிரமா டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து சீரியல முடிச்சிட்டு புது சீரியல் தொடங்குங்க சார்”ன்னு கேட்குறாங்க. மக்கள் புது மாற்றங்களை விரும்புறாங்க. அவங்க ரசனைக்கேற்ற மாதிரி கதை நகரும். நான் கதைய நம்புறேன். சரியான ஹீரோயின தான் தேர்வு செஞ்சிருக்கேன்னு நம்பிக்கை இருக்கு. மக்கள் கண்டிப்பா புது கண்ணம்மாவ ஏத்துப்பாங்க.

வினுஷா எப்படி கண்ணம்மா ஆனாங்க?

பாரதி கண்ணம்மா சீரியல் தொடங்குறதுக்கு முன்னாடி கதைக்கு ஏற்ற ஹீரோயின் கிடைக்க ரொம்ப காலம் ஆச்சு. ரொம்பவே மெனக்கிட்டுத் தேடினோம். ஆடிஷனுக்கு வந்த யாருமே நான் எதிர்பார்த்த மாதிரி இல்ல. பலகட்ட தேடல்களுக்கு பிறகு தான் ரோஷினிய தேர்வு பண்ணோம். ரோஷினி கேமராவுக்கு புதுசு. முதல் கொஞ்ச நாள் சுமாரா தான் நடிச்சாங்க. அப்புறம் போக போக ட்ரெயின் ஆகிட்டாங்க.

வினுஷாவுடன் பிரவீன் பென்னட்

இப்போ, புது கண்ணம்மாவுக்காகவும் நிறைய தேடினேன். இன்ஸ்டாகிராம் மூலம் தான் வினுஷா அறிமுகமானாங்க. புது முகம், மாநிறம் என எல்லா விதத்திலும் வினுஷா பெஸ்டா தெரிஞ்சாங்க. கண்ணம்மா காஸ்டியூம்ல டெஸ்ட் ஷூட் பண்ணிப் பார்த்தோம், வினுஷாகிட்ட அப்படியே ரோஷினி சாயல் இருந்துச்சு. கண்ணம்மா ஃபீல் கொடுத்துச்சு. உடனே ஓகே பண்ணிட்டோம்.

வினுஷா கேமேராவுக்கு புதுசு கிடையாது. ஷார்ட் ஃபிலிம்லாம் பண்ணியிருக்காங்க. இருந்தாலும் அவங்கள கண்ணம்மாவா மாத்த நான் போராட்டிட்டு தான் இருக்கேன். ஒரிரு வாரங்கள்ல கதாபாத்திரத்த உள்வாங்கி பெர்பெக்டா நடிக்க ஆரம்பிச்சுருவாங்கன்னு நம்புறேன்.

‘ராஜா ராணி -2’ நாயகி ஆல்யா மானசா, சீரியல்ல இருந்து விலகிட்டதா பேச்சு வருதே?

ஆல்யா மானசா

இல்ல. ஆல்யா மானசா சீரியலை விட்டு விலகல. அவங்களா எப்போ பிரேக் எடுக்கணும் நினைக்குறாங்களோ அப்போ எடுத்துப்பாங்க. அதே மாதிரிதான் ஃபரினா கர்ப்பமானதால அவங்கள நாங்க சீரியலை விட்டு நீக்கிட்டோம்னு செய்திகள் வந்துச்சு. வெண்பா ரோலுக்கு அவங்க தான் சரியான தேர்வு. அந்த கேரக்டர் அவங்கள மாதிரி யாராலயும் ஈசியா பண்ணிட முடியாது. டெலிவரிக்கு பிறகு ஓய்வெடுத்துட்டு திரும்பவும் ஷூட்டுக்கு வருவாங்க.

பிரக்னன்ட் ஆகிட்டாங்க அப்படிங்குறதால ஒருத்தர சீரியல விட்டு தூக்குறது எந்த விதத்திலும் சரி கிடையாது. அவங்க தொடர்ந்து நடிக்கவும், பிரேக் எடுக்கவும் கதைல என்ன மாற்றம் கொண்டு வர முடியும்னு தான் யோசிக்கணும். ஷூட்டிங்ல அவங்களுக்கு என்ன உதவி செய்யணுமோ அத செய்வோம். பேபி பம்ப் தெரியாத மாதிரி லாங் ஷாட் வெச்சிப்போம். அவங்களுக்கு, ஓடுறது, அடிக்குறது மாதிரியான சிரமமான காட்சிகள் வைக்கமாட்டோம்.

சீரியல் குழுவினருடன்...

உதாரணத்துக்குச் சொல்றேன், ஒரு ஐடி கம்பெனில வேலை செஞ்சா மெடர்னிட்டி லீவுக்கு பிறகு திரும்பவும் பழையபடி வேலை செய்யலாம். ஆனா, சீரியல்ல அது சாத்தியமில்ல. ஃபரினா, ஆல்யா யாரா இருந்தாலும் நிறையப் போராடிதான் இந்த இடத்துக்கு வந்திருப்பாங்க, பிரேக் வந்துட்டா திரும்ப அந்த இடத்தப் பிடிக்குறது கஷ்டம். அதனால தான் அவங்க டெலிவரி முடிஞ்சு வரவரைக்கும் கதைல என்னால முடிஞ்ச மாற்றங்கள பண்ணிட்டு இருக்கேன்.

ராஜா ராணி -2 சீரியல்ல ஏன் சஞ்சீவ் நடிக்கல?

மக்கள் புதுமைய விரும்புறாங்க. திரும்பவும் சஞ்சீவ் - ஆல்யா ஜோடி வெச்சு சீரியல் எடுத்தா சுவாரஸ்யம் இருக்காது. ரசிகர்கள் நம்மள திட்ட ஆரம்பிச்சுடுவாங்க.

பாரதி கண்ணம்மா, ராஜா ராணி - 2, அடுத்து..?

ஒரே நேரத்துல ரெண்டு சீரியல் பண்றதால லைஃப் செம பிஸியா போகுது. வீட்டுக்குப் போகக்கூட நேரம் இல்ல. நான் லேட் நைட்ல வீட்டுக்கு போறதுக்குள்ள என் ரெண்டு மகன்களும் தூங்கிட்றாங்க. அதனால இப்போதைக்கு புது சீரியல் ஐடியா இல்ல. ஆனா, கனா காணும் காலங்கள் அடுத்த பாகம் பண்ணணும்னு ரொம்ப ஆசை. ப்ரீ-புரொடக்‌ஷன் வேலைகள் நடந்துட்டு இருக்கு. ஆனா, நான் இயக்குவேனான்னு தெரியல.

உங்க மனைவி சாய் பிரமோதித்தாவ எப்போ திரும்பவும் ஆன்ஸ்கிரீன்ல பார்க்கலாம்?

அவங்க சீக்கிரமே சின்னத்திரைக்கு ரீ என்ட்ரி கொடுப்பாங்க. நானும் அவங்களை மோடிவேட் பண்ணிட்டுதான் இருக்கேன். கனா காணும் காலங்கள் தொடர்ல அவங்களோட பங்கும் இருக்கும். ஆனா நடிகையா இல்ல; புரொடக்‌ஷன் வேலைகள் பார்ப்பாங்க.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE