மோகன்.ஜி-யின் அடுத்த படத்தில் செல்வராகவன் ஹீரோ

By காமதேனு

சர்ச்சையான கருத்துகளுக்குப் பேர் போன இயக்குநர் மோகன்.ஜி. அவர் சமீபத்தில் இயக்கிய ‘திரௌபதி’ திரைப்படம் மறைமுகமாகப் பட்டியலின மக்களுக்கு எதிராகவும், ‘ருத்ர தாண்டவம்’ நேரடியாகக் கிறுத்துவ சிறுபான்மையினருக்கு எதிராகவும் கருத்துகளைப் பேசியது. சமூக நீதிக்கான வழிகளாக அறியப்படும் இட ஒதுக்கீடு, இடதுசாரி சித்தாந்தங்களுக்கு எதிரான படமெடுப்பதே மோகன் ஜி-யின் ஸ்டைல் என்று சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகிவிட்டது.

மோகன்.ஜி-யும் என் மதத்துக்கு எதிராகப் பேசினால், என்னுடைய அடுத்தப் படத்தில் கதாபாத்திரமாக வந்துவிடுவீர்கள் என்று மேடையில் மிரட்டும் தொனியில் பேசி, சமூக வலைதளங்களில் உலாவும் கருத்துக்கு வலு சேர்த்துள்ளார்.

இந்நிலையில் அவரது அடுத்தப் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அனைவரும் ஆச்சரியப்படுத்தும் வகையில், அவருடைய அடுத்த திரைப்படத்தில் கதாநாயகனாக இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் நடிக்கவிருக்கிறார் என்று அறிவித்திருக்கிறார். விரைவில் இத்திரைப்படத்தின் தலைப்பு மற்றும் மற்ற விவரங்களை வெளியிடுவேன் என்று அறிவித்துள்ளார் மோகன்.ஜி.

இந்நிலையில் மோகன்.ஜி-க்கும், செல்வராகவனுக்கும் பல ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துவரும் நிலையில், மோகன்.ஜி மிரட்டியது போல் அவருடைய இந்த திரைப்படத்தில் யார் யாரைப் பழிவாங்கக் கதாபாத்திரங்களை அமைத்திருப்பார் என்ற விவாதமும் சமூக வலைதளத்தில் எழுந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE