பெர்லின்: மணி ஹெய்ஸ்ட் தொடரின் ஸ்பின் ஆஃப் அறிவிப்பு

By காமதேனு

நெட்பிளிக்ஸின் வெற்றிகரமான வலைத்தொடர்களில் முக்கியமானது மணி ஹெய்ஸ்ட். இதன் ஸ்பின் ஆஃப் தொடர் ’பெர்லின்’ என்ற தலைப்பில் வெளியாக உள்ளது.

’லா கசா டி பேபல்’ என்ற ஸ்பானிஷ் தொடர், ‘மணி ஹெய்ஸ்ட்’ என்ற பெயரில் ஆங்கில டப்பிங்கில் வெளியாகி உலகம் முழுக்க வரவேற்பு பெற்றது. புரொபசர் என்று தன்னை அறிமுகம் செய்துகொள்ளும் ஒருவர், திருட்டு மற்றும் கொள்ளையில் வித்தகர்களான சிலரை, ஒரு குழுவாக ஒருங்கிணைத்து பெரும் கொள்ளை சம்பவத்துக்கு திட்டமிடுவார்.

இந்தக் குழுவின் அங்கத்தினராகவும், புரொபசரின் அண்ணனாகவும் தோன்றுபவர் ’பெர்லின்’. தொடரின் முதல் சீஸனில் கொள்ளை சம்பவத்துக்கு தலைமையேற்று குழுவை வழிநடத்தும் பெர்லின் கதாபாத்திரத்தில் தோன்றிய, பெட்ரோ அலோன்சோவின் ஆளுமை பார்வையாளர்களை வெகுவாக வசீகரித்தது. மிக மோசமான கொள்ளை மற்றும் கொலைச் சம்பவங்களில் ஈடுபடும் நபராக இருந்தபோதும், பெர்லினின் தரப்பு நியாயங்களும் சோகங்களும் தனித்துவமாய் தொடரில் விவரிக்கப்பட்டிருக்கும்.

மணி ஹெய்ஸ்ட் தொடர்

இதனால் பெர்லின் இறந்ததாக கதை சென்ற பிறகும், ரசிக எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதற்காக பிளாஷ்பேக் காட்சிகள் மூலம் பெர்லினை உயிர்ப்பித்து உலவ விட்டனர். நாளை மறுநாள்(டிச.3) மணி ஹெய்ஸ்ட் தொடரின் இறுதி அத்தியாயங்கள் வெளியாக உள்ள நிலையில், புதிய தொடருக்கான அறிவிப்பை தயாரிப்பு நிறுவனமும், நெட்பிளிக்ஸும் உறுதி செய்துள்ளனர்.

அதன்படி, புதிய ஸ்பின் ஆஃப் தொடரில், மணி ஹெய்ஸ்டில் பெரும் வரவேற்பு பெற்ற பெர்லின் பாத்திரத்தை மட்டும் தனியாக எடுத்துக்கொண்டு, அதன் முன்கதை சுவாரசியமாகச் செல்ல உள்ளது. பெட்ரோ அலோன்சோ இதிலும் பெர்லினாகத் தோன்ற உள்ளார். புதிய வலைத்தொடர் 2023-ல் வெளியாக உள்ளது.

மணி ஹெய்ஸ்ட் வலைத்தொடர் நிறைவடையப் போகிறதே என சோர்ந்திருந்த அதன் ரசிகர்களுக்கு, புதிய ஸ்பின் ஆஃப் தொடர் குறித்த செய்தி உற்சாகம் தந்திருக்கிறது. பெர்லின் வரிசையில் இதர மணி ஹெய்ஸ்ட் கதாபாத்திரங்களையும் ஸ்பின் ஆஃப் தொடர்களாக்கும் திட்டம் உள்ளதாக சொல்லப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE