இனிமேல் என்னை ‘தல’ என்று அழைக்கவேண்டாம் - அஜித்குமார்

By காமதேனு

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித், தற்போது ‘வலிமை’ திரைப்படத்தில் நடித்துவருகிறார். இத்திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அஜித்தை அவரது ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரத்தைச் சேர்ந்த பலரும் ‘தல’, ‘அல்டிமேட் ஸ்டார்’ போன்ற பட்டப்பெயர் வைத்து அழைத்துவந்தனர். சில அதிதீவிரமான அஜித் ரசிகர்கள், ஒரு படி மேலே சென்று ‘மனிதக் கடவுள்’ என்றெல்லாம் அஜித்தை அழைப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில், அஜித் தனது மேலாளர் சுரேஷ் சந்திரா மூலம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில், “பெரும் மரியாதைக்குரிய ஊடக, பொது ஜன மற்றும் என் உண்மையான ரசிகர்களுக்கு,

இனி வரும் காலங்களில் என்னைப் பற்றி எழுதும்போதோ, என்னைப் பற்றிக் குறிப்பிட்டுப் பேசும்போதோ என் இயற் பெயரான அஜித் குமார் மற்றும் அஜித் என்றோ அல்லது ஏகே என்றோ குறிப்பிட்டால் போதுமானது.

தல என்றோ, வேறு ஏதாவது பட்ட பெயர்களையோ குறிப்பிட்டு அழைக்க வேண்டாம் என்று அன்போடு வேண்டுகோள் விடுக்கிறேன்.

உங்கள் அனைவருக்கும் ஆரோக்கியம், உள்ள உவகை, வெற்றி, மன அமைதி, மன நிறைவு உள்ளிட்ட சகலமும் கிடைக்க வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார் அஜித்குமார்.

ரசிகர்கள் என் புகழைப்பாடி நேரத்தை விரயமாக்க வேண்டாம் என்று கூறி, சில ஆண்டுகளுக்கு முன் தன் ரசிகர் மன்றங்களை அஜித் கலைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE