‘விஜய் - 66’ : ரிஸ்க் எடுக்கிறாரா விஜய்?

By விக்கி

சினிமா என்பது ஒரு பெரும் கலைவடிவம் என்றாலும் தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை, ஒரு திரைப்படம் எந்த அளவுக்கு வசூலைக் குவிக்கிறது என்பதை வைத்துதான் அந்தப் படமும், அதில் நடிக்கும் நடிகரின் அந்தஸ்தும் தீர்மானிக்கப்படும்.

அந்த வகையில், ரஜினியை அடுத்து வசூலில் முன்னணியில் இருப்பது நடிகர் விஜய். தனக்கென்று ஒரு பாணியை அமைத்துக் கொண்டு அந்த வரையறைக்குள் விறுவிறுப்பான திரைப்படங்களைத் தேர்ந்தெடுத்து, மிதமான நடிப்பின் மூலமும் துள்ளலான உடல்மொழி மூலமாகவும் பெரும் ரசிகர் பட்டாளத்தைத் தனக்கெனக் கொண்டிருப்பவர் விஜய்.

2016-ல், வெளிவந்த ‘புலி’ திரைப்படத்துக்குப் பிறகு புது முயற்சிகளைக் கையாளும் திரைக்கதைகளைத் தேர்ந்தெடுப்பதைத் தவிர்த்துவிட்டார் விஜய். மெலிதான கதையம்சம் கொண்ட கமர்ஷியல் திரைப்படங்களே தனக்கு செட் ஆகிறது என்பதைப் புரிந்துகொண்டு, அந்த பாணியில் அடுத்தடுத்து ஹிட் கொடுத்துவந்த நடிகர் விஜய், தன்னுடைய 66-வது படத்தில் தன் பாணியிலிருந்து விலகி ரிஸ்க் எடுக்கத் துணிந்துள்ளார்.

பேன் இந்தியத் திரைப்படம்

வம்சி பைடிபள்ளியின் இயக்கத்தில், நடிக்கவுள்ள தனது 66-வது திரைப்படத்தில் பல புதிய விஷயங்களை முயன்று பார்க்கவிருக்கிறார் விஜய். இப்படம் ஒரே நேரத்தில் தெலுங்கிலும் தமிழிலும் தயாராகவுள்ளது. இதற்கு முன்பு விஜயின் பல திரைப்படங்கள் தெலுங்கில் டப் செய்யப்பட்டிருந்தாலும், உருவாகும்போதே தெலுங்கு திரைப்படமாக உருவாகவுள்ள முதல் திரைப்படம் இதுதான். இப்படம் பிரம்மாண்டமான பேன் இந்தியச் சினிமாவாகவும் மாறுவதற்கு வாய்ப்பிருப்பதாகக் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இவ்விஷயம் பேச்சளவில் மட்டுமே இருப்பதால், பேன் இந்தியத் திரைப்படமாக இது உருவாகுமா என்பதை உறுதியாகச் சொல்வதற்கில்லை.

குறைபாடுகள் கொண்ட கதாபாத்திரம்

விஜய் எடுக்கவிருக்கும் முக்கியமான ரிஸ்க், இப்படத்தின் கதையம்சம்தான். பொதுவாக, விஜய் படங்களில் அவருடைய கதாபாத்திரம் அசகாய சூரனாக இருக்கும். சாமானியனான கதாநாயகனுக்கு அசாத்தியமான வில்லனின் எதிர்ப்பு இருக்கும், சாமானியனான கதாநாயகன் திடீரென சூப்பர் ஹீரோவாக மாறி வில்லனைப் பந்தாடி வெற்றிபெறுவார். யோசித்துப் பார்த்தால், இதுதான் பெரும்பாலான விஜய் படக் கதைகளின் அடிப்படையாக இருக்கும்.

அடிப்படை ஒன்றாக இருந்தாலும் அதைக் காட்சிப்படுத்தும் விதத்திலும் தன்னுடைய துள்ளலான நடிப்பின் மூலமாகவும் ரசிகர்களைக் கவர்ந்துவிடக்கூடிய திரை வீச்சு விஜயிடமுண்டு. ஆனால், தற்போது விஜய் நடிக்கவுள்ள ‘விஜய்-66’ திரைப்படத்தில் ‘எரோடோமேனியா’ என்கிற மனநோயால் பாதிக்கப்பட்ட கதாபாத்திரத்தில் விஜய் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

எரோடோமேனியாவால் பாதிக்கப்பட்டவர்கள், ஒருவர் நம்மை விரும்பாவிட்டாலும் அவர் நம்மை அதீதமாக விரும்புகிறார் என்றும் நமக்கும் அவருக்கும் இடையே நீண்டகால உறவிருக்கிறது என்றும் நம்ப ஆரம்பித்துவிடுவார்கள். தன் மீது காதல் வைத்திருப்பதாக நம்பும் மனிதர்கள் இவர்களுக்குத் தெரிந்தவர்களாக இருக்கலாம், முன்பின் அறியாதவர்களாக இருக்கலாம், பிரபலங்களாக இருக்கலாம்.

கற்பனையாக இப்படிக் காதல் கொள்ளவைக்கும் எரோடோமேனியா, வேறு பல மனநோய்களுடனும் சம்பந்தப்பட்டது என்று மனநல மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இப்படி ஒரு குறைபாடுள்ள கதாபாத்திரத்தில் விஜய் நடிக்கவுள்ளார் என்பதே பெரும் ஆச்சரியம்தான். தான் எடுத்திருக்கும் இந்த முடிவு, அவருடைய திரை வாழ்க்கையில் பெரும் ரிஸ்க் என்பது அவருக்கே தெரியும். ஏனென்றால், இதற்கு முன்னால் தன்னுடைய வழக்கமான பாணியிலிருந்து விலகி விஜய் நடித்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் சரியான வரவேற்பைப் பெறவில்லை என்பதே உண்மை.

இதற்கு முந்தைய புது முயற்சிகள்

2007-ம் ஆண்டு வெளியான ‘அழகிய தமிழ்மகன்’ படம் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியது. ஏனென்றால், இதில்தான் விஜய் முதன்முதலாக இரட்டை வேடத்தில் நடித்தார். தற்போது வரவுள்ள ‘விஜய்-66’ படத்தைப் போலவே ‘அழகிய தமிழ்மகன்’ படத்திலும் ‘எக்ஸ்ட்ராசென்சரி ப்ரிசப்ஷன்’ என்ற மனோதத்துவ ரீதியிலான பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருப்பார் விஜய்.

ஆனால், வித்தியாசமான கதைக்களம், இரட்டை வேடத்தில் விஜய் என்று பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பிய இப்படம் விஜய் ரசிகர்களிடையே போதிய வரவேற்பைப் பெறவில்லை. இதற்கு முன்பாக வெளியான ‘போக்கிரி’ திரைப்படம் விஜயின் மீதான எதிர்பார்ப்பை பலமடங்கு எகிற வைத்ததே, ‘அழகிய தமிழ்மகன்’ படம் விஜய் ரசிகர்களை திருப்திப்படுத்தாமல் போனது என்று ஒரு காரணமும் அப்போது சொல்லப்பட்டது.

இதற்கு அடுத்து ‘குருவி’ திரைப்படத்தைத் தேர்ந்தெடுத்து, மாஸ் கமர்சியல் திரைப்படமாக விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்தார் விஜய். மீண்டும் 2015-ல், தனது வழக்கமான பாணியிலிருந்து விலகி சிம்புதேவன் இயக்கத்தில் ‘புலி’ திரைப்படத்தில் நடித்தார் விஜய். புராண கால பின்னணி கொண்ட ஃபிக்‌ஷன் கதை என்று விளம்பரப்படுத்தப்பட்ட புலி திரைப்படத்திலும் மருதீரன், புலி வேந்தன் என்று 2 கதாபாத்திரத்தில் நடித்தார் விஜய். இப்படம் மிக மோசமான விமர்சனங்களையும் ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்திய அதிருப்தியின் தாக்கத்தையும் இன்றும்கூட சில இடங்களில் மீம்ஸ்களில் பார்க்கமுடியும். விஜய்யின் புது முயற்சிகளில் கைகொடுத்தது ‘நண்பன்’ திரைப்படம் மட்டுமே.

‘புலி’ வாரிவிட்ட பிறகு, அட்லி இயக்கத்தில் ‘தெறி’ படத்தில் நடித்து தன் மார்க்கெட்டை பல மடங்கு உயரத்துக்குக் கொண்டு சென்றார் விஜய்.

இரட்டைக் குதிரை சவாரி

சமீபகாலமாக வருடத்துக்கு ஒரு படம் என்பதை வழக்கப்படுத்திக் கொண்டிருக்கும் விஜய் 2017-ல், ‘மெர்சல்’ படத்துக்குப் பிறகு தேர்ந்தெடுக்கும் அனைத்துப் படங்களும் அவருக்கு ஏற்ற கதைக்களத்தையும், கதாபாத்திரத்தையும் கொண்டிருப்பதைப் பார்க்கமுடிகிறது. 'மெர்சல்' படத்தைத் தொடர்ந்து வரிசையாக 'சர்க்கார்', 'பிகில்', 'மாஸ்டர்' என்று அடுத்தடுத்து ஹிட் கொடுத்து வரும் விஜய், அடுத்ததாக நெல்சன் இயக்கத்தில் நடிக்கும் ‘பீஸ்ட்’ படத்தையும் பெருத்த நம்பிக்கையுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள் அவரது ரசிகர்கள்.

நெல்சன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘டாக்டர்’ திரைப்படம் இந்த நம்பிக்கைக்கு மேலும் வலு சேர்த்துள்ளது. தமிழ் சினிமாவின் உச்சத்திலிருக்கும் விஜய் தற்போது தெலுங்கு, தமிழ் என்று ஒரேநேரத்தில் 2 குதிரைகளில் சவாரி செய்ய முடிவெடுத்திருக்கிறார். அதுவும் வழக்கமான பாணியிலிருந்து மிகவும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரத்தின் மூலம் இந்தச் சவாரியை மேற்கொள்ளவிருக்கிறார். இந்தப் பயணம் உரிய இலக்கை அடையுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE