ஆறிலிருந்து எழுபது வரை: ரஜினி சரிதம் - 43

By திரை பாரதி

ரஜினியும் கமலும் கலந்துகொண்ட பிரம்மாண்ட நட்சத்திரக் கலைவிழா மலேசியாவில் நடந்தது. அந்த மேடையில் ‘இதுவரை நீங்கள் நடித்தப் படங்களில் உங்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படம் எது?’ என்று ரஜினியிடம் கேட்டார் நிகழ்ச்சித் தொகுப்பாளர். ‘முள்ளும் மலரும்’ என்று அரை நொடிகூட யோசிக்காமல் பதில் சொன்ன ரஜினி, ‘நான் செய்த கதாபாத்திரங்களில் காளியை என்றைக்கும் மறக்கமுடியாது’ என்றார். இது, இயக்குநர் மகேந்திரனுக்கு எத்தனை பெரிய அங்கீகாரம்!

மகேந்திரனின் பிடிவாதத்தால் ரஜினியை கதாநாயகனாகப் போட சம்மதித்த வேணு செட்டியார், “இன்ஜினியர் குமரன் கதாபாத்திரத்தில் கமல் எனக்காக நடித்துக் கொடுப்பார்” என்று மகேந்திரன் சொன்னதும் “டபுள் ஓகே...” என்றார். காளிக்கு சமமான கதாபாத்திரமாக இல்லைதான் என்றாலும் கமலின் வசீகரம் அந்தக் கதாபாத்திரத்துக்கு பொருந்தக் கூடியதாக இருக்கும் என்று மகேந்திரன் நம்பினார். நட்பின் உரிமையுடன் கமலிடம் போய் பேசினார்.

ஆனால், கமலிடம் அந்த சமயத்தில் சுத்தமாகக் கால்ஷீட் இல்லை. மிகுந்த வருத்தத்துடன் மறுத்தார். அதன் பிறகுதான், சரத்பாபுவை அந்தக் கேரக்டருக்கு தேர்வு செய்துகொண்டார்கள்.

கமலின் உதவி

படப்பிடிப்பு முடிந்து டபுள் பாசிட்டிவ் பிரதியைப் பார்த்த தயாரிப்பாளர் கொதித்துப்போய்,“நம்பிக் கொடுத்தேன்... என் தலையிலே மண்ணை அள்ளிப் போட்டுட்டியே மகேந்திரா... படத்துல எங்கய்யா வசனம்? வசனம்கிற பேர்ல அங்கே ஒண்ணு இங்கே ஒண்ணு வருது. படமாய்யா எடுத்திருக்கே?” என்று ஆவேசப்பட்டார்.

வழக்கமான நாடக பாணி வசனங்களுடன் கூடிய அண்ணன், தங்கை வசனக் காவியம் ஒன்றை எதிர்பார்த்தவருக்கு ‘முள்ளும் மலரும்’ அதிர்ச்சியைக் கொடுத்ததில் ஆச்சரியமில்லை. கோபித்துக்கொண்டு போன செட்டியாரை, அடுத்தநாள் நேரில் போய் பார்த்தார் மகேந்திரன். அவரைப் பார்த்ததுமே, “எதுக்குய்யா வந்தே... அதான் என்னை முடிச்சுட்டியே?” என்றார் செட்டியார்.

மகேந்திரன் தளரவில்லை. “அண்ணே... படத்துக்கு ரீ ரெக்கார்டிங் ஆனதும் பார்த்துட்டு முடிவு பண்ணுங்க. அதுவுமில்லாம, இன்னும் ஒரே ஒரு சின்ன சீன் மட்டும் பாக்கி. ஒரு 200 அடிதான். அதை முடிச்சுச் சேர்க்கணும்” என்றார். இதைக்கேட்டு வேணு செட்டியார் இன்னும் சீறினார். “போய்யா... இதுக்குமேல ஒரு பைசாகூட செலவு செய்யமாட்டேன். எடுத்தவரைக்கும் போதும். போட்ட முதல் கைக்கு வருதான்னு பார்ப்போம். என் முன்னால நிக்காத கிளம்பு” என்றார். அவருக்கு பாலுமகேந்திரா மீதும் ஏகப்பட்ட கோபம்.

நொந்துபோன மகேந்திரன் நேரே கமலிடம் போய், “சரத்பாபுவும் ஷோபாவும் முதன்முதலில் சந்தித்துக்கொள்ளும் காட்சி இல்லாமல் எப்படி நான் பாட்டைப் பயன்படுத்துவேன் கமல்? அந்தப் பாட்டு இல்லேன்னா... சரத் - ஷோபா காதல் எடுபடாது” என்றார்.

காட்சியின் முக்கியத்துவத்தை உணர்ந்த கமல், வேணு செட்டியாரைப் பார்த்துப் பேசினார். அப்போதும் செட்டியார் மசியவில்லை. “அந்தக் காட்சிக்கு ஆகிற செலவை நானே பார்த்துக்கிறேன் செட்டியார்... அதுக்காவது பர்மிஷன் தருவீங்களா?” என்று கமல் கேட்டதும், “அது உன் பாடு... எனக்கு ஆட்சேபனையில்லை” என்றார். அதன் பிறகு நண்பர் மகேந்திரனுக்கு கமல் கைகொடுக்க, சத்யா ஸ்டுடியோவில் அந்தக் காட்சியை எடுத்து முடித்து பாடலுக்கு முன் சேர்த்தார்கள்.

காசோலையுடன் வந்தார்!

படம் வெளியானது. முதல் 3 வாரங்கள் படம் பார்த்தவர்கள் மவுனமாகவே கலைந்து சென்றார்கள். செட்டியாரோ, “ நம்பக் கதை முடிஞ்சுபோச்சு” என்று மீண்டும் மீண்டும் புலம்பினார். ரஜினியும் மகேந்திரனும் பதைபதைத்துப் போனார்கள். முதல் வார முடிவில் படத்துக்கு விமர்சனங்களும் வெளியாகாத நிலையில், விளம்பரமும் குறைவாக இருக்க, ரஜினி, மகேந்திரன் இருவருமே தயாரிப்பாளரை நேரில் சந்தித்தனர்.

“படத்துக்கு இப்போ நீங்க செய்ற பப்ளிசிட்டி போதாது சார்” என்று இருவரும் அப்போது மன்றாடினார்கள். செட்டியாரோ, “ஓடாத படத்துக்கு பப்ளிசிட்டி தேவை இல்ல; ஓடுற படத்துக்கும் பப்ளிசிட்டி தேவை இல்ல... இது என் அனுபவம்ய்யா” என்றார். இப்படிச் சொன்னாலும் அடுத்து வந்த 3 நாட்களுக்கு அனைத்து நாளிதழ்களிலும் விளம்பரம் கொடுத்தார். 4-வது வாரத்தின் தொடக்கத்தில் அந்த அதிசயம் நிகழ்ந்தது. ‘முள்ளும் மலரும்’ வெளியான திரையரங்குகளில் திருவிழாக் கூட்டம். அந்தக் கூட்டம் 100-வது நாள்வரை குறையவில்லை. பத்திரிகைகள் பாராட்டித் தள்ளின.

படத்தின் வெற்றியை நம்பமுடியாத வேணு செட்டியார், மகேந்திரனைத் தேடி வந்தார். “மகேந்திரா... உன்னைத் திட்டிட்டேன். நீ கலைஞன்பா..! என்னை மன்னிச்சிரு... இந்தா பிளாங்க் செக். உனக்கு என்ன தொகை தேவையோ அதுக்கு மேலயே நிரப்பிக்கோ” என்று தொகை நிரப்பாத காசோலை ஒன்றை மகேந்திரன் கையில் கொடுக்க முயன்றார். அதை வாங்க மறுத்த மகேந்திரன், “இப்படியொரு படம் இயக்க வாய்ப்புக் கொடுத்தது பல கோடிகளுக்குச் சமம். இப்போ என்னை கலைஞன்னு சொன்னீங்க... அதுக்கு விலையே கிடையாது” என்று அவருடைய காலை தொட்டு வணங்கினார். பதறிப்போய் மகேந்திரனைக் கட்டிக்கொண்டார் வேணு செட்டியார்.

ஸ்ரீதேவியின் நடிப்பில் மிரண்ட ரஜினி!

‘முள்ளும் மலரும்’ வெற்றியைத் தொடர்ந்து, ரஜினியும் மகேந்திரனும் மீண்டும் ‘ஜானி’யில் இணைந்தார்கள். ரஜினிக்கு இரட்டை வேடம். ஆனால், டெம்பிளேட் இரட்டை வேடப் படங்களின் சின்ன சாயல் கூட இருக்காது.

ஜானி படப்பிடிப்பின் போது...

இந்தப் படத்தை ஒப்புக்கொண்டிருந்த சமயத்தில், பொழுதுபோக்கு அம்சங்களை முன்னிறுத்தும் கமர்ஷியல் அம்சங்கள் மிகுந்திருந்த படங்களின் நட்சத்திரமாக வெகு வேகமாக முன்னேறிக் கொண்டிருந்தார் ரஜினி. ஆனாலும், நண்பர் மகேந்திரனுக்காக ஜானியை அவரது படமாக இருக்கச் சம்மதித்தார். இதனால், காட்சிமொழி மற்றும் கதாபாத்திர வார்ப்பு எனும் அடையாளங்களை உருவாக்கும் தனது பாணியிலிருந்து ‘ஜானி’ விலகிவிடமாமல் பார்த்துக் கொண்டார் மகேந்திரன். அதேசமயம், மதிப்புக் கூடியிருந்த ரஜினியின் நட்சத்திர அந்தஸ்துக்கு ஈடுகொடுக்கும் படமாகவும் அதைப் படைத்திருந்தார். இந்த வசீகரக் கலவையைக் கண்ட திரையுலகினர், மகேந்திரனால் இப்படியும்கூட படமெடுக்கமுடியுமா என்று வியந்து பார்த்தார்கள்.

ஜானி படத்தில்...

‘ஜானி’யில் அசோக்குமாரின் ஒளிப்பதிவு, இளையராஜாவின் இசை ஆகிய இரண்டும் இன்றைக்கும் கொண்டாடப்படுகின்றன. என்றாலும் இதில் இயக்குநர் மகேந்திரன், ரஜினி - ஸ்ரீதேவி காதலை பனியிலும் மென்மையாகச் சித்தரித்திருந்தது ரசிகர்களை மீண்டும் மீண்டும் திரையரங்கை நோக்கி இழுத்தது.

‘ஜானி’ படத்தில் ஸ்ரீதேவி தனது காதலைச் சொல்லும் காட்சியில் ஸ்ரீதேவியின் நடிப்பைப் பார்த்துவிட்டு மிரண்டுபோனார் ரஜினி. “அந்தப் பொண்ணோட நடிப்போட என்னால போட்டிபோட முடியல மகி” என்று அந்தக் காட்சி படமாக்கப்பட்ட நாளில், மகேந்திரனிடம் தனிமையில் புலம்பினார் ரஜினி. இதுபற்றி மகேந்திரன் தன்னுடைய வார்த்தைகள் வழியே பகிர்வதைப் பாருங்கள்.

“அன்றைக்கு நடந்தது இதுதான். ஊட்டியில் 11.30 மணிக்கு ஒரு வீட்டுக்குள் படப்பிடிப்பு. எப்போதுமே என்னுடைய படப்பிடிப்பு நடக்கும் இடம் ரொம்பவும் அமைதியாக இருக்கும். காபி கொடுக்கிற புரொடக்‌ஷன் பையனிலிருந்து, லைட்மேன், உதவி இயக்குநர்கள், உதவி ஒளிப்பதிவாளர்கள் என்று எல்லோருமே அமைதியாக இருப்பார்கள். சார் எப்படி சீனை எடுக்கிறார் என்று பார்ப்பதில் அவர்களுக்கு நிறைய ஆர்வம். அதனால் நான் சைலன்ஸ் என்று சொல்வதற்கு அவசியமே இருக்காது. நானும் காட்சி எடுத்து முடித்தவுடன் அவர்களிடம் ‘எப்படி இருக்கு?’ என்று கேட்பது வழக்கம். அவர்கள்தானே எனக்குக் கண்ணாடி மாதிரி.

இப்படியான சூழலில் அந்தக் காட்சியை எடுக்கிறோம். ஸ்ரீதேவி சோபாவில் உட்கார்ந்திருக்க, அவருக்கு எதிரே க்ளோஸ் அப்பில் கேமரா வைக்கப்பட்டிருந்தது. கேமராவின் வியூஃபைண்டரில் பார்த்துவிட்டு, ‘ஸீ திஸ் மகேந்திரன். ஸீ ஹெர் அக்லி நோஸ்யா’ என்று சொல்லிவிட்டார் அசோக்குமார். நான் பதறிப் போய்விட்டேன். “என்ன சத்தம்?” என்று சொல்லிக்கொண்டே பக்கத்து அறைக்குள் போய்விட்டேன். அங்கிருந்துகொண்டு, அசோக்குமாரை வரச்சொல்லி ஜாடை காட்டினேன். அவரும் வந்தார். “என்னய்யா இது. என்ன மாதிரி சீன் எடுக்கிறேன். இந்த சமயத்தில் மூக்கு சரியில்லை, அசிங்கமாயிருக்குன்னு எல்லாம் சொல்லுறியே. அந்தப் பொண்ணு மனசு எவ்வளவு பாடுபடும்’ என்று அவரிடம் நொந்துகொண்டேன். ‘சாரி மகேந்திரன்... சாரி’ என்று அவரும் பதறிப்போய் மன்னிப்புக் கேட்டார். மனதில் பட்டதை அப்படியே சொல்லிவிடும் குழந்தை மனதுக்காரர் அசோக்குமார்.

அசோக்குமாரைத் திட்டிவிட்டு இந்தப் பக்கம் வந்தேன். இதில் பெரிய விஷயம் என்னெவென்றால், அசோக்குமார் அடித்த கமென்ட் தன் காதில் விழுந்தும் எதுவும் நடக்காததுபோல் அந்தப் பெண் அந்தக் காட்சியை அழகாக நடித்துக்கொடுத்ததுதான். படப்பிடிப்பு முடிந்து ஹோட்டலுக்கு வந்ததும் ரஜினி விடிய விடிய புலம்பித்தள்ளிவிட்டார். ‘அந்தப் பொண்ணோட நடிப்புக்கு முன்னால என்னால ஒண்ணும் பண்ண முடியல சார். ஹெல்ப்லெஸ்ஸா நின்னிட்டிருந்தேன்’ என்று சொல்லிக்கொண்டே இருந்தார் ரஜினி.

ஜானி படத்தில்...

‘ஒண்ணும் பண்ணமுடியாமல் நின்னதுதான் சார் அந்த சீனோட கிரேட்னஸ். அதுதான் இயல்பா வந்திருக்கு. உங்களுக்கும் கூடுதல் அழுத்தம் கொடுத்து ஸ்ரீதேவியுடன் போட்டிபோடுவது போல் எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்காது. நீங்க ஹெல்ப்லெஸ்ஸா நின்னுட்டிருக்கிறதுதான் அந்த சீனுக்குத் தேவை. அது இயல்பா, அட்டகாசமா வந்திருக்கு’ என்று சொன்னேன். அப்படியும் ஒரு இடத்தில் ஸ்ரீதேவியைத் தாண்டிச் சென்றிருப்பார் ரஜினி. ‘என்ன படபடான்னு கொஞ்ச நேரத்துல என்னென்னமோ பேசிட்டிங்க’ என்று பேசும் இடம்தான் அது. இருந்தாலும் ஸ்ரீதேவியின் நடிப்புத் திறமை குறித்து புலம்புவதை ரஜினி நிறுத்தவே இல்லை. அந்த மாதிரி மனம்திறந்து மற்றவர்களைப் பாராட்டுவதில் ரஜினி மன்னன்” என்று பகிர்ந்திருக்கிறார் மகேந்திரன்.

(சரிதம் பேசும்)

படங்கள் உதவி: ஞானம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE