பிக் பாஸ்: கமலுக்கு கைகொடுக்கும் ரம்யா கிருஷ்ணன்

By காமதேனு

பல்வேறு அனுமானங்களைத் தகர்த்து, கமலுக்கு பதில் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவராக அறிவிக்கப்பட்டிருக்கிறார் ரம்யா கிருஷ்ணன்.

பிக் பாஸ் தமிழ் நிகழ்வை அதன் 5-வது சீஸன் வரை தொகுத்து வழங்கி வருகிறார் கமல்ஹாசன். இடையில் அமெரிக்கா சென்று திரும்பியவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதில், அண்மையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து கமலுக்கு பதில் பிக் பாஸ் நிகழ்வைத் தொகுத்து வழங்கப்போவது யார் என்ற ஊகங்கள் றெக்கை கட்டிப் பறந்தன. மருத்துவமனையிலிருந்தவாறே கமல்ஹாசன் தொகுத்து வழங்குவார், கமலின் மகள் ஸ்ருதி ஹாசன் தோன்றுவார்.. என்று ஆரம்பித்துப் பலரது பெயர்கள் அடிபட்டன. ஆனால், பெரிதும் எதிர்பார்க்கப்படாத ரம்யா கிருஷ்ணன் பெயரை கமல்ஹாசன் டிக் செய்துள்ளார்.

ரம்யா கிருஷ்ணனின் கம்பீரத் தோற்றம், கணீர் குரல், நெடிய மேடை அனுபவம் ஆகியவை கமலின் இடத்தை ஓரளவுக்கேனும் நிரப்பும் என்பதுதான் இதற்கு காரணமாம். கமல்ஹாசனின் சிகிச்சை மற்றும் தொடர் ஓய்வு தேவையின் பொருட்டு, அடுத்து வரும் சில வாரங்களுக்கும் ரம்யா கிருஷ்ணனே தொகுப்பாளராக தொடர உள்ளார்.

இதையொட்டி பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு, மருத்துவமனையில் இருந்தவாறு கமல்ஹாசனே ரம்யா கிருஷ்ணனை அறிமுகம் செய்து வைக்கிறார். இது தொடர்பான முன்னோட்டத்தை தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE