இந்து - முஸ்லிம் ஒற்றுமையைக் குலைக்கும் ‘மாநாடு’!

By காமதேனு

மாநாடு திரைப்படம் இந்து, முஸ்லிம்கள் இடையே கலவரத்தைத் தூண்டுவதாக இருப்பதாகவும், சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்றும் பாஜக சிறுபான்மையினர் அணியின் தேசியச் செயலாளர் வேலூர் இப்ராஹிம் கூறியுள்ளார்.

மதுரையில் இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது:

சிம்பு நடித்த ‘மாநாடு’ திரைப்படத்தை நேற்று நான் பார்த்தேன். அந்தப்படம் சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்கும் அளவுக்கு மோசமான கருத்துகளை உள்ளடக்கியதாக இருக்கிறது. குறிப்பாக, அதில் வரும் காட்சிகள் காவல் துறையை இழிவுபடுத்தக்கூடியதாக அமைந்திருக்கின்றன. சமீபத்திய திரைப்படங்கள் அனைத்துமே காவல் துறையின் மாண்பைக் குலைக்கக்கூடிய விதத்தில் இருப்பதை நாம் பார்க்கலாம். சூர்யா நடிப்பில் வெளிவந்த ‘ஜெய் பீம்’ திரைப்படத்தில் பழங்குடி மக்களையும், பிற்படுத்தப்பட்ட மக்களையும் போலீஸார் மிகவும் வக்கிரமாக கையாள்வதாகக் காட்டுகிறார்கள். இருளர் இன மக்களை போலீஸார் தரக்குறைவாக நடத்துவது போன்ற அந்தப் படத்தின் காட்சிகள் பெரும் சர்ச்சையானது. இந்தப் படம் சம்பந்தப்பட்ட சில சித்தரிப்புக் காட்சிகளுக்காக படத்தின் இயக்குநர் மன்னிப்புக் கோரவேண்டிய சூழலும் ஏற்பட்டது.

செய்தியாளர் சந்திப்பில் வேலூர் இப்ராஹிம்...

அதேபோன்று, ‘மாநாடு’ திரைப்படத்தில் காவல் துறையினரை முழுக்க முழுக்க தீவிரவாதிகளை உருவாக்கக்கூடிய கருவியைப் போன்று காட்டுகிறார்கள். கோவை குண்டு வெடிப்பு சம்பவம் நடந்து 20 ஆண்டுகள் கடந்துவிட்டது. அதையெல்லாம் மறந்து இப்போது இந்து - முஸ்லிம் மக்களிடையே நல்லிணக்கம் திகழும் நேரத்தில், அதே கோவையில் மிகப்பெரிய கலவரம் நடப்பது போன்றும் அதைப் பயன்படுத்தி அப்பாவி இஸ்லாமியர் ஒருவரை காவல் துறையினர் தீவிரவாதியாக காட்டுவது போன்றும் படத்தில் காட்டுகிறார்கள். ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதியைப் போன்று காவல் துறையினரே திட்டமிட்டு உருவாக்குவது போன்றும் ஒரு மோசமான காட்சியை அதில் அமைத்திருக்கிறார்கள்.

ஏற்கெனவே கோவையில் உள்ள பல்வேறு அடிப்படைவாத இஸ்லாமிய அமைப்புகள், இஸ்லாமிய இளைஞர்களை காவல் துறையினருக்கு எதிராகத் திட்டமிட்டு வழிநடத்துகிறார்கள். ஒரு சில இஸ்லாமிய இளைஞர்கள் அதன் மூலமாக வன்முறைத் தாக்குதலுக்குத் தயாராகக் கூடிய சூழல் எல்லாம் இருக்கிற நேரத்தில், இப்படியான பிரச்சாரத்தை மாநாடு திரைப்படம் செய்கிறது.

கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில், சம்பந்தமே இல்லாத அப்பாவி இஸ்லாமியர்களைக் கைது செய்தது போன்றும், விடுதலையான பிறகும் அவர்களை வேண்டுமென்றே கைது செய்தது போன்றும் அந்தப் படத்தில் காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது. காவி வேட்டி, காவி சட்டை அணிந்தவர்களை இந்தப் படத்தில் வன்முறையாளர்களாகவும், மிகப்பெரிய ரவுடிகளாகவும், தொப்பி அணிந்து தாடிவைத்த முஸ்லிம்களை வன்முறையாளர்களாகவும் காட்டும் காட்சிகள் இருக்கின்றன. ஆபத்தான இந்தத் திரைப்படம் கோவையில் இந்து - முஸ்லிம் மக்களிடையே இருக்கும் மத நல்லிணக்கத்தை குலைக்கும் விதத்தில் இருக்கிறது.

எனவே, இந்தப் படத்திலுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகள் அனைத்தும் நீக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் இந்தத் திரைப்படத்தைத் தடை செய்ய வேண்டும். இல்லையெனில் படத்தின் இயக்குநர் மற்றும் நடிகர் சிம்பு வீடுகளை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு வேலூர் இப்ராஹிம் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE