மாநாடு: சுரேஷ் காமாட்சியைப் பாராட்டிய ரஜினி

By காமதேனு

சிம்பு ஒழுங்காக சூட்டிங் வராமல் இருந்தது, வெங்கட் பிரபுவுக்கும் சிம்புவுக்கும் இடையில் ஏற்பட்ட மனக்கசப்பு, சிம்பு ‘மகாமாநாடு’ என்று போட்டியாகப் படமெடுக்க முனைந்தது, ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு, கடைசிநேர ரிலீஸ் குழப்பம் எனப் பல தடைகளையும், முட்டுக்கட்டைகளையும் தாண்டி ‘மாநாடு’ திரைப்படம் வெளியாகி, ரசிகர்களின் ஆதரவுடன் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கின்றது.

இந்தக் களேபரத்தில் மிகவும் பாதிக்கப்பட்டது தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிதான். ரிலீஸ் தேதிக்கு முதல்நாள் இரவு மிகுந்த மன வேதனையுடன் அவர் பதிவிட்ட ட்விட்டர் பதிவே அதற்குச் சான்று. ஆனால், அவருடைய காத்திருப்புக்கும் பொறுமைக்கும் பலன் கிடைத்திருக்கிறது என்றே சொல்லவேண்டும்.

சமூக வலைதளத்தில் ‘மாநாடு’ திரைப்படம் ‘அண்ணாத்த’ திரைப்படத்துடன் வெளிவந்திருந்தால் ‘மாநாடு’ திரைப்படமே வெற்றி பெற்றிருக்கும் என்று சிம்பு ரசிகர்கள் ஒருபுறமும், ‘அண்ணாத்த’ வெற்றி பெற்றிருக்கும் என்று ரஜினி ரசிகர்கள் ஒருபுறமும் கலவரம் செய்து கொண்டிருந்தாலும், ‘மாநாடு’ திரைப்படத்தைப் பார்த்த ரஜினிகாந்த், சுரேஷ் காமாட்சியை போனில் அழைத்துப் பாராட்டியுள்ளார். சுரேஷ் காமாட்சி தன்னுடைய முகநூலில் இதை மகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார்.

அவரது பதிவில், “சூப்பர் ஸ்டாரின் அழைப்பும் பாராட்டும் இப்படத்தின் வெற்றியை உறுதிசெய்திருக்கிறது. நல்லதைத் தேடிப் பாராட்டும் இம்மனசே இன்னும் உங்களை உச்ச சிம்மாசனத்தில் உயர்த்தி வைத்திருக்கிறது. மிகுந்த பலம் பெற்றோம். ஒட்டுமொத்த படக்குழு சார்பாக நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்... மிக்க நன்றி சார்” என்று தெரிவித்திருக்கிறார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE