மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளர்ந்துவருபவர் டொவினோ தாமஸ். கதாநாயகனாக மட்டுமல்லாமல் வில்லன் கதாபாத்திரம், குணச்சித்திர வேடம் ஆகியவற்றிலும் நடித்துவருகிறார். ‘லூசிபர்’, ‘குருப்’ போன்ற படங்களில் சின்ன கதாபாத்திரத்தில் நடிப்பது ஒருபுறமிருந்தாலும், மறுபக்கம், நெட்ஃப்ளிக்ஸ் தயாரிப்பில் ‘மின்னல் முரளி’ போன்ற சூப்பர் ஹீரோ படங்களிலும் நடித்துவருகிறார்.
இந்தவகையில், டொவினோ தாமஸ் தயாரித்து, வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த திரைப்படம்தான் ‘களா’
இத்திரைப்படத்தில் டொவினோ தாமஸ் நடித்த ஆணவம் நிறைந்த கதாபாத்திரம், குடிபோதையில் ஒரு நாயைக் கொன்றுவிடுவான். அந்த நாயின் உரிமையாளனான எளியவன் ஒருவன் டொவினோ தாமஸ் கதாபாத்திரத்தைப் பழிவாங்குவதே இத்திரைப்படத்தின் திரைக்கதை. இத்திரைப்படத்தில் டொவினோ தாமஸ் மிக முதிர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். இறுதிக்காட்சியில் பயத்தில் உள்ளாடையுடன் கழிவறைக்குள் போய் ஒளிந்துகொள்ளும் காட்சி ஒரு சிறந்த உதாரணம். இந்த நடிப்பும், திரைக்கதையின் நேர்த்தி காரணமாக தற்போது இத்திரைப்படம் சிகாகோ திரைப்படவிழாவுக்குத் தேர்வாகியுள்ளது. இதைப் பெருமையுடன் தன் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார் டொவினோ தாமஸ்.