தமிழ் பிக் பாஸ் சீசன் 5 தற்போது 53 நாட்களைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது. நடுவில் பரபரப்பில் சற்று தொய்வு ஏற்பட்டதால் தற்போது வைல்ட் கார்ட் மூலமாக ஏற்கெனவே எலிமினேட் செய்யப்பட்ட அபிஷேக் ராஜா மற்றும் டான்ஸ் மாஸ்டர் அமீர், சஞ்சீவ் ஆகியோர் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர்.
இதற்கிடையே சமீபத்தில் அமெரிக்கா சென்று திரும்பிய கமல்ஹாசனுக்கு, கரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் அவர் தன்னை மருத்துவமனையிலேயே தனிமைப் படுத்திக்கொண்டுள்ளார். இதையடுத்து இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த வருடம் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய நாகர்ஜுனா, படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்ற போது, அவருக்குப் பதிலாக சமந்தா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். அதேபோல் தற்போது கமலுக்குப் பதில் அவரது மூத்த மகள் ஸ்ருதிஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவார் என்று கூறப்பட்டது. பிறகு விஜய் சேதுபதி அல்லது சிம்பு, ரம்யா கிருஷ்ணன், சூர்யா இவர்களில் யாராவது தொகுத்து வழங்குவார்கள் என்றெல்லாம் செய்திகள் வலம் வந்தன.
இந்நிலையில், கமல்ஹாசனின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அறிக்கை வெளியிடப் பட்டுள்ளது. அதனால், மருத்துவமனையில் இருந்தவாறு அவரே பிக் பாஸ் நிகழ்ச்சியைக் காணொலி வாயிலாகத் தொகுத்து வழங்கலாம் எனவும் இப்போது செய்திகள் வருகின்றன.
எனினும் இன்னமும் அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதும் வராத நிலையில், நாளை வெளியாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ப்ரொமோவில் இதற்கான விடை தெரிந்துவிடும்.