உறைந்த தேசத்தில் போராடும் பெண் விவசாயி!

By ம.சுசித்ரா

உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் விவசாயிகளின் வாழ்க்கை, போராட்டம் நிறைந்ததே. பனிச்சூழ் நாடான ஐஸ்லாந்திலும் கந்துவட்டிக் கொடுமையாலும் கடும் உழைப்புச் சுரண்டலாலும் அந்நாட்டு விவசாயிகளின் வதைபடுகின்றனர். அதிலும் பெண் விவசாயிகள் எதிர்கொள்ளும் துயரம் இன்னும் பேசாப்பொருளாகவே நீடிக்கிறது. இப்படியான சூழலில் ரேனீர், இங்கா தம்பதி, சிறிய பால் பண்ணை நடத்திவருகின்றனர்.

விவசாய சங்கமோ உள்ளூர் அரசியல் பஞ்சாயத்திலேயே உழன்று கொண்டிருக்கிறது. ஒருகட்டத்தில் இங்கா, தன்னைச் சுற்றி சுழன்றடிக்கும் முறைகேடுகளை எதிர்க்கத் துணிகிறார். விவசாயக் கூட்டமைப்பினரிடம் புரளும் லஞ்ச லாவண்யத்தை வெட்ட வெளிச்சத்துக் கொண்டுவரும் வேலையில் அதிரடியாக இறங்குகிறார். தான், இனியும் சங்கத்தின் கட்டுப்பாடுகளுக்கு அடங்கியிருக்கப் போவதில்லை என முடிவெடுத்து, சுயமாக அமேசான் இணையதளம் வழியாகப் பால் வியாபாரம் செய்ய முயல்கிறார். முகநூல் வழியாக விளம்பரம் செய்கிறார். இங்காவின் செயல்பாடுகள் பழமைவாதிகளை பதறவைக்கிறது. இங்காவுக்கு எல்லா ரூபங்களிலும் பிரச்சினை கொடுக்கிறார்கள். இறுதியில் யார் வென்றார் என்பதே, ‘தி கவுன்ட்டி’ திரைப்படம்.

செலுலாய்டுக்குச் சிறப்பு சலுகை!

எங்கெங்கு காணினும் பனிப்பாறைகள் நிறைந்த ஐஸ்லாந்து நாட்டில், திரைத் துறை இருப்பதே இன்னும் பலருக்குத் தெரியாது. உலக சினிமா ரசிகர்களில்கூட எத்தனை பேர் ஐஸ்லாந்து நாட்டுத் திரைப்படங்களைப் பார்த்திருப்பார்கள் என்பது தெரியாது. இந்திய சினிமா நூற்றாண்டு கண்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், ஐஸ்லாந்து நாட்டிலோ 1980-களில்தான் திரைத் துறை வளர்ச்சி அடையத் தொடங்கியது. இருப்பினும் ஆண்டுக்கு 3-லிருந்து 4 படங்கள்வரை மட்டுமே அங்குத் தயாரிக்கப்படும் நிலை பல ஆண்டுகளாக நீடித்து வந்தது.

இந்நிலையில், ஐஸ்லாந்தில் படப்பிடிப்பு நடத்துபவர்களுக்கு 25 சதவீதம் தள்ளுபடி அளிப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்தது. அதன் பிறகு ‘ட்வென்டியத் சென்சுரி ஃபாக்ஸ்’, ‘லூக்காஸ் பிலிம் லிமிடெட்’ உள்ளிட்ட சர்வதேசப் பெருநிறுவனங்களும் ஐஸ்லாந்தில் படப்பிடிப்பு நடத்துவதை வாடிக்கையாக்கின. அப்படி உருவானவைதான் ‘ஸ்டார் வார்ஸ்: ரோக் ஒன்’, ‘ப்ரோமெதஸ்’, ‘தி சீக்ரெட் லைஃப் ஆஃப் வால்டர் மிட்டி’ உள்ளிட்ட படங்கள். ஒருகட்டத்தில் தனக்கென தனிமுத்திரை படைத்தது ஐஸ்லாந்து சினிமா. 1991-ல் ‘சில்ரன் ஆஃப் நேச்சர்’ திரைப்படம் அப்படித்தான் எடுக்கப்பட்டது. சிறந்த அயல்நாட்டு சினிமாவுக்கான ஆஸ்கர் விருதுக்கு இந்தப் படம் பரிந்துரைக்கப்பட்டது. இந்நிலையில், அற்புதமான காணக்கிடைக்காத ஐஸ்லாந்து திரைப்படங்களை சென்னையிலே காணும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை சர்வதேசப் படவிழாவை ஒருங்கிணைத்துவரும் இண்டோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் திரைப்படச் சங்கம், புது டெல்லியில் உள்ள ஐஸ்லாந்து தூதரகம் மற்றும் சென்னையில் உள்ள ஐஸ்லாந்து இணைதூதரகத்துடன் இணைந்து, நவ.26, 27 ஆகிய நாட்களில் ஐஸ்லாந்து திரை விழாவை நடத்தவிருக்கிறது. சென்னை ராஜா அண்ணாமலைபுரம், தாகூர் ஃபிலிம் சென்டரில் மாலை 6 மணி முதல் திரையிடல் நடைபெறவிருக்கிறது. ‘தி கவுன்ட்டி’ உள்ளிட்ட 3 சிறப்புப் படங்கள் இதில் திரையிடப்படும்.

தொடர்புக்கு: 9840151956 / 8939022618

ஐஸ்லாந்து திரை விழா 26, 27 நவம்பர், 2021

நவ. 26

தொடக்க விழா - மாலை 6

’எக்கோ’ (Echo) - 79 நிமிடங்கள் - மாலை 6:30

நவ.27

’ஏ வைட், வைட்’ டே (A White, White Day) - 109 நிமிடங்கள் - மாலை 6

’தி கவுன்ட்டி’ (The County) – 92 நிமிடங்கள் - மாலை 7:50

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE