பொன் மாணிக்கவேல்: கூழாங்கல்

By எஸ்.எஸ்.லெனின்

பிரபுதேவாவின் நடிப்பில், நீண்டநாள் தயாரிப்பில் இருந்த ‘பொன் மாணிக்கவேல்’ திரைப்படம் ’ஹாட்ஸ்டார்’ ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது. முதல்முறையாகப் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்திருக்கிறார் பிரபுதேவா. சுவாரசியத்தைத் தூண்டும் படத்தலைப்பு வேறு. இந்த அம்சங்களுக்கு அப்பால், இத்திரைப்படம் எப்படி இருக்கிறது? எடுத்துக்கொண்ட கதையை வெற்றிகரமாகப் படமாக்கியிருக்கிறார்களா? பார்க்கலாம்.

க்ரைம் த்ரில்லர் கதை

நீதிபதி ஒருவரின் கொலையுடன் திரைப்படம் தொடங்குகிறது. கொல்லப்பட்டது நீதிபதி என்பதால் போலீஸாருக்கு அழுத்தங்கள் அதிகரிக்கின்றன. ஆனால், வழக்கின் புலன்விசாரணையில் முன்னேற்றம் இல்லாமல் போகவே, திறமையான விசாரணை அதிகாரியைத் தேடுகிறார்கள். ஐபிஎஸ் பணியிலிருந்து ஒதுங்கி விவசாயம் பார்த்துக்கொண்டிருக்கும் பொன் மாணிக்கவேலுக்கு (பிரபுதேவா) உயரதிகாரிகள் அழைப்பு விடுக்கின்றனர். பொறுப்பேற்கும் அவரும் ஏனோதானோவென்று விசாரணையைத் தொடர்கிறார்.

நீதிபதியைத் தொடர்ந்து காவல் துறை அதிகாரி ஒருவரும் கொல்லப்பட, அடுத்த குறியில் வர்த்தகப் பெரும்புள்ளி ஒருவர் சிக்குகிறார். அவரைப் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளில் பிரபுதேவா தன் கடமையிலிருந்து விலகி சில தனித்துவ ஏற்பாடுகளில் இறங்குகிறார். பிரபுதேவா யார், ஏன் அவ்வாறு செய்கிறார், தொடர் கொலைகள் எதனால் நடக்கின்றன, அதன் பின்னணி என்ன, அனைத்தும் எங்கே போய் முடிகின்றன... என்பன போன்ற தொடரும் கேள்விகளுக்கு ‘பொன் மாணிக்கவேல்’ திரைப்படம் விடை சொல்ல முயல்கிறது.

’போக்கிரி’ பிரபுதேவா

அதகள மற்றும் அலட்சிய போலீஸ் அதிகாரி பொன் மாணிக்கவேலாக பிரபுதேவா. விஜய் நடித்த 'போக்கிரி' படத்தை இயக்கியவர் என்பதை ரசிகர்களுக்கு ஞாபகமூட்டுவதுபோல, இப்படத்தில் பிரபுதேவாவின் நடிப்பு பிரயத்தனங்கள் வெளிப்பட்டிருக்கின்றன. ஐபிஎஸ் அதிகாரிக்கான மிடுக்கோ, பாந்தமோ இல்லாத கதாபாத்திரம். ஆனாலும் வயது வெளிப்படாமல், மனிதர் அப்படியே இருக்கிறார். உள்ளே ஆழம் கொண்டவராகவும் வெளியே எதிர்மாறாகவும் தொனிக்க வேண்டிய பொன் மாணிக்கவேலின் கதாபாத்திரத்தைத் திரையில் சித்தரிப்பதில் இயக்குநருக்குக் குழப்பம் இருந்திருக்கும் போல. பாதித் திரைப்படம் வரை, இவர் போலீஸா இல்லை பொறுக்கியா என குழப்ப வேண்டியதில் இயக்குநரும் தனியாகக் குழம்பியிருக்கிறார்.

பிரபுதேவா மனைவியாக நிவேதா பெத்துராஜ். ஒரு பாடல் தவிர்த்து, அவர் தோன்றும் முதல்பாதி காட்சிகள் அனைத்தும் அநியாய நேர விரயம். தம்பதியர் பிணைப்போ, ரொமான்ஸ் காட்சிகளோ கதையில் ஒட்டாமல் செல்கின்றன. மறைந்த இயக்குநர் மகேந்திரனுக்கு அழுத்தமான பாத்திரம். அளந்து நடித்தபோதும் திரைப்படத்தின் ஒருசில நிறைவான பாத்திரங்களில் ஒன்றாக நிற்கிறார். சுரேஷ் மேனன் ஆரம்பத்தில் மிரட்டினாலும், கடைசியில் அவரையும் அடியாள் அளவுக்குக் காலி செய்திருக்கிறார்கள்.

லாஜிக் பெருந்துளைகள்

வில்லன்கள் உட்பட திரைப்படத்தின் பெரும்பாலான கதாபாத்திரங்கள், தொண்ணூறுகளின் தெலுங்கு டப்பிங் திரைப்படம் பார்க்கும் உணர்வையே தருகின்றன. கைக்கொண்ட கதையை, திரைக்கதையாக முழுமை செய்வதில் இயக்குநர் பெருமளவு பிசகி இருக்கிறார். படத்தின் தொடக்கம் பெரிதாக எதிர்பார்ப்புகளை உருவாக்க, அவற்றை எந்த வகையிலும் ஈடேற்றாது, விட்டேற்றியாய் படம் ஓடுகிறது. ஒருசில முடிச்சுகள், ஃபிளாஷ்பேக் மர்மங்கள் இருந்தபோதும், அவை தவிர்த்த பெரும்பாலான காட்சிகள் அடுத்தடுத்து எளிதில் ஊகிக்கக்கூடியதாகவே செல்கின்றன.

கோலிவுட் முதல் பாலிவுட் வரை வெற்றிகரமான ஆக்‌ஷன் திரைப்படங்களை இயக்கியிருக்கும் பிரபுதேவா, இந்தத் திரைப்படத்தின் திரைக்கதைப் பெருந்துளைகளை எப்படி கோட்டைவிட்டார் எனத் தெரியவில்லை. அந்த அளவுக்குப் படம் முழுக்க லாஜிக் பொத்தல்கள். நகைச்சுவை அறவே இல்லாத போலீஸ் படத்தில், காவல் துறையினர் இடம்பெறும் காட்சிகள் அந்தக் குறையைப் போக்குகின்றன.

மிரட்டும் சண்டைக் காட்சிகள்

படத்தின் குறிப்பிடத்தக்க பிளஸ், சண்டைக் காட்சிகளை வடிவமைத்திருக்கும் அன்பறிவ்! பிரபுதேவாவின் உடல்வாகு, ஆக்‌ஷன் நகர்வுகள் ஒத்துழைக்காதபோதும், சக கலைஞர்களின் உழைப்பாலும் திட்டமிடலாலும், சண்டைக் காட்சிகளைத் தரமாக தந்திருக்கிறார்கள். ஒரு பாடலில் மட்டும் பிரபுதேவா தனது தனித்துவ அசைவுகளை, ஒரு நிமிடத்துக்கு உதிர்த்துப் போகிறார். மற்றபடி அவர் நடித்த திரைப்படங்களில் நடனம் புறக்கணிக்கப்பட்ட படமாகச் சேர்ந்திருக்கிறது பொன் மாணிக்கவேல்.

டி.இமான் இசையில் ‘உதிரா’ பாடல் கேட்டதும் உருக வைக்கிறது. இதர பாடல்கள் எங்கோ கேட்டதுபோல இருக்கின்றன; ஆக்‌ஷன் காட்சிகளில் பின்னணி இசை கேட்பதற்கே இரைச்சலாக இருக்கிறது. கதை, திரைக்கதையுடன் இயக்கியிருக்கும் ஏ.சி.முகில் செல்லப்பன், முதலாவதில் மட்டுமே தேறி இருக்கிறார். திரைக்கதையின் துளைகளை அடைத்து, இன்னும் சற்றும் விறுவிறுப்பேற்றியிருப்பின், பொன் மாணிக்கவேல் சுவாரசியமான க்ரைம் த்ரில்லர் திரைப்படமாகி இருக்கும். படத்தின் பெரும்பகுதி மையத்திலிருந்து விலகி பார்வையாளர்களைச் சோதிப்பதையும் தடுத்திருக்கலாம்.

#மீடூ - என்கவுன்டர்

சமகாலத்தை உலுக்கிய மீடூ அம்சத்தை கதையில் லேசாகத் தொட்டுவிட்டு மறந்துவிடுகிறார்கள். அதே சமயம் எதிர்திசையிலிருக்கும் என்கவுன்டர் போக்கைப் படத்தில் தூக்கிப் பிடிக்கிறார்கள். 2 வருடமாக வெளியீட்டுக்குக் காத்திருந்த திரைப்படத்தில் இதனால், 20 வருட பழைய நெடியடிக்கிறது. உதட்டில் உட்காராத உச்சரிப்புகளும், வாய்ஸ் ஓவர் சமாளிப்புகளும் திரைக்கதைத் தடுமாற்றங்களை வெளிக்காட்டுகின்றன. படத்தின் நீளத்தை 2 மணி நேரமாகச் சுருக்கி இருப்பது சிறப்பு. அதற்காக, ஆங்காங்கே துண்டாடியதில், காட்சிகள் தொடர்ச்சியற்று துருத்தலாய் துன்புறுத்துகின்றன.

படத்தின் பிரதான வில்லன் கதாபாத்திரம் கடைசி அரைமணியில்தான் அறிமுகமாகிறது. அதிலும் வக்கிரத்துக்கு அப்பால் வித்தியாசமற்ற சேஷ்டைகளுடன் வெறுப்பேற்றுகிறது. வில்லனின் முடிவு இதுதான் என்று தெரிந்திருந்த போதிலும், காட்சிகளில் வித்தியாசம் காட்டாது இழுத்தடிப்பது பொறுமையைச் சோதிக்கிறது. இயக்குநர் மகேந்திரன் நடித்திருக்கும் காட்சிகள் உருக்கமானவை. விரிவாக வந்திருக்க வேண்டிய அந்தக் காட்சிகள், முதல் பாதியின் அநாவசிய காட்சியோட்டத்தில் மூழ்கிப்போகின்றன.

பொன்னும் மாணிக்கமும் பொதிந்த கதையிலிருந்து, கூழாங்கற்கள் நெருடும் திரைக்கதையைத் தந்திருக்கிறது பொன் மாணிக்கவேல் திரைப்படம்.

இந்த வாரம் ஓடிடியில் வேறென்ன பார்க்கலாம்?

தென்கொரிய ஆக்‌ஷன் த்ரில்லரான, ’தி டெரர் லைவ்’ (2013) திரைப்படத்தின் இந்தி தழுவலான ‘தமாக்கா’ திரைப்படத்தை நெட்ஃப்ளிக்ஸில் பார்க்கலாம். கார்த்திக் ஆர்யன், மிருணாள் தாக்கூர் உள்ளிட்டோர் நடிப்பில், தமிழ் டப்பிங்கிலும் ‘தமாக்கா’வைத் தரிசிக்கலாம்.

’தி வீல் ஆஃப் டைம்’ என்ற புதிய ஃபேன்டஸி தொடர் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகி இருக்கிறது. முதல் சீஸனின் முதல் 3 எபிசோடுகள் நவ.19 அன்றும், அதன் பின்னர் வாரம் ஒன்று என அடுத்த 5 எபிசோடுகளும் வெளியாக உள்ளன.

’Kvodo’ என்ற இஸ்ரேலியத் தொடரின் அதிகாரபூர்வத் தழுவலாக, இந்தியில் வெளியாகும் ’யுவர் ஹானர்’ வலைத்தொடரின் 2-வது சீஸன் ’சோனிலிவ்’ தளத்தில் வெளியாகி இருக்கிறது.

இந்தியாவின் எலான் மஸ்க் ஆக மாறத்துடிக்கும் ஓர் இளைஞனின் கனவு, பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளால் என்னவாகிறது என்பதை நகைச்சுவையாகக் கூறும் இந்தித் திரைப்படமான ’கேஷ்’, டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் வெளியாகி இருக்கிறது.

டோலிவுட் ரொமான்ஸ் திரைப்படமான ’மோஸ்ட் எலிஜிபிள் பேச்சிலர்’ கடந்த மாதம் திரையரங்கில் வெளியான சூட்டோடு, ’ஆஹா’ தளம் வாயிலாக ஓடிடி ரசிகர்களை குறிவைத்துள்ளது. அக்கினேனி குடும்பத்தின் அடுத்த திரைவாரிசான அகில் அக்கினேனி மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் பொம்மரில்லு பாஸ்கர் இயக்கிய முழுமையான பொழுதுபோக்கு படைப்பு இது.

மலையாளத்தில் வெளியான ஃபேன்டஸி, த்ரில்லர் திரைப்படமான ’சுருளி’யை ’சோனிலிவ்’ தளத்தில் பார்க்கலாம்.

கொரிய வலைத்தொடர் ரசிகர்கள் மற்றும் தாராளமாய் நேரம் இருக்கிறது என்பவர்களுக்கான புதிய நெட்ஃப்ளிக்ஸ் வெளியீடு ’ஹெல்பவுண்ட்’. அறிவியல் புனைவு, க்ரைம், ஃபேன்டஸி என பலதும் கலந்த, இந்தத் தொடரின் முதல் சீஸன் தற்போது வெளியாகி இருக்கிறது.

இந்தப் படைப்புகள் அனைத்தும் நவ.19 அன்று வெளியானவை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE