உளப்பூர்வமான வருத்தத்தை தெரிவிக்கிறேன்...

By காமதேனு

‘ஜெய் பீம்’ திரைப்படம் வெளியாகி 20 நாட்களுக்கு மேலாகியும் அதன் சர்ச்சைகள் தீர்ந்தபாடில்லை. வில்லன் வீட்டில் வன்னியர்களின் அடையாளமான அக்னி கலசம் காட்டப்பட்டதற்கு எதிராக, பாமக மற்றும் வன்னியர் சங்கங்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன. இந்த விவகாரத்தால், நடித்த சூர்யாவுக்கு ஆபத்து ஏற்படலாம் என்று தமிழக அரசு அவரது வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளித்துள்ளது. இந்தப் பிரச்சினை பூதாகரமாக வளர்ந்துவரும் நிலையில், ‘ஜெய் பீம்’ திரைப்படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேல் நடந்தவைகளுக்கு வருத்தம் தெரிவிக்கும் விதமாக 2 பக்க அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், “ஜெய் பீம் திரைப்படத்திற்கு எல்லா தரப்பினரிடமிருந்தும் கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சி அளித்தது. அதேபோல, இத்திரைப்படத்திற்கு எழுந்த சில எதிர்மறைக் கருத்துகள் நான் சற்றும் எதிர்பாராதவை.

பின்னணியில் மாட்டப்படும் ஒரு காலண்டர் படம், ஒரு சமூகத்தைக் குறிப்பதாகப் புரிந்து கொள்ளப்படும் என நான் அறியவில்லை. 1995 காலத்தைப் பிரதிபலிப்பதே அந்த காலண்டரின் நோக்கமே அன்றி, குறிப்பிட்ட சமூகத்தின் குறியீடாக அதைக் காட்ட வேண்டும் என்பது எங்கள் யாருடைய நோக்கமும் அல்ல.

சில வினாடிகள் மட்டுமே வருகிற அந்தக் காலண்டர் படம் படப்பிடிப்பின்போதும், ‘போஸ்ட் புரடெக் ஷன்’ பணியின்போதும் எங்கள் யாருடைய கவனத்திலும் பதியவில்லை. அமேசான் ப்ரைமில் படம் வெளிவரும் முன்பே, பெரிய திரையில் பல்வேறு தரப்பினரும் திரைப்படத்தைப் பார்த்தனர். அப்போது கவனத்திற்கு வந்திருந்தாலும் கூட , படம் வெளிவரும் முன்பே அதை மாற்றி இருப்போம்.

நவம்பர் மாதம் 1-ம் தேதி இரவு அமேசானில் படம் வெளிவந்தும், காலண்டர் படம் பற்றி சமூக வலைதளங்கள் மூலம் அறிந்தவுடன், உடனடியாக நவம்பர் 2-ம் தேதி காலையே அதை மாற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.

யாரும் கேட்பதற்கு முன்பே, அந்தக் காலண்டர் படம் மாற்றப்பட்ட பிறகு, எங்களுக்குத் தனிப்பட்ட உள்நோக்கம் எதுவும் இல்லை என்பது எல்லோருக்கும் புரியும் என்று நம்பினேன். இயக்குநராக நான் மட்டுமே பொறுப்பேற்க வேண்டிய விஷயத்திற்கு திரு. சூர்யா அவர்களைப் பொறுப்பேற்கச் சொல்வது துரதிர்ஷ்டவசமானது.

தயாரிப்பாளராகவும், நடிகராகவும் இத்திரைப்படத்தில் திரு. சூர்யா அவர்கள், பழங்குடியின மக்களின் துயரங்களை அனைவருக்கும் கொண்டு சேர்ப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருந்தார். இயக்குநராக என்பொருட்டு அவருக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருத்தத்தைப் பதிவு செய்ய விரும்புகிறேன்.

அனைத்து சமூகத்தினருக்கும் இடையே நல்லிணக்கம் ஏற்படுத்தும் கலைவடிவமே திரைப்படம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

இத்திரைப்பட ஆக்கத்தில் எந்தவொரு தனிப்பட்ட நபரையோ, எந்தவொரு குறிப்பிட்ட சமுதாயத்தையோ அவமதிக்கும் எண்ணம் சிறிதளவும் இல்லை என்பதை மீண்டும் வலியுறுத்திக் கூற விரும்புகிறேன். இதன் பொருட்டு மன வருத்தம் அடைந்தவர்களுக்கும், புண்பட்டவர்களுக்கும் என் உளப்பூர்வமான வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.


த.செ.ஞானவேலின் முழு அறிக்கை:

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE