யார் இந்த டேப் ராதா மாணிக்கம்?

By ப.கவிதா குமார்

ஏதோ ஒரு சேனலில் எம்ஜிஆர் டேப் அடித்து பாடிக்கொண்டிருந்தார்.

தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை
தண்ணீரில் பிழைக்க வைத்தான்
கரைமேல் இருக்க வைத்தான் பெண்களை
கண்ணீரில் குளிக்க வைத்தான்...

சிறு வயதிலிருந்து எம்ஜிஆர் படங்களை அதிகம் பார்த்து வளர்ந்தவன் என்பதால், விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையில் வெளிவந்த இந்தப் பாடல் எனக்கு மனப்பாடம். டேப் என்ற கருவியை வைத்துக்கொண்டு இப்படியான ஒரு அற்புதமான பாடலைத் தந்ததால்தான், அவர்கள் மெல்லிசை மன்னர்கள் என்று போற்றப்பட்டார்கள்.

தப்பு போன்ற வடிவம் கொண்ட டேப் இசைக்கருவி, தமிழிசையை மக்களிடையே கொண்டுசெல்ல பயன்பட்ட வாத்தியக் கருவியாகும். எரிந்த கட்சி, எரியாத கட்சி போட்டிபோட்டு பாடல் பாடும் போது டேப் அடித்துப் பாடுவார்கள். இஸ்லாமிய பக்கீர்கள் வீடு, வீடாக மயில் தோகையால் குழந்தைகளுக்கு மந்திரித்து தாயத்து வழங்கும்போது டேப்படித்து பாடும் பாடல்கள், ஒரு காலத்தில் மதுரை வீதிகளில் பிரபலம். ‘படகோட்டி’ திரைப்படப் பாடலைக் கேட்கும்போதெல்லாம், இந்த பக்கீர்கள் என்ன ஆனார்கள் என்ற கேள்வியும் மனதில் கவலையாய் ஒட்டிக்கொள்ளும்.

டேப் இசைக்கருவி

தமிழ் சினிமாவில் வாத்தியங்கள் வாசிப்பது போல பல பாடல்களில் காட்சியமைக்கப்பட்டுள்ளன. ‘திருவிளையாடல்’ படத்தின் தொடக்கமே ஏராளரமான இசைக்கருவிகள் வாசிப்பது போன்ற காட்சி பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருக்கும். பாடலே இல்லாமல் இசைக்கருவிகளின் அற்புதமான ஊர்வலத்தை திரையிசை திலகம் கேவி.மகாதேவன் நடத்தியிருப்பார். பழைய பாடல்களில் வீணையும், பியானோவும் தவறாமல் இடம் பெறும். கிடார், அகார்டியன், தபேலா, நாதஸ்வரம் உட்பட பல இசைக்கருவிகளை மீட்டுவது போல பல படங்களில் காட்சியமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், தமிழ் சினிமாவில் டேப் வைத்து பாடுவது போல சில பாடல்களே இடம் பெற்றுள்ளன.

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் 1961-ல் ‘பாவமன்னிப்பு’ படத்தில் டேப் அடித்து பாடுவது போன்ற பாடல் அமைக்கப்பட்டது. பீம்சிங் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் மெல்லிசை மன்னர்கள் இசையில் இ.எம்.நாகூர் ஹனீபா, டி.எம்.சௌந்தரராஜன் பாடிய அரிய பாடல். கவியரசர் கண்ணதாசன் எழுதியது.

எல்லோரும் கொண்டாடுவோம்
எல்லோரும் கொண்டாடுவோம்
அல்லாவின் பேரை சொல்லி
நல்லோர்கள் வாழ்வை எண்ணி...

சிவாஜியை இப்பாடலில் பார்க்கும்போது, என் முன் டேப் அடித்து பக்கீர்கள் பாடிய காட்சி நினைவுக்கு வருகிறது. படகோட்டி மட்டுமின்றி எம்ஜிஆர் 1974-ம் ஆண்டு வெளியான சிரித்து வாழ வேண்டும் படத்திலும் டேப் அடித்து பாடியிருப்பார். எஸ்.எஸ்.பாலன் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் மெல்லிசை மன்னர் இசையில் டி.எம்.சௌந்தரராஜன்

எண்ணத்தில் நலம் இருந்தால் இன்பமே எல்லோர்க்கும்
அன்புள்ள தோழர்களே
அஸ்ஸலாமு அலைக்கும்

என்று தொகையறாவுடன் தொடங்கி, ‘ஒன்றே சொல்வான் நன்றே செய்வான் அவனே அப்துல் ரஹ்மானாம் ஆண்டான் இல்லை அடிமை இல்லை எனக்கு நானே எஜமானாம்’ எனப் பாடுவார். இப்படத்தில் எம்ஜிஆர், ரகுமான் என்ற முஸ்லிம் கேரக்டரில் நடித்திருப்பார். தமிழ் சினிமாவில் முஸ்லிம் கதாபாத்திரத்தைக் கதாநாயகன் ஏற்பதென்பது, அந்தக் காலத்தில் இருந்து இப்போது வரை குதிரைக் கொம்பாக இருக்கிறது.

1987-ல் பிரபு, ரேகா, ரகுவரன் நடிப்பில் ராம.நாராயணன் இயக்கத்தில் வெளியான ‘மேகம் கருத்திருக்கு’ படத்தில் மனோஜ் - கியான் இசையில் கே.ஜே.யேசுதாஸ் பாடிய ‘அழகான புள்ளிமானே உனக்காக அழுதேனே’ பாடல் காட்சியில் டேப் வாசிப்பது போல பிரபு பிரமாதமாக நடித்திருப்பார்.

1988-ல் விஜயகாந்த், ராம்கி, நிரோஷா நடிப்பில்
பி.ஆர்.தேவராஜ் இயக்கத்தில் வெளியான ‘செந்தூரப்பூவே’ படத்தில் மனோஜ் - கியான் இசையில் டேப் பாடல் இடம்பெற்றது. ‘செந்தூரப் பூவே இங்கு தேன் சிந்த வா வா’ என்ற அந்தப் பாடலை ராம்கி டேப் அடித்து பாடுவது காட்சியமைக்கப்பட்டிருக்கும். எஸ்.பி.பாலசுப்ரமணியம், பி.எஸ்.சசிரேகா அற்புதமாக பாடலைப் பாடியிருப்பார்கள்.

எனக்கு, டேப் என்ற சொல் 5 வயதிலேயே அறிமுகமாகிவிட்டது. மதுரை கோ.புதூர் பஸ் ஸ்டாண்டில் கே.பி.ஜானகியம்மாள் படிப்பகத்துக்கு காலையில் பேப்பர் படிக்க என் தந்தை போகும்போது, என்னையும் அழைத்துச் சென்றுவிடுவார். சிறுவனாக இருந்த எனக்கு பேப்பரைவிட, அவர் அதிகாலையில் வாங்கித் தந்த பருத்திப்பால் சுவையாக இருந்தது. அந்த படிப்பகத்துக்கு எதிரே புதூர் பணிமனை அருகே காங்கிரஸ் மன்றம் (இப்போது தமாகா மன்றமாக மாறிவிட்டது) இருந்தது.

அதில் மாதத்துக்கு ஒருநாள் குழாய் கட்டி பாடல் போடுவார்கள். அங்கு என் வீடு என்பதால் பாடல் நன்றாகக் கேட்கும். அப்படி காங்கிரஸ் மன்றத்தில் இருந்து ஒலித்த,


செந்தமிழர் மைந்தர்களே சிந்தனை செய்க இந்த தேசம் போகும் போக்கை எண்ணி வேதனை கொள்க’

என்ற டி.ஆர்.மகாலிங்கத்தின் குரலில் வழிந்த காமராஜர் புகழ் பாடிய பாடலைக் கேட்டிருக்கிறேன். எஸ்.சி.கிருஷ்ணன் பாடிய, ‘இமயம் முதல் குமரி வரை இணையற்ற எங்கள் காமராஜர்’, டி.எம்.சௌந்தரராஜன் பாடிய, ‘நர்மதை ஆற்றின் கரையில் பிறந்தார் காந்தி மகான் எழில் நங்கை கங்கை மண்ணில் பிறந்தார் நேரு பிரான்’ பாடல்களையும் கேட்டிருக்கிறேன்.
ஆனால், காங்கிரஸ் மன்றத்தில் கேட்ட பாடலும், பள்ளியில் அதிகாலை பிரேயரில் கேட்ட பாடலின் குரலும் ஒன்றாக இருந்தது.

காங்கிரஸ் மன்றத்திலிருந்து,

உன்னை போல் தலைவர் உண்டோ
உழைப்பாலே உயர்ந்தவரே
அன்னை சிவகாமி பெற்ற
ஆசியாவின் திருவிளக்கே
அன்பிலே ஆழ்ந்த நிலை
ஆற்றலிலே இமயமலை

என்ற பாடலும், பள்ளி பிரேயரிலிருந்து

கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள்
திறக்கப்படும் தேடுங்கள் கிடைக்குமென்றார்
இயேசு தேடுங்கள் கிடைக்குமென்றார்...

என்று பாடிய குரலும் ஒன்றாக இருந்தது. என் அப்பாவிடம் இந்த விஷயத்தைச் சொன்னபோது, அந்தப் பாடலைப் பாடியவர் பெயர் டேப் ராதாமாணிக்கம் என்று சொன்னார். அவர் பாடிய, ‘சங்கே முழங்கு சங்கே முழங்கு காமராஜ் புகழ் வாழ சங்கே முழங்கு’ என்ற பாடலையும் அடிக்கடி காங்கிரஸ் கூட்டங்களில் அப்போது கேட்டிருக்கிறேன். இப்போது இந்தப் பாடல் ஒலிக்கிறதா என்ற கேள்வி என்னுள் எழுகிறது.

விட்டேத்தி என்ற சொல் உண்டு. அதாவது எதைப் பற்றியும் கவலைப்படாத தன்மை என்று அதற்கு அர்த்தம். டேப் ராதாமாணிக்கம் குரல், எனக்கு அப்படித்தான் என் 5 வயதில் அறிமுகமானது. நான் படித்த ஆர்.சி.நடுநிலைப் பள்ளியில், பாட்டு பாடு என்று ஆசிரியர்கள் சொன்னால் சட்டென டேப் ராதாமாணிக்கம் பாடிய பாடல்களைத்தான் மாணவர்கள் பாடுவார்கள். ஏனெனில், பள்ளி ஆண்டு விழாக்களில் அவர் பாடல் தான் அதிகம் ஒலிபரப்பு செய்வார்கள்.

முதலில் பாடலாசிரியராகத்தான் டேப் ராதா மாணிக்கத்தின் பயணம் தொடங்கியுள்ளது. சிலப்பதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டு 1964-ல், ப. நீலகண்டன் இயக்கிய திரைப்படம் ‘பூம்புகார்’. திரைக்கதை, வசனத்தை மு.கருணாநிதி எழுதினார். விஜயகுமாரி, எஸ்.எஸ். ராஜேந்திரன், ராஜஸ்ரீ, கே.பி.சுந்தராம்பாள் நடித்த இப்படத்தில் உடுமலை நாராயணகவி, கவிஞர் மாயவநாதன், கருணாநிதி, கவிஞர் ஆலங்குடி சோமு ஆகியோருடன் டேப் ராதாமாணிக்கமும் பாடல் எழுதியுள்ளார். ஆனால், டைட்டிலில் ராதாமாணிக்கம் என்று போடுவார்கள்.

இப்படத்தில், காலத்தால் அழியாத காதல் பாடலை ராதா மாணிக்கம் எழுதினார் என்றால் நம்ப முடிகிறதா? ஆர்.சுதர்சனம் இசையில் டி.எம்.சௌந்தரராஜன், எஸ்.ஜானகி பாடிய அந்த பாடல்,

என்னை முதல் முதலாகப் பார்த்தபோது என்ன நினைத்தாய்
நான் உன்னை நினைத்தேன்

காதல் தேன் சொட்டச் சொட்ட எழுதப்பட்ட இந்தப் பாடலை எழுதியவர்தான், பின்னாளில் இயேசு புகழ்பாடும் ஏராளமான பாடல்களை எழுதிக் குவித்தார். இப்படத்துக்குப் பின் பெரிதாக வாய்ப்புகள் கிட்டவில்லை. காங்கிரஸ் கட்சிக்குக் காமராஜர் புகழ்பாடி பல பாடல்களை டேப் ராதாமாணிக்கம் எழுதினார். அங்கும், பெரிய அளவு வரவேற்பு கிடைக்கவில்லை.

இந்த நிலையில்தான் அவர், ‘கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்’ என்ற முதல் பக்திப் பாடலை எழுதிப் பாடினார். இந்தப் பாடலுக்கு கிறிஸ்தவ மக்கள் மட்டுமின்றி இசைநேசர்களுக்குப் பிடித்தமான பாடகராக மாறினார். இதன் பின்பே அவர் கிறிஸ்தவ பக்திப் பாடல்களை எழுத ஆரம்பித்தார்.

இசையமைப்பாளர் டி.பி.ராமச்சந்திரன் இசையில் 1966-ல் டேப் ராதாமாணிக்கம் எழுதி எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய இந்த பாடல், அவரின் சூப்பர் ஹிட் என்றே சொல்லலாம்.

ஏசு ரட்சகர் பெயரைச் சொன்னால்
எதுவும் நடக்குமே
அவரை இதயத்தோடு
கலந்து விட்டால் எல்லாம் கிடைக்குமே...

குன்னக்குடி வைத்தியநாதனின் உதவியாளரான எம்.முத்து இசையில் டேப் ராதாமாணிக்கம் எழுதி, எல்.ஆர்.ஈஸ்வரியோடு இணைந்து பாடிய பாடல்,

ஆதவன் உதிக்கும் முன் எழுவீர் - நம்
ஆண்டவன் தோன்றிவிட்டார் - இயேசு
ஆண்டவன் தோன்றிவிட்டார்
காலை ஜெபத்தினில் கடவுள் வடிவினில்
கர்த்தர் தோன்றிவிட்டார் - நம்
கர்த்தர் தோன்றிவிட்டார்

எல்.ஆர்.ஈஸ்வரியோடு டேப் ராதாமாணிக்கம் இணைந்து பாடிய மற்றொரு பாடல்,

ஆழ்ந்த சேற்றினில் அகப்பட்ட நம்மை
அணைத்து எடுத்தாரே
இயேசு அணைத்து எடுத்தாரே
அலை கடல் நடுவே தவிக்கின்ற நமக்கு
ஆறுதல் அளிப்பாரே
இயேசு ஆறுதல் அளிப்பாரே...

எளிய இசை வடிவத்தில் ஆனால், கேட்போரின் இதயத்தில் நங்கூரம் பாய்ச்சும் வகையில் வார்த்தைகளைப் போட்டு, பாடல் எழுதுவதில் டேப் ராதாமாணிக்கம் புகழ் பெற்றவராக இருந்துள்ளார். அதற்கு இந்தப் பாடலை உதாரணமாகச் சொல்லலாம். அவருடன் எல்.ஆர்.ஈஸ்வரி இணைந்து பாடியுள்ளார்.

ஏழைக்குப் பங்காளராம்
பாவிக்கு இரட்சகராம்
ஏசு என்னும் திருமகனாம்
மரியாள் வளர்த்த மைந்தன்
மனித தெய்வம் அவதரித்தார்
மாடுகட்டும் தொழுவத்திலே
மாணிக்கம் பிறந்ததம்மா...

டேப் அடித்துக்கொண்டு கிறிஸ்தவ ஜெபக்கூட்டங்கள், கிறிஸ்வத ஆலயங்களில் பாடிய டேப் ராதாமாணிக்கத்தின் கற்பனை அலாதியானது. ஒரு பாடலில் இப்படி எழுதியுள்ளார்.

அந்தி வானம் சிவக்குதம்மா
அல்லி மலர் சிரிக்குதம்மா
ஆண்டவராம் இயேசு பிரான்
அன்பு மணம் மணக்குதம்மா...
முள்முடி சூட்டி வந்த
முதல் தலைவன் இயேசுவுக்கு
கல்வாரி சிலுவையிலே
காயம் பட வைத்தனரே...

நல்ல கற்பனை வளம் கொண்ட டேப் ராதாமாணிக்கம், ‘இயேசு சொன்ன பொன்மொழி தான்’, ‘தாய் மறந்தாலும் தந்தை மறந்தாலும்’, ‘காவியம் போற்றுகின்ற, ஏசுவை விசுவாசி நீ என்றைக்கும்’ , ‘ஏசுவின் ஆலய மணியோசை கேட்டு இதயம் குளிருதடா நெஞ்சில் இன்பம் பிறக்குதடா’ என்பன உள்ளிட்ட பாடல்களை எழுதியும், பாடியும் மகிழ்வித்துள்ளார். அவர் முதல் முயற்சியான ‘கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்’ பாடல் கிட்டத்தட்ட 6.30 நிமிடங்கள் அந்தக் காலத்து அரக்கு ரெக்கார்டில் பதிவு செய்யப்பட்டது.

எந்தத் திக்கல் திணறலும் இல்லாமல் அவர் பாடிய இந்தப் பாடல் புகழ் பெறவும், அதே மெட்டில் அவரைப் பலர் பாடல்கள் எழுதச்சொன்னார்கள். காமராஜரைப் புகழ்ந்து பாடிய டேப் ராதாமாணிக்கம் எம்ஜிஆரைப் புகழ்ந்தும் பாடல் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE