விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவையா தமிழ்த் திரைப்படங்கள் ?

By க.விக்னேஷ்வரன்

தீபாவளி ஸ்பெஷல் திரைப்படமாகத் திரையரங்குகளில் வெளியான ‘அண்ணாத்த’ தொடர்ந்து வசூலைக் குவித்துவருகிறது. கதை, திரைக்கதை, பின்னணி இசை எனப் பல்வேறு அம்சங்கள் மோசமாக இருப்பதாக, விமர்சனங்கள் எழுந்தாலும் அது ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் வசூலைப் பாதிக்கவில்லை என்றே சொல்லலாம்.

விமர்சனங்கள் மட்டுமே ஒரு படத்தின் வெற்றியைத் தீர்மானிக்கும் காரணி அல்ல என்பதை, மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது ‘அண்ணாத்த’ திரைப்படம். ஆனால், விமர்சனங்களை திரைப்படத் துறையினரும், நட்சத்திரக் கலைஞர்களின் ரசிகர்களும், பொதுமக்களும் எவ்வாறு உள்வாங்கிக்கொள்கிறார்கள் என்பதில் இன்றளவும் சிக்கல்கள் நீடித்துவருகின்றன.

சமீபத்தில் ‘ப்ளிப் ப்ளிப்’ என்ற யூடியூப் சேனல், ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் ‘ரோஸ்ட்’ வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது. இதற்கு ரஜினி ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. காவல் துறையில் அந்தச் சேனலை மூடக்கோரிப் புகார் அளிக்கும் அளவுக்கு எதிர்ப்புகள் எழுந்தன. சில ரசிகர்கள் ஒரு படி மேலே சென்று, அந்த யூடியூப் சேனலைச் சேர்ந்தோரின் குடும்பத்தாரின் புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு மிரட்டல் விடுத்தனர். இதைத் தொடர்ந்து ‘ப்ளிப் ப்ளிப்’ யூடியூப் சேனல்காரர்கள், “நாங்கள் வெளியிட்டது விமர்சன வீடியோ அல்ல இது ‘ரோஸ்ட்’ வீடியோ” என்று தன்னிலை விளக்கம் அளித்துள்ளனர்.

சரி, அது என்ன ரோஸ்ட்... விமர்சனத்துக்கும் ரோஸ்ட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன... தமிழ் சினிமா இதற்கெல்லாம் தயாராகிவிட்டதா? அலசுவோம்.

நம்மூர் ரோஸ்ட்!

ரோஸ்ட் என்பது மேலைநாடுகளில் மிகப் பிரபலமான ஒரு கலாச்சாரம். எந்த ஒரு விஷயத்தையும் புனிதப்படுத்துவதே தவறுகளுக்கும், சமூகச் சீர்கேட்டுக்கும் இட்டுச்செல்லும் என்பதால் அனைத்து விஷயங்களையும் பகடி செய்து கேள்விக்கு உட்படுத்துவதுதான், ரோஸ்ட்டின் அடிப்படை சாராம்சம். நம்மூர் கலாச்சாரத்திலும் ரோஸ்ட் இருந்திருக்கிறது என்று கூறுகிறார் ‘ப்ளிப் ப்ளிப்’ சேனலின் சர்வ்ஸ் சகா.

“கிராமப்புற மேடை நாடகங்களில் நாயகன் நாயகி கதாபாத்திரங்கள் அசாத்தியமான காரியங்களைச் செய்து மக்களை வியப்பில் ஆழ்த்திக்கொண்டிருக்கும்போது, இடையில் பபூன் ஒருவர் தோன்றி, அந்தக் கதாபாத்திரங்களைக் கேலி செய்து நகைப்புக்குரியவர்களாக மாற்றிவிடுவார். பபூனின் வசனங்களில் இரட்டை அர்த்த வசனங்களும் அடங்கியிருக்கும். கிராமிய வாழ்வியலின் ஓர் அங்கம்தான் பாலியல் சொற்களும் கதைகளும்” என்கிறார் சர்வ்ஸ் சகா.

சாகித்ய அகாடமி விருதுபெற்ற மறைந்த மூத்த எழுத்தாளரான கி. ராஜநாராயணனின் பல படைப்புகள், குறிப்பாக ‘வயது வந்தவர்களுக்கு மட்டும்’ புத்தகம், முழுக்க முழுக்க கிராமியப் பாலியல் கதைகளை உள்ளடக்கியதுதான் என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். பாலியல் சொல்லாடல் என்பது இலக்கியத்தோடு, கலையோடு நீண்டகாலமாகப் பயணித்து வருகிறது என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

ஆனால், பொதுச் சமூகம் அதை எப்படிப் பார்க்கும் என்பதும் கவனத்துக்குரியது.

‘பிட்வீன் டூ ஃபெர்ன்ஸ்’ நிகழ்ச்சியில் ஒபாமா

மேலைநாட்டு ரோஸ்ட்!

மேலைநாடுகளில் ரோஸ்ட் நிகழ்ச்சிகள் படு ரகளையாக இருக்கும். சமூகத்தில் முக்கியப் புள்ளியாக இருக்கும் அரசியல்வாதிகள், சினிமா நட்சத்திரங்களை அழைத்துவந்து அவர்கள் முன்னிலையிலேயே அவர்களை வறுத்தெடுத்து விடுவார் ரோஸ்ட் செய்பவர். நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர், இதற்கெல்லாம் சம்மதம் தெரிவித்துத்தான் நிகழ்ச்சியில் கலந்துகொள்வார். தங்கள் மீதான சமூகக் கற்பிதங்களையும், பிம்பங்களையும் உடைப்பதற்காகப் பிரபலங்கள் இதுபோன்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்வது வழக்கம். ‘ஹேங் ஓவர்’ திரைப்பட வரிசையில் ‘ஆலன்’ கதாபாத்திரத்தில் நடித்துப் புகழ்பெற்ற ஸாக் கேலிவினாக்கஸ் தொகுத்து வழங்கும் ‘பிட்வீன் டூ ஃபெர்ன்ஸ்’ (Between Two Ferns) என்ற நிகழ்ச்சியைப் பார்த்தால், ரோஸ்ட் என்பது எவ்வளவு உக்கிரமாக இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

மேலை நாடுகளில் உள்ள பல ரோஸ்ட் கலைஞர்களுக்கு ஒரு சிறந்த உதாரணம்தான் ஸாக் கேலிவினாக்கஸ். தமிழ்நாட்டிலும் சில யூடியூப் சேனல்கள் இதேபோன்ற ரோஸ்ட் நிகழ்ச்சிகளை முயற்சித்துப்பார்த்தனர். ஆனால், அதில் முழு வெற்றியடையவில்லை. ‘ப்ளிப் ப்ளிப்’ சேனல் ஒரு திரைப்படத்தை எடுத்துக்கொண்டு அந்தத் திரைப்படத்தில் இருக்கும் கதாபாத்திரங்களின் பிற்போக்குத்தனங்களையும், கதையின் கருத்தில் இருக்கும் பிரச்சினைகளையும் ரோஸ்ட் செய்துவருவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். புதிதாக வரும் படம் மட்டுமல்லாமல், பல ஆண்டுகளுக்கு முன் வந்த ‘முதல்வன்’ போன்ற திரைப்படங்களைக்கூட அவர்கள் ரோஸ்ட் செய்திருக்கிறார்கள்.

“நாங்கள் செய்யும் ரோஸ்ட் அனைத்தும் திரைப்படங்களில் வரும் கதாபாத்திரங்களை நோக்கித்தானே தவிர அந்த நடிகரைக் குறிப்பிட்டு அல்ல” என்பதையும் ‘ப்ளிப் ப்ளிப்’ யூட்யூப் சேனலைச் சேர்ந்தவர்கள் அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிடுகின்றனர். உதாரணத்துக்கு, ஜேம்ஸ் பாண்ட் ஒரு பெண் பித்தர் என்று நாம் விமர்சித்தால் (அது உண்மையும் கூட!) அது, ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தை நோக்கித்தானே தவிர, இதுவரை ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்த 6 நடிகர்களையும் நோக்கியதல்ல என்பது ‘ப்ளிப் ப்ளிப்’ சேனல்காரர்கள் முன்வைக்கும் வாதம்.

ப்ளூ சட்டை மாறன்

திரைத் துறையினர் - ரசிகர்கள் - விமர்சகர்கள்

திரைமறைவாக சில திரைப்படத் தயாரிப்பாளர்கள் சில யூடியூப் சேனல்களுக்குப் பணம் வழங்கி, தங்கள் திரைப்படங்களைப் பற்றி நல்லவிதமாக விமர்சனம் செய்யுங்கள் என்று கூறுவதாகக் குற்றச்சாட்டுகள் ஒருபுறமிருந்தாலும், தொடர்ந்து யூடியூப் விமர்சகர்களுக்கும் திரைத் துறையினருக்கும் இடையே ஒரு பகைமையை வெளிப்படையாகப் பார்க்க முடிகிறது. குறிப்பாக, புகழ்பெற்ற விமர்சகர் ப்ளூ சட்டை மாறனைச் சில திரைப்படத் தயாரிப்பாளர்கள் மேடையிலேயே மிகக் கீழ்த்தரமாகத் திட்டியதை எல்லாம் தமிழ் சினிமா சமூகம் பார்த்திருக்கிறது. இது போக, தங்கள் அபிமான நடிகரின் திரைப்படத்தைத் தவறாகப் பேசிவிட்டார் என்று கொதிப்படைந்த ரசிகர்களின் ஏச்சுகளையும், வசைகளையும் அனுதினமும் சமூக வலைதளங்களில் சந்தித்துவருகிறார் மாறன்.

தான் ரசிக்கும் நடிகனைப் பிறரும் கண்ணை மூடிக்கொண்டு ரசிக்க வேண்டும் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பும், தாங்கள் எடுக்கும் / நடிக்கும் படங்கள் விமர்சனத்துக்கு உட்படுத்தப்படக் கூடாது என்ற திரைப்படத் துறையினரின் எதிர்பார்ப்புமே இதுபோன்ற சர்ச்சைகளுக்குக் காரணம்.

திரைப்படம் என்பது கலைவடிவம். கலை எப்போதும் விமர்சனத்துக்கு உட்பட்டது. விமர்சனங்களே கலை செம்மையடைய உதவும். தன் பணத்தைச் செலவழித்துப் படம் பார்க்கும் அனைவருக்குமே, அத்திரைப்படத்தை விமர்சிப்பதற்கான தார்மிக உரிமையிருக்கிறது. ஆனால், அதற்காகக் கையாளும் சொற்களிலும், கருத்துகளிலும் கவனம் தேவை. கலையோ, கலைஞர்களோ விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என்பதை உணர்ந்தாலே, சர்ச்சைகளைத் தவிர்க்கலாம்.

மறுபுறம், ரோஸ்ட் என்பது ஆபாசம், கலாச்சாரத்துக்கு எதிரானது என்று பேசுபவர்கள் சற்று பின்னோக்கி யோசித்தால், சில ஆண்டுகளுக்கு முன்பு சமூகத்துக்கு அந்நியமாக இருந்த பல விஷயங்கள், இன்று சமூகத்தின் அங்கமாகியிருப்பது தெரியும். கூடவே, இப்போது அந்நியமாகவும் அசவுகரியம் தரும் வகையிலும் இருக்கும் விஷயங்கள், இனி சமூகத்தின் அங்கமாகும் வாய்ப்புகள் அதிகம் என்பதும் புலப்படும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE