‘முள்ளும் மலரும்’ பட க்ளைமாக்ஸ் படப்பிடிப்பில் கோபித்துக்கொண்டு கிளம்பிய சரத்பாபுவை, மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து அழைத்து வந்து, அவருக்கு அறிவுரை கூறிப் புரிய வைத்தார் மகேந்திரன்.
படப்பிடிப்பு முடிந்ததும் சரத்பாபுவிடம் வந்தார் ரஜினி. “சரத்... நான் உங்ககிட்ட ஏதும் தவறா நடந்துக்கிட்டேனா..? என் பிகேவியர் எதுவும் பிடிக்கலையா? ஓபனா சொல்லுங்க. அப்படியிருந்தா.. நான் என்னை மாத்திக்கணும் ப்ளீஸ் ஹெல்ப் மீ” என்று கெஞ்சலாகக் கேட்டார் ரஜினி.
அவர் இப்படி இறங்கிவந்து கேட்டதும், சரத்பாபு சங்கோஜப்பட்டுச் சொன்னார், “சாரி ரஜினி ... ரெண்டு பேருமே கேபி சார்கிட்டேயிருந்து வந்திருக்கோம். நீங்க சீனியர்... நான் நடந்துக்கிட்டதுதான் சரியில்லை. ஐ யம் பிகேவ்டு லைக் ய ஸ்கூல் பாய்... மகேந்திரன் சாரும் வேணு செட்டியாரும் இது டபுள் ஹீரோ சப்ஜெக்ட்ன்னு சொன்னாங்க. ஆனா, க்ளைமாக்ஸ்ல உங்க கேரக்டருக்குத்தான் கூடுதல் இம்பார்ட்டன்ட் கொடுத்திருக்காங்கன்னு ஃபீல் பண்ணிட்டேன்”
சரத் இப்படிச் சொன்னதும். “நோ… நோ சரத். டைரக்டர் சொன்னதுதான் கரெக்ட். நாம ரெண்டுபேருமே போட்டிப்போட்டு நம்ம கேரக்டர்ஸ் மேல ஃபோகஸ் பண்றோம். உனக்கு அதுல வந்த கோபம்தான். நீ வேணா பாரு. இதுக்கப்புறம் நாம இன்னும் க்ளோஸ் ஃபிரெண்டா ஆகிடுவோம்” என்றார் ரஜினி.
சில எமோஷனல் ரசிகர்கள்...
ரஜினி சொன்னதுதான் நடந்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று தென்னிந்திய சினிமாவில் நூற்றுக்கும் அதிகமான படங்களில் கதாநாயகனாகவும் பல படங்களில் எதிர்மறை குணச்சித்திரக் கதாபாத்திரங்களிலும் பிஸியாக நடிக்கத் தொடங்கிய சரத்பாபு, ரஜினியின் நெருக்கமான நண்பர்களில் ஒருவராக மாறியது மட்டுமல்ல... அவருடைய படங்களில் தொடர்ந்தும் இடம்பிடித்தார்.
அண்ணாமலை படத்தை முதலில் இயக்குநர் வசந்த் சாய் தான் இயக்குவதாக இருந்தது. ஆனால், அவர் அமைத்திருந்த திரைக்கதையில் சில குறைகளை ரஜினி சுட்டிக்காட்டியதும், இனி இந்தப் படத்தை வசந்த் இயக்குவது சரியாக இருக்காது என்று இந்திப் பட வேலைகளில் இருந்த தனது மற்றொரு மாணவனான சுரேஷ் கிருஷ்ணாவை அழைத்து பொறுப்பைக் கொடுத்தார் கேபி. திரைக்கதையில் தேவையான மாற்றங்களைச் செய்துகொள்ளவும் சொன்னார்.
படப்பிடிப்பு தொடங்க சில தினங்களே இருந்த நிலையில், “அந்த அசோக் கேரக்டருக்கு யாரைப் போடப்போற சுரேஷ்?” என்று கேட்டார் கேபி. “அதுதான் சார் இன்னும் பிடிபடல...” என்று சுரேஷ் கிருஷ்ணா சொன்னார். “எதுக்கும் ரஜினிகிட்ட கேளு... பட்டுன்னு சொல்லுவான்… ஸ்கிரிப்ட் சொன்னதுமே மனசுக்குள்ள சினிமாவை ஓட்டிப் பார்க்கிற ஆளு அவன். அவனோட சினிமால அசோக் கேரக்டர்ல யார் நடிச்சுக்கிட்டு இருக்கான்னு கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டு அந்த நடிகரையே போட்டுடு. எனக்குத் தெரிஞ்சு அது சரத்பாபுவாகூட இருக்கலாம்” என்றார்.
தன்னுடைய மாணவர்களை எவ்வளவு அழகாகப் புரிந்து வைத்திருக்கிறார் இந்த கேபி என்று சுரேஷ் கிருஷ்ணா ஆச்சரியப்பட்டுப்போனார். ஏனென்றால், ரஜினி பரிந்துரை செய்ததும் சரத்பாபுவைத்தான். “அசோக் கேரக்டர் என்னை அடிக்கிற மாதிரி சீன் வருது. அதை சரத்பாபு பண்ணும்போது என்னோட ரசிகர்கள் கண்டிப்பா கோபப்பட மாட்டாங்க. அதுவே வேற யாராவதுன்னா அவங்க வீட்ல கல்லெறிஞ்சுடுற அளவுக்கு சில எமோஷனல் ஃபேன்ஸ் சென்னையில இருக்காங்க” என்றார் ரஜினி.
‘காளி’தான் ஹீரோ!
ரஜினிக்கு ஈடுகொடுக்கும் ஃபவர்புல் வில்லனாக எப்படி ரகுவரன் ரசிகர்களால் பார்க்கப்பட்டாரோ, அதேபோல் முதலில் ரஜினிக்கு நண்பனாக இருந்து பின்னர் எதிரியாக மாறிவிடும் வில்லன் வேடங்களுக்கு சரத்பாபுவை கண்ணை மூடிக்கொண்டு ஒப்பந்தம் செய்யும்படி ரஜினி சொன்னார்.
ரஜினி தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை இன்றைக்கும் மதித்து அவருடன் நல்ல நண்பராக இருந்துவரும் சரத்பாபு, ‘முள்ளும் மலரும்’ வெளியாகி 3-வது வாரத்திலிருந்து மிகப்பெரிய வரவேற்பைப் படம் பெற்றிருந்த நேரத்தில் ரஜினியைச் சந்தித்தார். எங்கும் ‘காளி’யைப் பற்றியே பேச்சாக இருந்தது. “தியேட்டர்ல போய் படத்தைப் பார்த்தேன் ரஜினி. நீங்க வர்ற சீன்கள கொண்டாடுறாங்க... படத்துல நீங்கதான் உண்மையான ஹீரோ” என்று வாழ்த்தினார் சரத்.
உண்மைதான்! தன்னுடைய தங்கை மீது தான் வைத்திருக்கும் பாசத்துக்கு இணையாக, தன்னுடைய தன்மானத்தையும் முக்கியமாகக் கருதும் காளி கதாபாத்திரம் போன்று, இன்னமும் தமிழ் சினிமாவில் நம்பகமான ஒரு கதாபாத்திரம் உருவாக்கப்படவில்லை. அதன் அமரத்துவ வெற்றிக்குப் பின்னால், ‘எது இருக்கோ.. இல்லையோ.. தன்மானம் முக்கியம்’ என்று நினைத்த முரட்டு கிராமத்து இளைஞர்களின் சாயல் அப்படியே இருந்தது. அவர்கள், அந்தக் கதாபாத்திரத்தில் தங்களைப் பொருத்திப் பார்த்து எளிதில் அடையாளம் கண்டுகொண்டார்கள். ”கெட்ட பய சார் இந்தக் காளி...” என்ற வசனத்தில் காளி என்கிற பெயரை எடுத்துவிட்டு, தங்களுடைய பெயரை நிரப்பிக்கொண்டார்கள்.
தன்மானம் மிக்க காளிக்கு, அதுவே அவனது தனித்துவ அடையாளமாக மாறி, படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில், “இப்பவும் உங்கள எனக்குப் பிடிக்கல சார்” என்று சரத்பாபுவைப் பார்த்துச் சொல்லும் வரைத் தொடர்ந்தது. காளியின் குணத்தைத் தவறாகப் புரிந்துகொள்வதில் இன்ஜினியருக்கு இருக்கும் சிக்கல் ஒழுங்கை விரும்பும் அவருடைய குணம். ‘வின்ச்’ என்பது தனது சொந்த வாகனம் போன்றது என்றே காளி நினைத்தான். அதில் அவன் ஏழை, எளிய மக்களை ஏற்றிச் செல்கிறான். ‘இவன் மட்டும் யாருக்கும் கட்டுப்படாத ஒருவனாக இருக்கிறானே’ என்கிற ஈகோ உள்ளுக்குள் இருந்தாலும் அதை இன்ஜினியர் காட்டிகொள்ளவில்லை.
அதேபோல், மேலதிகாரியின் அதிகார வரம்புக்குள் ஏவல் செய்பவனாக இருக்க காளி விரும்பவில்லை. அவரவர் வேலைகளை அவரவர் பார்க்கட்டும், அதிகார அடுக்கைப் பயன்படுத்தி, யாரும் யாரையும் கட்டுப்படுத்தக் கூடாது என நினைத்தான். தன்னுடைய இந்த குணத்தைப் புரிந்துகொண்டவர்கள் மீது அவனது அன்பு நிபந்தனையற்று வழிந்தோடுகிறது. அதுவே, தனது குணத்தை ஏற்க மறுப்பவர்களுக்கு அவன் முரடன் ஆகிறான். இதனால், கோபம், மகிழ்ச்சி ஆகிய இரண்டின் உச்சத்தையும் தொட்டு நிற்கிறான் காளி.
குணச்சித்திரம் என்பதன் அடையாளம்
காளி கதாபாத்திரத்தின் வழியே பாசம், காதல், கோபம், விரக்தி, தன்மானத்தைக் கடைசிவரை கைவிடாத தன்னம்பிக்கை என அத்தனை உணர்ச்சிகளையும் தன்னுடைய கண்களின் வழியாக மிக அளவாகவும் துல்லியமாகவும் கட்டுப்படுத்தி வெளிப்படுத்தினார் ரஜினி.
கையை இழந்த பிறகு, படத்தில் அதுவரையிலான தன்னுடைய உடல்மொழி, வசன உச்சரிப்பிலிருந்து விலகி நின்று, இன்னும் நடிப்பைக் கட்டுக்குள் வைத்து காளியின் இழப்பை வெளிப்படுத்தியிருந்தார். அதுவரை, குணச்சித்திரம் என்பதை ரஜினியிடம் எதிர்பார்க்க முடியாது, அவர் வெறும் வில்லன் மெட்டீரியல் என்று நினைத்துகொண்டிருந்தனர். இல்லை.. இல்லை... தான் தலைசிறந்த நடிகன் என்பதை ‘முள்ளும் மலரும்’ வழியாக நிரூபித்தார் ரஜினி.
நான்கு ஆளுமைகள்
காளியின் கதாபாத்திரம் இத்தனை வலிமையாக வெளிப்பட்டு நின்றதற்கு, ஒரு நேர்த்தியான திரைக்கதை எழுத்தாளராக, கதாபாத்திரங்களை சமரசமின்றி எழுதிய மகேந்திரன் முதன்மையான காரணம். அதை, ரஜினியுடன் இணைந்து அவரது தங்கையாக நடித்த ஷோபா, படாபட் ஜெயலட்சுமி, சரத்பாபு உள்ளிட்ட நடிகர்கள் சிறப்பாக நடித்திருந்தனர்.
காட்சி மொழியின் வழியாக உணர்வுகளைக் கடத்தி, வசனத்தைக் குறைத்ததும், படம் முழுவதும் கலை அமைதியை மகேந்திரன் கையாண்டதும் யதார்த்த அலை சினிமாவுக்கு மிகப்பெரிய தொடக்கமாக ‘முள்ளும் மலரும்’ அமைந்துபோனது. பாடல்கள் மட்டுமே திரைப்படத்துக்கான இசை அல்ல; பின்னணி இசைதான் அதில் பிரதானமானது. இதை எடுத்துக்காட்டிட அமைந்த களத்தை, இளையராஜா முதன் முதலாக சிறப்பாகப் பயன்படுத்திக்கொண்ட உன்னதமும் இந்தப் படத்தை உச்சத்தில் வைத்தது. ரஜினி, மகேந்திரன், இளையராஜா ஆகிய 3 ஆளுமைகளுடன் ‘முள்ளும் மலரும்’ பிரசவித்த 4-வது ஆளுமை பாலுமகேந்திரா.
மின் உற்பத்தி நிலையத்துடன் கூடிய வின்ச் ஸ்டேஷன், மலையக கிராமத்து வாழ்க்கை, அதனுடன் கூடிய இயற்கை என கதைக் களத்தைப் பின்னிப் பிணைத்த பாலுமகேந்திராவின் ஒளிப்பதிவு, ரசிகர்களை கதபாத்திரங்களின் வாழ்விடத்துக்கே அழைத்துக் கொண்டுபோனது. ‘செந்தாழம் பூவில்’ பாடலை பாலுமகேந்திரா ஒளிப்பதிவு செய்திருந்த விதம், இன்றைய தலைமுறை ஒளிப்பதிவாளர்களுக்கும் இன்றைக்கும் ரெஃபரென்ஸாக இருக்கிறது.
இந்தப் பாடலுக்கான ‘லீட் சீனில்’ சரத்பாபுவும் ஷோபாவும் சந்தித்துக்கொண்டால்தான், பாடலானது கதைப்போக்கின் தொடர்ச்சியாக அமையும். ஆனால், அந்தக் காட்சியைப் படம் பிடிக்காமல் தவறிப்போனார் மகேந்திரன். படத்தை எடிட் செய்து போட்டுப் பார்த்ததும் தான் தவறு புரிந்தது. அந்தப் பாடலில் சிலிர்த்தோடும் காதலின் குளிர்ச்சியை ரசிகர்கள் முழுமையாக உணரவேண்டுமானால், அந்த ‘லீட் சீன்’ மிக அவசியமானது. இந்த சமயத்தில் படத்தின் டபுள் பாசிட்டிவ் பிரதியைப் பார்த்து முடித்த தயாரிப்பாளர் வேணு செட்டியார், மகேந்திரனைப் பார்த்து, “அடப்பாவி… என் வயித்துல நெருப்பை அள்ளிக் கொட்டிட்டியே… ஒரு பைசாவைக் கூட நான் ரெக்கவர் பண்ணமுடியாது. எல்லாம் போச்சு. படமாய்யா எடுத்து வெச்சிருக்க?” என்று காட்டுக் கத்தலாய்க் கத்தினார்.
இதைக் கேள்விப்பட்ட ரஜினி ஓடோடி வந்து, மகேந்திரனுக்கு தைரியம் சொன்னார். “மகி... மனசுல படுறதைச் சொல்றேன். உங்க காளி உங்களக் கைவிட மாட்டான். அவன் கைவிட்டாலும் நான் கைவிட மாட்டேன்” என்றார் ரஜினி.
(சரிதம் பேசும்)
படங்கள் உதவி: ஞானம்