கோவா சர்வதேச திரைப்பட விழா - ஹேமமாலினிக்கு சிறப்பு விருது

By காமதேனு

52-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா, இன்று கோவாவில் கோலாகலமாகத் தொடங்கியது. திரைப்பட விழாவில் சர்வதேசப் பிரிவில் சுமார் 73 நாடுகளிலிருந்து 148 படங்கள் இடம்பெறுகின்றன. நவ.28 வரை இவ்விழா நடைபெறுகிறது. ஓடிடி தளங்களான நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம், ஜீ 5, வூட், சோனி லைவ் ஓடிடி தளங்கள் வரலாற்றில் முதன்முறையாக இவ்விழாவில் கலந்துகொள்கின்றன.

இந்திய சர்வதேச திரைப்பட விழா நடக்கும் பிரம்மாண்ட அரங்கம்

தொடக்க விழாவில், மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் விளையாட்டுத் துறை மந்திரி அனுராக் தாகூர், மத்திய இணை மந்திரி எல்.முருகன், பாலிவுட் நட்சத்திரங்கள் சல்மான்கான் மற்றும் ரன்வீர்சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆண்டுதோறும் இந்தியாவில் சர்வதேச திரைப்பட விழாவையொட்டி, ‘இந்தியத் திரைப்பட ஆளுமை விருது’ வழங்கப்படுகிறது. அவ்வகையில், இந்த ஆண்டுக்கான இந்தியத் திரைப்பட ஆளுமை விருது ஹேமமாலினிக்கு வழங்கப்பட்டது. விருதை மத்திய மந்திரி அனுராக் தாகூர், இணை மந்திரி எல்.முருகன் ஆகியோர் வழங்கினர். இதேபோல், சிறந்த பாடலாசிரியரும், மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரிய தலைவருமான பிரசூன் ஜோஷிக்கும் இந்த விருது வழங்கப்பட உள்ளது. கடந்த ஆண்டு இந்த விருது வங்காள திரைப்பட நடிகரான பஸ்வஜித் சட்டர்ஜிக்கு வழங்கப்பட்டது.

ஹாலிவுட் பிரபலம் மார்ட்டின் ஸ்கோர்செஸி மற்றும் புகழ்பெற்ற ஹங்கேரிய திரைப்பட தயாரிப்பாளர் இஸ்டெவன் சாபோ ஆகியோருக்கு, ‘சத்யஜித் ரே வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE