விக்ரமும், அவரது மகன் துருவ் விக்ரமும் முதல்முறையாக இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘மகான்’. கார்த்திக் சுப்புராஜ் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். வாணி போஜன், சிம்ரன், பாபி சிம்ஹா எனப் பலர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
கார்த்திக் சுப்புராஜின் இதற்கு முந்தைய திரைப்படமான ‘ஜகமே தந்திரம்’ நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. இத்திரைப்படம் கடுமையான விமர்சனத்தைப்பெற்றது. ‘மகான்’ திரைப்படமும் ஓடிடி தளத்தில் வெளியிடப்படும் என்று கூறப்பட்டுவந்தது. இந்நிலையில், தயாரிப்பாளர் தனஞ்செயன் இணைய உரையாடல் ஒன்றில், ‘மகான்’ திரைப்படம் கண்டிப்பாகத் திரையரங்கில் வெளியாகும் என நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.
‘மகான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கெனவே முடிவடைந்த நிலையில், 2022-ம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு அல்லது குடியரசு தினத்தை முன்னிட்டு இத்திரைப்படம் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு திரைப்பட வர்த்தகத்தில், ஓடிடி தளங்களின் தாக்கம் அதிகமாக உள்ளது என்பதால், இத்திரைப்படம் கடைசி நேரத்தில் ஓடிடி தளத்தில் வெளியானாலும் ஆச்சரியமில்லை என்றும் கூறப்படுகிறது.