‘ஜெய் பீம்’ : சர்ச்சைகளும் சாதித்தவையும்!

By கரு.முத்து

திரைப்படங்கள் வழியே முதல்வர்களைத் தேர்ந்தெடுக்கும் தங்கத் தமிழ்நாட்டில், திரைப்படங்களின் தாக்கம் எப்போதுமே சற்று அதிகம்தான். அதை மற்றுமொருமுறை நிரூபித்திருக்கிறது அண்மையில் ஓடிடி தளத்தில் வெளியான ‘ஜெய் பீம்’ திரைப்படம். சூர்யா தயாரித்து நடித்துள்ள இத்திரைப்படம், சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் வெவ்வெறு விதமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அவை, சமூகத்தில் சூடான விவாதப்பொருட்களாகவும் மாறியிருக்கின்றன. அவை குறித்து ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

குறவரா, இருளரா?

படத்தில் ராசாக்கண்ணுவை இருளர் இனத்தைச் சேர்ந்தவராகச் சித்தரித்திருக்கிறார்கள். நடிகர் சூர்யாவும் முதல்வரைச் சந்தித்து இருளர் இனமக்களின் மேம்பாட்டுக்காக ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கியிருக்கிறார். ஆனால், உண்மையில் ராசாக்கண்ணு பன்றிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர். இதை அவரது மனைவி பார்வதி, ராசாக்கண்ணுவின் அக்காள் மகன் சேகர் மற்றும் முதனை கிராம மக்கள் உறுதிசெய்திருக்கிறார்கள். ராசாக்கண்ணு விவகாரம் நடந்தபோது அந்தக் குடும்பத்தினர் பன்றிகளை வளர்த்துவந்தார்கள். அத்துடன் கூடை, முறம் பின்னுதல், அறுவடை வேலைக்குப் போவது என்ற மற்ற வேலைகளையும் செய்திருக்கிறார்கள்.

புறக்கணிக்கப்பட்ட போராளி

நடந்த சம்பவத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினரின் பங்கைப் படத்தில் காட்சிப்படுத்தியிருந்தாலும், ஆரம்பம் முதல் இறுதிவரை இந்த விவகாரத்தைக் கையிலெடுத்துப் போராடி, நீதிமன்றத்துக்கு அலைந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கச்செய்த முதனை கிராமத்தைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் தோழர் ஆர்.கோவிந்தனை இத்திரைப்படம் முன்னிலைப்படுத்தவில்லை என்பது ஒரு குற்றச்சாட்டு. இதுகுறித்து சமூக வலைதளங்களில் இயக்குநரைச் சாடி ஏராளமான பதிவுகள் எழுதப்படுகின்றன. கோவிந்தன், இந்த வழக்கு முடியும்வரை திருமணமே செய்துகொள்ளாமல் வழக்குக்காகவே தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர். 26 வயதில் ஆரம்பித்த போராட்டம் 39 வயதில்தான் முடிவுக்கு வந்திருக்கிறது. இவரின் இந்தச் சேவைக்காக, ஊர்மக்கள் தங்கள் ஊராட்சி மன்றத் தலைவராகவே பின்னர் இவரைத் தேர்ந்தெடுத்தார்கள்.

கம்மாபுரம் காவல் நிலையம்

இதுகுறித்து தோழர் கோவிந்தனிடம் பேசினோம்.

‘’கோபாலபுரத்தில் நகையையும் பணத்தையும் திருடிவிட்டார் என்று ராசாக்கண்ணுவைத் தேடி ஊருக்குள் வந்த போலீஸ்காரர்கள், ராசாக்கண்ணு குடும்பத்தினரை அலைக்கழித்து மிரட்டியபோதே, இந்த விவகாரத்தில் நான் தலையிட்டு போலீஸ்காரர்களை எச்சரித்தேன். அதற்குப் பிறகு காவல் நிலையத்திலிருந்து ராசாக்கண்ணு தப்பி ஓடிவிட்டார் என்று போலீஸ்காரர்கள் வந்து சொன்னதுமே, அவரது மனைவி பார்வதி பதறிப்போய் என்னிடம் வந்து சொன்னார். நானும் ஒன்றியச் செயலாளர் ராஜமோகனும் அன்று மாலையே உடனடியாகக் காவல் நிலையத்துக்குச் சென்று விசாரித்தோம்.

ஆனால் அவர்கள் நடந்துகொண்ட விதம், சொன்ன பதில் ஆகியவற்றால் எங்களுக்குச் சந்தேகம் வலுத்தது. மறுநாள் விருத்தாசலம், ஆர்டிஓ மற்றும் டிஎஸ்பி ஆகியோரைச் சந்தித்து மனு கொடுத்தபோது தொடங்கிய போராட்டம், 2006-ம் ஆண்டுவரை 13 ஆண்டுகள் இடைவிடாமல் தொடர்ந்தது. அதற்குள் எத்தனை மிரட்டல்கள், பேரங்கள், அன்புத்தொல்லைகள். ஆனால், எல்லாவற்றையும் அப்போது கட்சியின் மாவட்டச் செயலாளராக இருந்த, தற்போதைய மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆதரவோடு சமாளித்து நீதி கிடைக்கச் செய்தோம்.

சம்பந்தப்பட்டவர்களை உயர் நீதிமன்றம் அழைத்துச் செல்வதில்கூட பல இடையூறுகளைச் சந்தித்தோம். தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூர் சென்று ராசாக்கண்ணுவின் அக்கா ஆச்சி, அவரது மகன் குள்ளன் ஆகியோரை அழைத்துவந்தோம். வழக்கு முடியும்வரை பார்வதி உள்ளிட்டவர்களை எங்கள் பாதுகாப்பிலேயே வைத்திருந்தோம். மிரட்டல்கள் அதிகம் என்பதால் நான் திருமணமும் செய்துகொள்ளவில்லை” என்றார் கோவிந்தன். தன்னைக் குறித்துப் படம் பேசாததில் அவருக்கு பெரிய வருத்தமில்லை.

கோவிந்தன்

வழக்கறிஞரை அணுகியது யார்?

படத்தில், அறிவொளி திட்ட ஆசிரியை ஒருவர்தான் பார்வதியை வழக்கறிஞரிடம் அழைத்துச் சென்றதாகக் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதும் தவறு என்கிறார்கள். ‘’பார்வதி வந்து என்கிட்டதான் சொன்னாங்க. போலீஸ் ஸ்டேஷனுக்குத் தொடங்கி, விருத்தாசலம், கடலூருக்கெல்லாம் நாங்கதான் அழைச்சுக்கிட்டுப் போனோம். சந்துரு அய்யாகிட்ட போறதுக்கு கே.பி தோழர் தான் அவர்கிட்ட பேசி, அதுக்கான ஏற்பாடு செய்து கொடுத்தார். இதில அறிவொளி இயக்கத்துக்கோ, எந்த டீச்சருக்குமோ வேலையே இல்லை” என்கிறார் கோவிந்தன்.

வன்னிய சமூகத்தை அவமதிக்கிறதா?

வன்னிய சமூகத்தைத் திட்டமிட்டு இந்தப் படம் அவமானப்படுத்தியிருப்பதாக அடுத்து ஒரு சர்ச்சை அலையடிக்கிறது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட உதவி ஆய்வாளரின் பெயர் அந்தோணிசாமி. படத்தில் பெரும்பாலான பாத்திரங்களின் பெயர்கள் உண்மைப் பெயர்களாகவே வைக்கப்பட்டிருக்கும் நிலையில், உதவி ஆய்வாளரின் பெயர் குருமூர்த்தி என்று வைக்கப்பட்டிருக்கிறது. அப்பெயரும், ஆய்வாளரின் வீட்டில் வன்னியர் சங்கத்தின் அக்னிசட்டி படமிட்ட நாட்காட்டி மாட்டப்பட்டதும் வேண்டுமென்றே வன்னியர் சமுதாயத்தை அவமானப்படுத்துவதாக அச்சமூகத்தினர் கருதுகிறார்கள். வன்னியர் சங்கம் சார்பிலும், வன்னியர்கள் பலரின் வலைதளங்களிலும் கடுமையான கண்டனங்கள் தெரிவிக்கப்படுகின்றன.

கண்மணி குணசேகரன்

கோவிந்தனும் அச்சமூகத்தைச் சார்ந்தவர் என்பதால், அவரிடம் இதுகுறித்துப் பேசினோம். ’’படத்தை வேற எந்த விதத்திலும் குறை சொல்ல முடியாது. படக்குழுவினர் போற்றுதலுக்குரியவர்கள். அதேநேரத்தில் ஒரு சமூகத்தைத் தாக்குவதுபோல திட்டமிட்டு காட்சி அமைக்கப்பட்டிருப்பது தேவையற்றது. இப்படி ஒரு நல்ல படத்துக்கு அப்படிப்பட்ட காட்சிகள் வேண்டாம் என்பதுதான் என்னுடய கருத்து” என்றார்.

கண்மணி குணசேகரனின் வருத்தம்

வன்னியர்களை அவமானப்படுத்தியதான விவகாரத்தில், எழுத்தாளர் கண்மணி குணசேகரனுக்கும் கடுமையான மன உளைச்சல் ஏற்பட்டிருக்கிறது. விருத்தாசலம் பகுதியில் நடக்கும் கதை என்பதால், இப்பகுதி காட்சிகளுக்கு வட்டார மொழியில் வசனம் எழுதித்தருமாறு இயக்குநர் தா.செ.ஞானவேல் அவரிடம் கேட்டிருக்கிறார். ஸ்கிரிப்ட் பார்த்து வசனமும் எழுதிக்கொடுத்தார் கண்மணி.

மருத்துவர் ராமதாஸின் அன்புக்குரியவர் என்பதால், கண்மணியை அலைபேசியில் அழைக்கும் பாட்டாளிச் சொந்தங்கள் பலரும், ‘இப்படிப்பட்ட காட்சிகள் வைப்பதற்கு நீங்கள் எப்படி சம்மதித்தீர்கள்?’ என்று கண்டனம் தெரிவிக்கிறார்களாம். இதனால், தனது முகநூல் பக்கத்தில் இதுகுறித்து விளக்கம் தெரிவித்திருக்கிறார் கண்மணி குணசேகரன்.

அவரிடம் பேசியபோது, ‘’எனக்கு ஸ்கிரிப்ட் அனுப்பும்போது இப்படத்தின் பெயர் ‘எலி வேட்டை’ என்றுதான் இருந்தது. வட்டார மொழியில் வசனம் எழுதிக் கொடுத்ததோடு என் வேலை முடிந்துவிட்டது. அதற்காக ஐம்பதாயிரம் ரூபாய் பணமும் கொடுத்தார்கள். ‘ஜெய் பீம்’ என்று படத்தின் பெயர் மாறியதும், உள்ளே அக்னிசட்டி காலண்டர் வைக்கப்பட்டிருப்பதும் எனக்கு எப்படித் தெரியும்? ஆனால், என் சமூகத்தின் முன்னால் நான் குற்றவாளிபோல ஆகியிருக்கிறேன். நான் முகநூல் மூலம் விளக்கம் கொடுத்ததை அடுத்து, என்னைத் தொடர்புகொண்ட இயக்குநர் அக்காட்சியில் அந்தக் காலண்டரை மாற்றிவிடுவதாகச் சொன்னார். அதன்படி மாற்றியும் இருக்கிறார். அவருக்கு நன்றி” என்றார் அவர்.

அந்தக் காலண்டர்

காலண்டர் மாற்றத்திலும் சர்ச்சை!

அக்னிசட்டி காலண்டருக்குப் பதிலாக மகாலட்சுமி படம் போட்ட காலண்டர் வைக்கப்பட்டிருக்கிறது. அதிலும் சர்ச்சை கிளம்பியிருக்கிறது. “முதலில் சாதி, இப்போ மதமா? இந்து மதத்தை யார் வேண்டுமானாலும் கேவலப்படுத்தலாம், கேட்பாரில்லை” என்று சிலர் பதிவிட்டுவருகிறார்கள்.

மதமாற்றத்துக்கு சூர்யா ஆதரவு தருகிறாரா?

சப் இன்ஸ்பெக்டர் அந்தோணிசாமி பெயரை குருமூர்த்தி என மாற்றியதையும், எப்பொழுதும் நமச்சிவாய எனச் சொல்லிக்கொண்டிருக்கும் வழக்கறிஞரை ஒரு சமூகக் கோமாளி போலச் சித்தரித்திருப்பதையும் சுட்டிக்காட்டி, சூர்யா இந்து மதத்துக்கு எதிராகவும், மதமாற்ற சக்திகளுக்கு ஆதரவாகவும் இருப்பதாகச் சிலர் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார்கள். அதற்குச் சில உதாரணங்களையும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

‘சூரரைப் போற்று’ படக் கதையின் உண்மை நாயகனான கோபிநாத், தெய்வ பக்தியுள்ள பிராமண சமுதாயத்தைச் சேர்ந்தவர். ஆனால், படத்தில் அவரை பெரியாரியவாதியாக, கடவுள் மறுப்பாளராகக் காட்டியிருந்தார்கள். ‘ஜெய் பீம்’ திரைப்படத்தின் இறுதியில், படக்குழு நன்றி சொல்லியிருக்கும் பெயர்கள் அனைத்தும் கிறிஸ்தவப் பெயர்களாக வருவதையும், முதல்வர் மு.க.ஸ்டாலினை சூர்யா சந்தித்தபோது அம்மதத்தைச் சேர்ந்த பெரியவர்கள் இருந்ததையும் சுட்டிக்காட்டுகிறார்கள். ‘இந்துக்களை மதம் மாற்றிக்கொண்டிருப்பவர்களுடன் கைகோத்து சூர்யா செயல்படுகிறாரோ?’ என்றும் சிலர் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.

படம் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள்

முதல்வரே படம் பார்த்து நெகிழ்ந்திருக்கிறார். அதன் விளைவாகப் பழங்குடியின மக்களுக்குப் பட்டா வழங்கியது உட்பட பல நல்ல விஷயங்கள் நடக்கத் தொடங்கியிருக்கின்றன. முதனையில் உள்ள பார்வதியின் வீட்டுக்கு வட்டாட்சியர் வந்து விசாரித்துச் சென்றிருக்கிறார். பழங்குடிச் சமூக மக்களுக்கு ஒரு நல்ல விடியல் ஏற்படும் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது. முதனை கிராமமும் சமூகத்தின் கண்ணில் பட்டிருக்கிறது. கோயில் அன்னதானம் குறித்த அஸ்வினி என்ற நரிக்குறவர் இனப்பெண்ணின் மனக்குமுறலுக்கு மருந்தாக, அறநிலையத் துறை அமைச்சருடன் சமபந்தி போஜனமும், முதல்வரே அவரது வீட்டுக்குச் சென்றதும் நடந்திருக்கிறது.

மருத்துவர் சிவராமன் உட்பட பல முக்கிய ஆளுமைகளிடம் ‘ஜெய் பீம்’ திரைப்படம் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதை, அவர்களின் பதிவுகள் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. அப்படி இப்படம், ஐஏஎஸ் அதிகாரி ஞானராஜசேகரனிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதை அவரது பதிவு மூலம் உணர முடிகிறது. கேரளத்தின் திருச்சூர் மாவட்டத்தில் அவர் ஆட்சியராகப் பணிபுரிந்தபோது, சிம்னி அணை சம்பந்தப்பட்ட விவகாரத்தில் பழங்குடி மக்களுக்கு மாற்று இடம் வழங்க எவ்வளவு தூரம் கஷ்டப்பட வேண்டியிருந்தது என்பதை மிக விரிவாக அவர் பதிவிட்டிருக்கிறார்.

முதனையில் உள்ள பார்வதியின் வீடு

நினைவுகூரப்படும் பழைய சம்பவங்கள்

தமிழ்நாட்டில், இதற்கு முன்பு இதுபோன்று நடந்துள்ள பல்வேறு சம்பவங்கள் இப்போது நினைவுகூரப்படுகின்றன. வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் 19 ஆண்டு காலப் போராட்டம் நடைபெற்றது குறித்தும், அத்தியூர் விஜயா, முத்தாண்டிகுப்பம் வசந்தா, சிதம்பரம் பத்மினி, சென்னை ரீட்டா மேரி என்று காவல் துறையினரின் அத்துமீறலுக்குள்ளான பலரது வேதனைகளைப் பற்றியும் சமூக ஊடகங்களில் மீண்டும் பெரிதாக விவாதிக்கப்படுகின்றன.

முதனையில் யார் இருக்கிறார்கள்? எப்படி இருக்கிறார்கள்?

ராசாக்கண்ணு வழக்கு முடியும்வரை முதனையில் அரசு அவருக்கு அளித்த இடத்தில்தான் பார்வதி வசித்துவந்தார். 3 ஆண் பிள்ளைகளும், ஒரு பெண் பிள்ளையும் இருந்தார்கள். அவர்களில் அப்போதே இளையமகன் உடல்நலம் சரியில்லாமல் இறந்துபோய்விட்டார். மற்ற 2 மகன்களும் திருமணம் செய்துகொண்டு வெளியூர்களில் வசிக்கிறார்கள். அவர்களில் மூத்தவர் உடல்நல பாதிப்புக்குள்ளாகியிருக்கிறார். மகள் சின்னப்பொண்ணுவுக்கும் திருமணம் ஆகிவிட்டது. அவர் சென்னை, முகலிவாக்கத்தில் வசித்துக்கொண்டு கட்டிட கான்கிரீட் வேலைகளுக்கு போய்க்கொண்டிருக்கிறார். தாய் பார்வதி தனியே இருப்பதால், அவரை அழைத்துச் சென்று தங்க வைத்திருக்கிறார். சில மாதங்களுக்கு முன்புவரை பார்வதியும் வேலைக்குப் போய் வந்துள்ளார்.

பார்வதி

பார்வதியுடன் அலைபேசி வழியாகப் பேசினோம். “அந்த ஊரே வேண்டாம்னுட்டு பொண்ணு சொன்னிச்சு. கேஸு முடிஞ்சபொறவு பொண்ணோடயே வந்துட்டன். மெட்ராஸ்ல மொயலிவாக்கத்துல இருக்கன். அப்ப நடந்தது நடந்துப்போச்சு. அதப் பத்தி இப்ப எதுவும் பேச வேண்டாம்னு என் மருமகன் சொல்லிடுச்சு. என்னை அவங்கதான் பார்த்துக்கிறாங்க. அதனால் எதுவும் கேட்காதீங்க” என்று சொல்லி முடித்துக்கொண்டார்.

முதனையில் இருக்கும் பார்வதியின் வீட்டுக்குச் சென்றேன். ராசாக்கண்ணுவின் அக்காள் மகன் சேகர் அங்கு வசிக்கிறார். வீட்டின் அருகே ஓடை பிரவாகமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தண்ணீர் அதிகமாகும்போது வீட்டுக்குள்ளும் தண்ணீர் புகுந்துவிடுமாம். பாம்புகள் உள்ளிட்ட சகல ஜீவராசிகளும் வருமாம். மின்சார இணைப்பு இருக்கிறது. குடிநீர் உள்ளிட்ட பிற வசதிகள் எதுவும் இல்லை.

முதனை கிராமம்

சேகர்

’’ஒரு குடும்பம்தான் என்றாலும் பதினைஞ்சி டிக்கெட் இருக்கோம். இந்தக் குடிசையில எந்த வசதியும் இல்லாம இவ்வளவு பேரு இருக்கறதுக்கு கஷ்டமா இருக்கு. அம்மி கொத்தறது, கிரைண்டர் ரிப்பேர், பைப் லைன் போடறது இப்படி எந்த வேலை கிடைச்சாலும் செஞ்சு குடும்பத்தைக் காப்பாத்தறேன். புள்ள, மருமவளெல்லாம் 10, 12-ன்னு படிச்சிருக்கு. அதுங்களுக்கு ஏதாவது வேலை போட்டுக் கொடுத்தாக்கூட போதும். அதோட இந்த இடத்தில வாழ முடியலங்க. எப்ப தண்ணி வருமோ, பாம்பு வருமோன்னு பயத்தோடவே வாழறோம். வேற எதாவது எடத்துல ஒரு வீடு கட்டிக்கொடுத்தா போதும். அதுல எங்க காலத்தை கழிச்சுடுவோம்” என்கிறார் சேகர்.

’’சாதிச் சான்று வாங்கறதே பெருசாயிருக்கு, அதில வேலை எங்க தரப்போறாங்க” என்று வேதனையுடன் சொல்கிறார் சேகரின் மருமகள் மீனாட்சி. ‘’இதுவரைக்கும் பத்துத் தடவையாவது தாசில்தார் ஆபீஸுக்கு அலைஞ்சிருக்கோம். இன்னும் கம்யூனிட்டி சர்ட்டிபிகேட் தர மாட்டறாங்க. இந்து குறவர்னு தரணும். ஆனா இந்து பறையர், இந்து இருளர் அப்படின்னு பல மாதிரி தர்றாங்க. சில ஊர்கள்ல கம்யூனிட்டி சர்ட்டிபிகேட்டே தர மாட்டறாங்க. முதல்வர் ஐயா மொதல்ல இதுக்கு ஒரு வழி செய்யணும்” என்கிறார் மீனாட்சி.

மீனாட்சி

சம்பவம் நடந்தபோது, ஈஸ்வரன் கோயில் குளக்கரையில் 4 குடும்பங்கள் இருந்தன. ராசாக்கண்ணு கொலைக்குப் பிறகு அந்த குடும்பங்கள் ஒவ்வொன்றாக ஊரைக் காலிசெய்துவிட்டு எங்கெங்கோ சென்றுவிட்டனர். பார்வதியின் பெயரில் பட்டா இருப்பதால் அங்கு மட்டும் சேகர் வாழ்கிறார்.

குறவர் உள்ளிட்ட பழங்குடியினர் பெரும்பாலானோர் வீடும் ஊரும் அற்ற நாடோடிகளாகவே வாழ்கிறார்கள். ‘ஜெய் பீம்’ படம் பழங்குடியினரின் வாழ்க்கை மாற்றத்துக்கான சிந்தனையைத் தூண்டியிருக்கிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாற்றத்துக்கான நடவடிக்கைகளைத் தொடரட்டும். அவர்களுக்கான விடியலைத் தரட்டும்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE