கதாபாத்திரமாகக் கரைந்துபோதல் அல்லது கதாபாத்திரமாகவே வாழ்வது என்கிற பாராட்டுதலுக்கு, ‘ஜெய் பீம்’ படத்தின் மூலம் சமீபத்திய உதாரணம் ஆகியிருக்கிறார் லிஜோமோள் ஜோஸ்.
சசி இயக்கிய ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான லிஜோமோள் ஜோஸ், அதற்கு முன்பே ஃபகத் பாசில் நடித்த ‘மகேஷிண்டே பிரதிகாரம்’ மலையாளப் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர். காமதேனு மின்னிதழுக்காக அவர் அளித்த தனிப் பேட்டி இது.
‘ஜெய் பீம்’ வாய்ப்பு எப்படி அமைந்தது?
‘சிவப்பு மஞ்சள் பச்சை’க்குப் பிறகு, அக்காள் அல்லது தங்கை கேரக்டர்கள் வந்தன. அவற்றை ஏற்க விரும்பவில்லை. அப்போதுதான் ஞானவேல் சார் தொடர்புகொண்டு, “ஆடிசனுக்கு வரமுடியுமா? இது ஃபீமேல் லீட் கேரக்டர். சூர்யா சார் இம்பார்ட்டன்ட் ரோல் செய்கிறார்” என்றார். உடனே கிளம்பி வந்தேன். ஒரு காட்சியைக் கொடுத்து நடித்துக்காட்டும்படி சொன்னார். அவர் சொன்னபடியே செய்தேன். அவருக்குப் பிடித்துவிட்டது. அதன்பிறகே இருளர் பழங்குடி மக்கள் பற்றிச் சொன்னார். அதற்கு முன்பு இருளர் மக்களைப் பற்றிக் கேள்விப்பட்டதுகூட இல்லை. 1993-ல் பார்வதி - ராசாக்கண்ணு தம்பதிக்கு நடந்த சம்பவம் பற்றி சொல்லிவிட்டு, அது எப்படி திரைக்கதையாகியிருக்கிறது என்று முழு ஸ்கிரிப்டையும் எனக்குச் சொன்னார். கேட்கும்போதே அதனோடு கனெக்ட் ஆகி பலமுறை அழுதுவிட்டேன். அப்போதே, இது நமது சினிமா வாழ்க்கையில் முக்கியமான படமாக இருக்கப்போகிறது என்று நினைத்துக் கொண்டேன்.
செங்கேணி கதாபாத்திரத்துக்காக எப்படி உங்களைத் தயாரித்துக்கொண்டீர்கள்?
கதாபாத்திரமாக நான் மாறியிருக்கிறேன் என்று எல்லோரும் பாராட்டுகிறார்கள். ஆனால், அதற்கான உழைப்பு என்னுடையது மட்டுமே அல்ல; அந்தப் பெருமையை நான் மட்டுமே சொந்தம் கொண்டாட முடியாது. முதலில் இயக்குநர் ஞானவேல் சார் பற்றி சொல்லவேண்டும். எங்களுக்கு சூரி என்கிற பயிற்சியாளரை ஏற்பாடு செய்தார். என்னையும் மணிகண்டன் அண்ணாவையும் இருளர் மக்கள் வசிக்கும் சில கிராமங்களுக்கு அழைத்துச் சென்று அவர்களுடன் பேச வைத்தார். 2 நாட்கள் அவர்களுடைய குடிசைகளிலேயே தங்கினோம். பல நாட்கள் அவர்களுடன் வேட்டைக்கும் வயல்வேலைக்கும் சென்றோம்.
சூரி சார், “காலில் செருப்புப் போடவேண்டாம்” என்றார். படப்பிடிப்பு இல்லாத நேரங்களிலும் மணிகண்டனை நான் மாமா என்றுதான் கூப்பிடவேண்டும் என்று சொல்லிவிட்டார். எங்களுடைய மகளாக நடித்த அல்லியிடம் எங்களை, ‘அப்பா, அம்மா’ என்றுதான் எப்போதும் கூப்பிட வேண்டும் என்று சொல்லிவிட்டார். முதல்கட்டப் படப்பிடிப்புக்குப் பிறகு இடைவெளி விழுந்துவிட்டது. நான் ஊருக்குப் போய்விட்டேன். அப்போது ஞானவேல் சார் தினசரி எனக்கு போன் செய்து, “வசனங்களை மனப்பாடம் செய்துகொண்டே இருக்கணும். வீட்டில் இருப்பவர்களிடம் தமிழிலேயே பேசணும். அப்போதான் எப்போது படப்பிடிப்பு தொடங்கினாலும் செங்கேணியாக இருக்கமுடியும்” என்று சொன்னார். நானும் வீட்டில் அப்படித்தான் இருந்தேன்.
நான் தமிழில் ஒழுங்காகப் பேசுவதற்கு மணிகண்டன் அண்ணாவும் நிறைய உதவி செய்தார். அதேபோல் அந்த மக்களும் வட்டார வழக்கில் வார்த்தைகளை எப்படிப் பேசவேண்டும் என்று சொல்லிக்கொடுத்தார்கள். டப்பிங்கில் மட்டும் எனக்கு 15 நாட்கள் எடுத்தது. இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். படப்பிடிப்புக்கு முன் உடல் எடையைக் குறைத்து ஒல்லியாகச் சொன்னதுடன் ஃபிட்டாக வைத்துகொள்ளச் சொன்னார்கள்.
பயிற்சி நாட்கள் மற்றும் படப்பிடிப்பு நாட்களில் முதல் ஷெட்யூலிலேயே உடம்பு கறுத்துவிட்டது. என்றாலும் தேவையான அளவுக்கு ‘டல்’ மேக்கப் போட்டு, லுக் டெஸ்ட் எடுத்து அதை சரிபார்த்துக்கொண்டேதான் தினசரி ஷூட்டிங் நடக்கும். அழும் காட்சிகளில் உண்மையான செங்கேணி பட்ட கஷ்டங்களை நினைத்துக்கொள்வேன். கிளிசரின் சுத்தமாக தேவைப்படவில்லை. முழுப்படமும் முடிந்து பார்த்தபோது, என்னைவிட 100 மடங்கு அதிகமாக டெடிக்கேஷன் கொடுத்திருக்கிறார் மணிகண்டன் அண்ணா. சித்ரவதைக் காட்சிகளுக்குப் பிறகு நிஜமாலுமே அவர் ஹாஸ்பிடல் போய் ட்ரீட்மென்ட் எடுத்திருக்கிறார்.
சூர்யாவுடன் இணைந்து நடித்த காட்சிகளில் அனுபவம் எப்படியிருந்தது?
எனக்கென்று இல்லை... படக்குழுவில் இருந்த ஒவ்வொருவருக்கும் அவ்வளவு ‘கேர்’ கொடுத்தார் சூர்யா சார். ஸ்பாட்டில் நான் நடிப்பதற்கு எந்த இடையூறும் இருக்கக் கூடாது என்பதற்காக வேடிக்கை பார்ப்பவர்களை அப்புறப்படுத்துவார். அல்லி என்கிற அந்தச் சின்னப் பெண்ணை தன்னுடைய சொந்த மகளைப் போல் அவ்வளவு அன்புடன் பார்த்துக்கொண்டார். டப்பிங் சமயத்தில் வந்து, “இந்தப் படத்தின் ஆன்மாவே நீங்களும் மணிகண்டனும்தான்” என்று சொல்லி எங்களை மோட்டிவேட் செய்தார். ஆனால், அவர் இந்தப் படத்தில் இருந்ததால்தான் இன்று வெளியுலகம் பழங்குடி மக்களின் கஷ்டங்களை அறிந்துகொண்டிருக்கிறது.
மூணாறில் ராசாக்கண்ணுவை தேடிச் செல்லும் காட்சிகளைப் படம்பிடித்தபோது எனது நடிப்பை ரொம்பவே பாராட்டினார் சூர்யா. பிறகு மதுரையில் படப்பிடிப்பு நடந்தபோது, “இந்த ஊர் ஸ்பெஷல் ஜிகர்தண்டா சாப்பிட்டிருக்கிறீர்களா?” என்று என்னிடம் கேட்டார். நான், “இல்லை” என்றதும் மொத்த படக்குழுவுக்கும் தன்னுடைய சொந்த செலவில் ஜிகர்தண்டா வங்கிக்கொடுத்தார். இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். படத்தைப் பார்த்துவிட்டு, ஜோதிகா மேடம் என்னுடைய நடிப்பைக் குறிப்பிட்டுப் பாராட்டினார். இதெல்லாம் மறக்கமுடியாது. ‘ஜெய் பீம்’ வெளியான பிறகு, பழங்குடி மக்களுடைய நலன்மீது அரசின் கவனம் திரும்பியிருக்கிறது என்று கேள்விப்பட்டபோது, நாங்கள் எல்லோருமே மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். அதுதான் இந்தப் படத்தில் நடித்ததற்கான விருது.
அடுத்து?
செங்கேணிபோல் இன்னொரு கேரக்டர் தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, மலையாளத்திலும் நடிக்க மாட்டேன். வேறு வேறு களங்களில் நல்ல கதாபாத்திரங்களுக்காக காத்திருக்கிறேன். இப்போதைக்கு ஒரு 6 மாத காலத்துக்கு படப்பிடிப்புக்கு விடுமுறை எடுத்துள்ளேன். அக்டோபர் 5-ம் தேதி எனக்கு திருமணம் நடந்தது. காதல் திருமணம்தான். ’ஜெய் பீம்’ எனது திருமணப் பரிசு என்று எல்லோரும் பாராட்டுகிறார்கள். மனம் நிறைந்துபோய் இருக்கிறது.
அட்டை மற்றும் படங்கள் உதவி: தீரன் நரேந்திரன்