‘டாக்டர்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சிவகார்த்திகேயன் - பிரியங்கா மோகன் மீண்டும் இணைந்து நடிக்கும் அடுத்த திரைப்படம் ‘டான்’. இத்திரைப்படத்தை அட்லியிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த சிபி சக்ரவர்த்தி இயக்குகிறார். எஸ்.ஜே.சூர்யா, சிவாங்கி, ஆர்.ஜே.விஜய், முனிஷ்காந்த், பால சரவணன், காளி வெங்கட் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
‘டான்’ திரைப்படத்தை அடுத்து சிவகார்த்திகேயன், தெலுங்கு திரைப்பட இயக்குநரான அனுதீப் கே.வி-யின் இயக்கத்தில் தெலுங்கு - தமிழ் என இருமொழிகளில் உருவாகவிருக்கும் திரைப்படத்தில் நடிக்கவிருக்கிறார். இத்திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க, நடிகை ராஷ்மிகா மந்தனாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது எனத் தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது ராஷ்மிகா மந்தனா, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் உருவாகிவரும் ‘புஷ்பா’ திரைப்படத்தில் ஸ்ரீ வள்ளி என்ற கிராமத்துப் பெண் கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.